எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.Thursday, July 31, 2008

வனுவாட்டு சுற்றுலா - பகுதி7 -அதிக வசதியுள்ள 4 நட்சத்திர விடுதிகள்

வனுவாட்டில் உள்ள விடுதிகளில் அதிக வசதியுள்ள 4 நட்சத்திர விடுதிகளாக (Luxury Accommodation Hotels) Iririki Island Resort ,Le Lagon Resort,Le Meridien ஆகியவை போட் விலாவில் இருக்கிறது. படத்தில் தெரியும் சிறு தீவில் உள்ள நிலப்பரப்பில் அமைந்திருப்பது Iririki Island Resort.

இதற்கு இலவசப்படகில் தான் செல்லவேண்டும்.படத்தில் தெரிவது மெரிடியன் விடுதிகள்(Le Meridien)ன் ஒருபகுதி


நான் தங்கியிருந்த விடுதி 75 ஏக்கர் நிலப்பரப்பைக்கொண்டதும் பல பயன் தரும் மரங்கள் நிறைந்ததும், பசுபிக் சமுத்திரத்துடன் இணையும் ஆழம் குறைந்த ஏரியான (Lagoon) எரகொரின் (Erakor) ஒரு பக்கத்தில் அமைந்ததுமான Le Lagon Resort ஆகும். 140 விருந்தினர் தங்கும் அறைகள் உடைய இந்த விடுதியில் மேலதிகமாக 4 அறைகள் தண்ணீரின் மேலே அமைந்திருக்கின்றன. யப்பான் நாட்டினைச் சேர்ந்த ஒருவர் இந்த விடுதியின் உரிமையாளர்.

Monday, July 28, 2008

வனுவாட்டு சுற்றுலா - பகுதி6 மேல்(MELE ) நீர்வீழ்ச்சி


போட்விலாவில் இருந்து 20,30 நிமிடங்களுக்கு மேல் (MELE) என்ற கிராமத்துக்குச் செல்லலாம். அங்கே உள்ள நீர்வீழ்ச்சிக்கு[MELE CASCADES]வனுவாட்டுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் விரும்பிச் செல்வார்கள். வழிகாட்டியின் உதவியுடன், மரவள்ளித்தோட்டம், தென்னைகள் ,குரோட்டன் செடிகளுக்கிடையிலே நடந்து(கிட்டத்தட்ட 15,20 நிமிடங்கள்) நீர்வீழ்ச்சிக்கு செல்லவேண்டும். பல நீர்வீழ்ச்சிகள் உள்ளது. நீர்வீழ்ச்சியில் குளிக்கலாம். சில இடங்களில் பெரிய வழுக்கக்கூடிய கற்களின் மேல் அவதானமாகச் சென்று நீர்வீழ்ச்சிக்கு செல்லவேண்டும். அச்சமயத்தில் கூட வரும் வழிகாட்டி கற்களின் மேலே ஏற உதவி செய்வார்.
நடந்து சென்று ஒரு உயரமான இடத்தை அடைந்தோம். அவ்விடத்தில் இருந்து பார்க்கும் போது கடலினுள் உள்ள ஒரு தீவு ஒன்று தெரிந்தது. கிழே உள்ள படத்தில் தெரியும் இத்தீவுதான் HIDEAWAY ISLAND.உலகில் கடலுக்கடியில் அமைக்கப்பட்ட ஒரே ஒரு தபால் நிலையம்(The world's first (and only) underwater post office )இத்தீவில் உள்ளது. Efate தீவுக்கு மிக அருகில் உள்ள இத்தீவில் உள்ள இத்தபால் நிலையத்துக்கு நீச்சல் தெரிந்தவர்கள் நீருக்குள் நீந்தி நீர் உட்புகமுடியாத தபால்களினை(waterproof postcards) இத்தபால் நிலையத்தினுடாக அனுப்பலாம்.

இத்தீவினைப் பார்த்தபின்பு நீர்வீழ்ச்சியை நோக்கி தொடர்ந்து மரம் செடிகளினூடாக நடந்தோம்.
சில நிமிடப் பயணங்களின் பின் நீர்வீழ்ச்சிகளை அடைந்தோம்.நான் 3 நீர் வீழ்ச்சிகளில் குளித்தேன். அதில் ஒரு நீர் வீழ்ச்சியில் மிகவும் சிறிய மீன்கள் இருந்தன.


நீர்வீழ்ச்சியில் குளித்தவுடன் மீண்டும் திரும்பி நடந்து பயணம் ஆரம்பித்த இடத்துக்கு அருகில் உள்ள சிறு கொட்டிலை அடைந்தோம். அங்கே பெரிய தட்டில், வெட்டிய பழங்களினை வாழை இலையினால் மூடி வைத்திருந்தார்கள். குளிர்பானமும் குடிக்கத்தந்தார்கள். தோடம்பழ, மாம்பழக் குளிர்பானங்கள் (அவுஸ்திரெலியா, இலங்கைக்குளிர் பானங்களினை விட ) வித்தியாசமான உருசியுடன் சுவை கூடியதாக இருந்தன.பழங்களும் உருசியாக இருந்தன. ஆனால் அக்கொட்டிலில் இருக்கும் போது பறந்த ஈக்களின் தொல்லைதான் தாங்கமுடியாமல் இருந்தது. வனுவாட்டுக்கு செல்லும் பயணிகளுக்கு அவுஸ்திரெலியா அரசாங்கம் மலேரியாத்தடுப்பு ஊசி போட்டுக்கொண்டு செல்லச் சொல்லியிருந்தார்கள். நான் மலேரியா குளிசை மட்டும் தான் 2 நாள் உபயோகித்தேன். பிறகு உபயோகிக்கவில்லை. ஆனால் நான் வனுவாட்டில் ஒரு நுளம்பினையும் காணவில்லை.

Thursday, July 17, 2008

வனுவாட்டு சுற்றுலா - பகுதி5 - எரகொர் கிராமம்(Erakor village)

போட்விலா நகர்ப்பகுதியில் இருந்து 15 நிமிடங்கள் பிரயாணம் செய்தால் எரகொர்(Erakor village) கிராமம் வரும். அக்கிராமத்தில் Namo Nana Kaljarel Vilij என்ற இடத்திற்கு சென்றால் 2000ம் வருடங்களுக்கு முன்பு இருந்த கற்கால அனுபவத்துக்கு செல்லலாம். அக்காலத்தில் மிருகங்களுக்கு வைக்கப்படுகிற பொறி, ஆதிகாலத்து முலிகைகள் தயாரிப்பது, பழையகாலத்து முறையில் உணவினை 5 வருடங்களுக்கு கெடாமல் பாதுகாப்பது,பழையகாலத்துப் பாய்கள், கூடைகள் பின்னுவது போன்றவற்றையும் காணலாம். அக்காலத்தில் எவ்வாறு தீ மூட்டினார்கள் என்பதினைக் கீழே உள்ள படத்தில் காணலாம்.

ஒலைகளினால் பாய்கள், உடைகள் செய்வதினை இங்கே காணலாம். இங்குள்ளவர்களும் இவ்வுடைகள் அணிந்தே காட்சியளித்தனர்.

மிருகங்களினைப்பிடிப்பதற்கு உபயோகிக்கும் பொறி.

உணவுகள் பழுதடையாமல் இருப்பதற்கு வாழை இலையில் உணவினை வைத்து, வேறு சில வழிகளையும் உபயோகித்து நிலத்தின் கீழ் புதைத்து 5 வருடங்களின் பின்பும் உணவினைக்கெடாமல் பாதுகாக்கும் முறை.

மிருகங்களினைத்தாக்குவதற்கு உரத்த குரலில் கத்திக்கொண்டு போய் தாக்குவார்கள். சத்தம் கேட்டு விலங்குகள் பயப்படும் என்பதினால் உடையில் மணிகள் அணிந்து ஒடித்தாக்குவார்கள்.

உரத்த குரலில் பாடல்கள் பாடிக்கொண்டு தாக்குவது இவர்களின் வழக்கம்.

அதிகாலத்தில் மனிதமாமிசம் சாப்பிடும் வழக்கம் இங்கே இருந்தது. படிப்படியாகக்குறைந்து 1969ம் ஆண்டு வரை சில இடங்களில் இந்தப்பழக்கம் இருந்தது. தாக்க வரும் மனிதர்களின் நெற்றியினை ஒரே அடியில் பிளப்பார்கள். படத்தில் உள்ளவர் வைத்திருக்கும் அயூதத்தினால் தான் மனிதர்களினை அடிப்பார்கள். அயூதத்தின் ஒவ்வொரு பகுதியும் மனிதனின் வெவ்வேறு பாகத்தைத்( நெற்றி, தோள்பட்டை) தாக்குவதற்கு பயன்படுத்தப்படும்.

ஆதிகாலத்தில் உணவினை சூடாக்கும் முறையினையும் காண்பித்தார்கள்(Making traditional ground ovens(Hungi~Maori)). பிறகு ஒரு கொட்டிலில் எங்களை இருக்கவிட்டு, குடிப்பதற்கு பழக்குளிர்பானமும், உண்ண பழங்களும் தந்தார்கள். நாங்கள் உண்ணும் போது, தற்கால கிற்றரினை ஒருவர் இசை மீட்ட, வேறு சிலர் மூங்கில் தடிகளையும், பழைய போத்தல்களையும் உபயோகித்து வாத்தியங்களாக வாசிக்க, அவர்கள் உரத்த குரலில் அவர்களது மொழிப்பாடல்களினைப் பாடினார்கள்.

Monday, July 14, 2008

வனுவாட்டு சுற்றுலா - பகுதி4 - இரகசியமான தோட்டம்

போட்விலாவில் இருந்து சில நிமிடங்களில் இரகசியமான தோட்டத்துக்குச்(THE SECRET GARDEN)செல்லலாம்.இங்கே வனு-அற்றில் உள்ள ஊர்வன பறவைகளினைப் பார்க்கலாம். வனுவாட்டு மக்களின் 100 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மூதாதையர்கள் பற்றிய பலதகவல்களினை அறியலாம்.


இங்கு வனுவாட்டு பறவைகள், வாத்துக்கள், கிளிகள், பாம்புகள், மிகவும் அரிதான ஊர்வன, ஆமை போன்றவையுடன் தேங்காய் நண்டினை( Coconut Crabs)யும் காணலாம். பெரிய மரப்பொந்துக்குள் வாழும் இந்த நண்டு தென்னை மரத்தில் ஏறி தேங்காயினை சாப்பிடுவதினால் தேங்காய் நண்டு என அழைக்கப்படும். தனது பற்களால் தேங்காய்ச் சிரட்டையினை உடைத்து தேங்காயினை உண்ணும். வனுவாட்டு மக்களில் பலர் இந்த தேங்காய் நண்டினை விரும்பிச் சாப்பிடுவார்கள். சாப்பிட நல்ல உருசியானது என்று வனுவாட்டில் சந்தித்தவர்கள் என்னிடம் சொன்னார்கள்.
இந்த தேங்காய் நண்டினை படத்தில் தெரிவது போல நண்டின் முதுகுப்புறத்தில் தூக்கவேண்டும். இல்லையேல் கடித்துவிடும்.


இந்தத் தோட்டத்தில் 100 வருடங்களுக்கு முன்பிருந்த மூதாதையர்களின் கதைகளினை வாசிக்கக்கூடியதாக இருந்தது. அந்தக்காலத்தில் கிராமத்தலைவர் வாழ்ந்த வீட்டினையும்(படத்தில் உள்ள கொட்டில் வீடு) இந்தத்தோட்டத்தில் காணலாம். அந்தக்காலத்தில் கிராமத்தலைவர்களுக்கு 5 மனைவிகள் இருந்தார்கள். திருமணத்தின் போது மனைவியின் முன் மேற்பற்கள் இரண்டும் உடைக்கப்படும்.

இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா இராணுவம் வனுவாட்டில் இருந்த கதைகளினையும் இத்தோட்டத்தில் காணலாம். மிகவும் அருமையாகக் காணக்கூடிய மரங்களினையும் இங்கே காணலாம். காவாத் தோட்டத்தினையும் இங்கே காணலாம். ஏற்கனவே குறிப்பிட்டது போல(பகுதி 2) காவா(Kava),மரத்தின் வேரினைக்காச்சி அதில் வரும் சாற்றினைக்கொண்டு தயாரிக்கப்படுகிறது.

மேலே இணைத்த படத்தில் உள்ள தேங்காய் நண்டினைத்தூக்கி வைத்திருக்கும் சிறுவனே அப்பொழுது இத்தோட்டத்தினைப்பற்றி பல செய்திகள் சொல்லி விளங்கப்படுத்தினார். இச்சிறுவன் அங்குள்ள மக்கள் வரையும் கோலத்தினை கையினைத்தூக்காமல் தொடர்ந்து வரைந்து காட்டினார்.

வனுவாட்டில் சுற்றுலா இடங்களைக் காண்பிக்கும் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் 5ம் வகுப்பு வரை படித்திருப்பார்கள். ஆங்கில, பிரெஞ்சு மொழியில் படித்த இவர்கள் நன்றாக ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகள் வாசிக்கவும், பேசவும் தெரிந்துள்ளார்கள்.

Thursday, July 10, 2008

என்னைப்பற்றி ஒரு சிறு அறிமுகம்.

நான் ஈழத்தில் பிறந்து தற்பொழுது சிட்னியில் வசிக்கிறேன்.
யாழ் இணையத்தளத்தில், நான் பயணித்த வனுவாட்டு என்ற அழகிய நாடு பற்றி புகைப்படங்களுடன் 2006ல் இருந்து 2007 வரை பதிவுகளை எழுதி வந்தேன். நண்பர் கானாபிரபா அவர்கள் என்னை இப்பதிவினை தனியான வலைப்பதிவில் இட்டால் நன்றாக இருக்கும் என்று ஆலோசனை சொன்னார். யாழ்கள உறவு சின்னக்குட்டி அவர்கள் தமிழ்மணத்திலும் எனது பதிவுகள் வரவேண்டும் என்றார். 2006ல் வலைப்பதிவினை ஆரம்பித்தாலும் தொடர்ந்து பதிவுகள் நான் எழுதவில்லை. யாழ் இணையத்தளத்தில் மட்டுமே எழுதினேன். திடிரென்று யாழ் இணையத்தளத்தில் நான் எழுதிய பயணக்கட்டுரைகளை எனது வலைப்பதிவில் இடலாம் என்று எனக்கு யோசனை தோன்றியது.இதுவரை நான் வனுவாட்டு சுற்றுலா பற்றி 3 பதிவுகளை இட்டுள்ளேன். தமிழ்மணத்தில் எனது பதிவினை வருவதற்கு ஆலோசனை, உதவிகள் செய்த தூயா அவர்களுக்கும் நன்றி.

Wednesday, July 09, 2008

வனுவாட்டு(Vanuatu) சுற்றுலா - பகுதி3 - பிரயாணம்

வனுவாட்டில் உள்ள ஒரே ஒரு சர்வதேச விமான நிலையம் போட் விலா இருக்கிறது. பயணம் செய்பவர்கள் வனு-அற்று விமான நிலையத்தில் இருந்து நடந்து போய் விமானத்தில் ஏற வேண்டும்.போட் விலாவில் உள்ள வனுவாட்டு சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் இறங்கும் போது அவர்களை வரவேற்று 'வரவேற்பு கீதங்கள்' பாடி இசைக்கருவிகளினை மீட்டி வரவேற்பார்கள். விமான நிலையத்தில் இருந்து குளிரூட்டப்பட்ட சொகுசுப் பேருந்தில் ஏற்றி விடுதியிற்கு கூட்டிச்செல்வார்கள். நான் இருந்த விடுதியிற்கு தங்க வரும் பயணிகளுக்கு, அவர்களது இனிமையான குளிர் பானத்தினைக் குடிக்கத்தந்து 'வரவேற்பு கீதங்கள்' பாடி வரவேற்பார்கள். சில சுற்றுலா இடங்களுக்குச் செல்லும் போதும் வரவேற்பு கீதங்கள் பாடுவார்கள். படத்தில் இருப்பது விமான நிலையத்தில் இறங்கும் பயணிகளினை வரவேற்கும் காட்சி.


சுற்றுலாப்பயணிகள் பெரிய தீவான தலைனகர் போட் விலா உள்ள Efate தீவிற்கும், Tanna islandற்கும் தான் விரும்பிப்பயணிப்பார்கள். Tanna தீவில் எரிந்துகொண்டிருக்கும் எரிமலைக்குளம்பினைப் பார்க்களாம்.
இத்தீவிற்கு போட் விலாவில் இருந்து விமானம் ஒவ்வொரு நாளும் புறப்படும். அங்கே சென்று ஒரு நாள் தங்கி இரவில் சிறு விமானத்தில் இருந்து எரியும் எரிமலைக்குளம்பினைப் பார்க்கலாம்.

போட் விலாவிற்கு அருகில் இருக்கும் சிறு தீவுகளுக்கும் சுற்றுலாப்பிரயாணிகள் செல்வார்கள். இச்சிறுதீவுகளுக்கிடையில் அடிக்கடி இலவசப்படகுச் சேவைகள் நடைபெறும். சில தீவுகளில் முழு நிலப்பரப்பில் விடுதிகள் மட்டுமே உள்ளது.
இங்கு அமெரிக்கா, ஐரோப்பியா(பிரித்தானியாவைத் தவிர) நாடுகளினைப்போல இன்னாட்டிலும்[right hand side of the road] வலது பக்கத்தில் வாகனங்கள் ஒடவேண்டும்.


போட்விலாவிற்குள் பேருந்துவில் எங்கும் செல்ல 100 வாற்றும்( 1 அவுஸ்திரெலியா வெள்ளி 80 வாற்று), சிறுவர்களுக்கு 50 வாற்றும், போட்விலாவுக்கு வெளியே செல்ல (உ+ம் Cascade Waterfalls, Hideaway Island )இத்தொகை 2 மடங்காகவும் இருக்கிறது.