எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.



Thursday, August 30, 2012

நியூசிலாந்து 57 - நியூசிலாந்தில் இருக்கும் ஒரே ஒரு கோட்டை Larnach Castle

மறு நாள் காலை 8 மணியளவில் டனீடனில் இருந்து அருகில் இருக்கும் ஒட்டாகோ தீவகற்பத்தினை(Otago Peninsula) நோக்கி, எரிபொருள் நிலையமொன்றில் வாகனத்துக்கு தேவையான பெற்றோலினைப் பெற்றபின்பு பயணித்தேன். ஒட்டாகோ தீவகற்பத்தில் இருக்கும் 'Natures Wonders' என்ற சுற்றுலாவிற்கு காலை 11.30 மணிக்கு செல்வதற்கு முன்பதிவு செய்திருந்தேன். இடையில் இருக்கும் நேரத்தில் நியூசிலாந்தில் இருக்கும் ஒரே ஒரு கோட்டையான Larnach Castleனைப் பார்க்க விரும்பினோம். காலை 9 மணிக்குத்தான் கோட்டையின் உள்ளே செல்லலாம்.
. நியூசிலாந்தில் வாழும் பல உயிரினங்கள் இருக்கும் இடம் ஒட்டாகோ தீவகற்பம்.அதாவது நியூசிலாந்தில் உயிர் இனங்கள் வாழும் இடங்களின் தலைநகரம் என்று ஒட்டாகோ தீவகற்பத்தினை அழைப்பார்கள். ஒட்டாகோ தீவகற்பத்தில் வலைந்து நெளிந்து செல்லும் பாதைகளினூடாக பயணித்தோம். பயணிக்கும் பாதையின் அருகில் உலகப்போரில் வீரமரணம் அடைந்த நியூசிலாந்துப் போர்வீரர்களின் இருப்பிடமான 'Soldiers Memorial' இருந்தது.
நேரமின்மையினால் அந்த நினைவு இடத்திற்கு செல்லாமல் கோட்டையினை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தோம்.
சில நிமிடப்பயணத்தின் பின்பு அழகிய தோட்டத்தின் நடுவில் கோட்டை இருந்தது.
கோட்டையிற்கு செல்வதற்கு நுளைவுச்சீட்டினைப் பெற்று உள்ளே சென்றோம்.
1833ம் ஆண்டு அவுஸ்திரெலியா நியூசவூத்வேல்ஸ் மானிலத்தில் பிறந்தவர் வில்லியம். இவர் ஸ்கொட்லாந்து நாட்டில் இருந்து அவுஸ்திரெலியாவில் குடியேறிய லார்னா(Larnach) என்ற குடும்பத்தினைச் சேர்ந்தவர். அவுஸ்திரெலியா மெல்பேர்ண் நகரில் வங்கி ஒன்றில் கடமையாற்றினார். பிறகு இவர் நியூசவூத்வேல்ஸ் மானிலத்தில் தங்கச்சுரங்கத்தில் வேலை செய்து கொண்டு நியூசவூத்வேல்ஸில் உள்ள வங்கி ஒன்றில் தலைமை அதிகாரியாகப் பணியாற்றினார். நியூசிலாந்தின் ஒட்டாகோ பகுதியில் 1960ம் ஆண்டில் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் இவர் 1867ல் நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்து டனீடனில் இருக்கும் ஒட்டகோ வங்கியில் தலைமை அதிகாரியாக பொறுப்பேற்றார். தங்கச்சுரங்கம், விவசாயம், அரசியல் என பல தொழில்களில் ஈடுபட்டார். 25 வருடம் அரசியலில் இருந்து நியூசிலாந்து அமைச்சரவையிலும் இடம் பிடித்தார்.மூன்று முறை திருமணம் செய்து 6 பிள்ளைகளுக்கு தகப்பனாக இருந்தார்.
1871ல் இவர் இக்கோட்டியினை 200 வேலையாட்களைக் கொண்டு கட்ட ஆரம்பித்தார். 15 வருடங்களில் இக்கோட்டை கட்டப்பட்டது. இவரின் முதல் மனைவியின் பெயர் எலிசா.இவருக்குத்தான் 6 பிள்ளைகள் பிறந்தன. எலிசாவின் 38வயதில் இயற்கை மரணம் அடைய எலிசாவின் சகோதரியான மேரியினை இவர் திருமணம் செய்தார். மேரியும் 5 வருடங்களின் பின்பு இயற்கை மரணம் அடைந்தார். இறக்கும் போது அவருக்கும் வயது 38. வில்லியம் 3வதாக மிகவும் வயது குறைந்த பெண் ஒருவரைத் திருமணம் செய்தார். இவரின் முதல் மனைவிக்குப் பிறந்த 3 வது பிள்ளையான, இவருக்குப் பிடித்த கேற் என்ற பெயரை உடைய மகள் 20வது வயதில் எதிர்ப்பாராதவிதமாக இறந்துவிட இவர் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானார். இவர் மற்றைய 5 பிள்ளைகளையும் இங்கிலாந்துக்கு மேற்படிப்புக்கு அனுப்பினார். அவர்களும் படித்து முடித்து நியூசிலாந்துக்கு திரும்ப இவர் அரசியலில் முழு ஈடுபாட்டுடன் வீட்டுக்கு வராமல் பாராளுமன்றத்திலே அதிக நேரத்தினை செலவிட்டார். இவரின் முதல் தாரத்துக்குப் பிறந்த மகனுக்கும், இவரின் கடைசி மனைவிக்கும் இடையில் இருந்த நெருக்கம் தெரியவர விரக்தியில் பாராளுமன்றத்தில் தற்கொலை செய்தார்.
இவரின் பிறகு 1906ல் இக்கோட்டையினை 3000 வெள்ளிகளுக்கு நியூசிலாந்து அரசுக்கு இவரது குடும்பத்தினர் இக்கோட்டியினை விற்றார்கள். புத்திசுவாதீனமற்ற நோயாளிகள், போரினால் அதிர்ச்சியடைந்த போர்வீரர்கள் தங்குமிடமாக இக்கோட்டையில் தங்கினார்கள். 1927ல் இருந்து 1959 வரை பலர் இக்கோட்டையினை வாங்கினார்கள். கடைசியாக 1967ல் மார்கிரட் , பெரி ஆகியோர் இக்கோட்டையினை வாங்கினார்கள்.
கோட்டையின் சுவரில் வில்லியமின் குடும்பச்சங்கிலி விபரமாக இருந்தது. அவருக்குப் பிறந்தவர்கள், சந்ததிகளின் பெயர்கள் விபரமாக எழுதப்பட்டிருந்தன. சிலவருடங்களுக்கு முன்பு ஒரு கனேடியர் ஒருவர் நான் வேலை செய்யும் இடத்துக்கு வந்து ஒரு கனணி மென்பொருள் பற்றி விளங்கப்படுத்தினார். அவர் தன்னுடைய தனக்கு முன்னாள் இருந்த 18 வது சந்ததியைப் பற்றி அறிந்திருக்கிறார். 18வது சந்ததியாக எங்கே வாழ்ந்தார்கள், யாரைத் திருமணம் செய்தார்கள் என்ற விபரங்களை அவரது குடும்பம் பேணிப் பார்த்து வருகின்றது. தமிழர்கள் பலருக்கு தங்களது பெற்றோரின் பெற்றோருக்கு முந்தைய சந்ததிகளின் விபரங்கள் தெரியாது. காரணம் தமிழர்களின் அக்கறையின்மை அல்லது அவர்களின் எதிரிகளால் தமிழர்களின் பழைய வரலாறுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. ஈழத்தில் 1981ல் பல அறிய நூல்கள், ஒலைச் சுவடிகள் இருந்த, தென்னாசியாவில் பெரிய நூலகமாக திகழ்ந்த யாழ்ப்பாண நூலகம் அழிக்கப்பட்டது.
கோட்டையின் மேல் தளத்துக்கு சென்றால் கோட்டையைச் சுற்றவுள்ள தோட்டம் , கடல் அழகாகத் தெரிந்தது.
கோட்டையில் இருந்த உணவகத்தில் காலை உணவு அருந்தும் போது காலை 10 மணியாகிவிட்டது. 'Natures Wonders' என்ற சுற்றுலாவிற்குச் செல்ல கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் தேவை என்றதினால் கோட்டையினை சுற்றிவர இருக்கிற அழகிய தோட்டத்தினைப் பார்க்க நேரம் கிடைக்கவில்லை. கோட்டையின் அருகில் இருந்து சில புகைப்படங்களை எடுத்தபின்பு அடுத்த சுற்றுலா பார்க்க புறப்பட்டோம்.

Wednesday, August 29, 2012

நியூசிலாந்து 56- புகையிரதப் பயணத்தில் போகும் இடமெல்லாம் காட்சி அளித்த நியூசிலாந்தின் 4வது நீளமான 'Taieri' ஆறு

புகையிரதப்பெட்டியில் இருந்து கொண்டு இயற்கை அழகினைப் பார்த்து இரசித்துக் கொண்டிந்தேன். நியூசிலாந்தின் 4 வது மிகவும் நீளமான 'Taieri' ஆறும், போகும் இடமெல்லாம் எங்களுடன் வந்துகொண்டிருந்தது.
மாலை 2:30 மணிக்கு டனீடனில் வெளிக்கிட்ட இப்புகையிரதம் இரண்டு மணித்தியாலப் பயண முடிவில் 4:35 மணிக்கு 'PUKERANGI'யினை அடைந்தது.
'PUKERANGI'யில் இறங்கும் பயணிகள் வேறு இடங்களுக்கு செல்வதற்காக வாகனங்கள் அங்கே காத்திருந்தன.
10 நிமிடத்துக்கு பின்பு (அதாவது மாலை 4:45 மணியளவில்)மீண்டும் புகையிரதம் டனீடனை நோக்கித் திரும்பிப் பயணித்தது.
மேலே உள்ள படத்தில் தூரத்தில் தெரியும் பாலத்தினூடாகவே நாங்கள் புகையிரதத்தில் பயணித்தோம்.
சில நிமிடப் பயணத்தின் பின்பு சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுப்பதற்காக ஒரிடத்தில் புகையிரதம் நின்றது.
சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்தபின்பு மீண்டும் டனீடனை நோக்கிப் புகையிரதம் பயணித்தது.
மாலை 6:30 மணியளவில் புகையிரதம் டனீடனை அடைந்தது. டனீடன் நகரில் இருக்கும் தாய் நாட்டவர் உணவகமொன்றில் இரவு உணவினை அருந்தியபின்பு அன்று இரவு தங்கும் விடுதியை நோக்கிப் பயணித்தோம்.

Thursday, August 16, 2012

நியூசிலாந்து 55 - நாய்க்கும் சிலை வைத்திருக்கும் Hindon நகரம்

டனீடன் நகரின் வெப்பநிலை 6 பாகையாக இருந்ததினாலும் வேகமாகச் செல்லும் புகையிரதப்பெட்டிக்கு இடையில் இருக்கின்ற பாதையில் நின்று இயற்கைக்காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்ததினாலும், வெளிக்காற்றினால் உடல் நடுங்கத்தொடங்கியதினால் புகையிரதப்பெட்டியில் இருந்து கொண்டு இயற்கைக்காட்சிகளைப் பார்த்து இரசித்துக் கொண்டிருந்தேன். குளிருக்கு ஏற்ற சூடான பானங்களை அருந்த விரும்பி புகையிரதத்தில் இருக்கும் தேனீர் கடையினை நோக்கிச் சென்றேன். அங்கே தேனீரையும் சூடான உணவுகளையும் வாங்கி உண்டபின்பு மீண்டும் புகையிரதப் பெட்டிக்கு இடையில் இருக்கிற பாதையில் நின்று கொண்டு இயற்கைக்காட்சிகளைப் படம் பிடித்தேன்.
நியூசிலாந்தின் மிகவும் நீளமான இந்தப் புகையிரத சுற்றுலாவில் பார்த்த இயற்கை அழகினை சாதரண புகைப்படக்கருவியினால் எடுக்கும் படங்களினை வைத்துத் தீர்மானிக்க முடியாது. புகைப்படங்களில் காணும் ஆறு நியூசிலாந்தின் 4 வது மிகவும் நீளமான 'Taieri'ஆறாகும். சில நிமிடப்பயணங்களின் பின்பு 'Hindon' என்ற இடத்தினை அடைந்தோம். சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுப்பதற்காக சில நிமிடங்கள் இங்கு புகையிரதம் நிறுத்தப்பட்டது.
பொதுவாக உலக நாடுகளில் மனிதர்களுக்குத்தான் சிலை வைத்திருப்பார்கள். இங்கு நாய்க்கும் சிலை வைத்திருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட 5, 10 நிமிடங்களின் பின்பு புகையிரதம் மீண்டும் பயணிக்கத் தொடங்கியது.