எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.Tuesday, July 27, 2010

நியூசிலாந்து 13 - வொக்ஸ்கிளேசியர் அடிவாரத்தை நோக்கி நடைப்பயணம்

உலங்குவானூர்திப் பயணம் முடிவடைந்ததும் வொக்ஸ் கிளேசியர் அடிவாரம் வரை நடந்து செல்ல முடிவெடுத்தேன். வோக்ஸ்கிளேசியர் நகரத்தில் இருந்து வோக்ஸ்கிளேசியர் நடைப்பயணம் ஆரம்பிக்கும் இடமான வாகனத்தரிப்பிடத்துக்கு செல்ல 10 நிமிடங்கள் மகிழுந்தில் செல்லவேண்டும்.

பாறைகள், அருவிகள் நிறைந்த கரடு முரடான பாதைகளினூடாக நடந்து சென்றால் அடிவாரத்தினை அடையலாம்.சில இடங்களில் நடக்கும் போது கவனமாக நடக்க வேண்டும். கவனிக்காது விட்டால் விழக்கூடிய சந்தர்ப்பம் இருக்கிறது.
நடந்து செல்லும் போது பல இடங்களில் எழுதியிருந்த கிளேசியர் பற்றிய பல தகவல்களைக் கண்டேன். சில வருடங்களுக்கு முன்பு கிளேசியர் அந்த இடம் வரை இருந்ததாகவும் பிற்காலத்தில் அழிந்து பின்னோக்கிச் சென்றதாகவும் அத்தகவல்கள் மூலம் அறியக்கூடியதாக இருந்தது. 80ம் ஆண்டில் கிளேசியர் இருந்த இடத்தில் இருந்து 2005ல் நான் சென்ற போது கிளேசியர் உள்ள இடத்துக்கு நடந்து செல்ல 20 நிமிடங்களுக்கு மேல் எடுத்தது. அதாவது 25 வருடங்களில் கிளேசியரின் நீளம் குறைந்துள்ளதை அறியக்கூடியதாக இருந்தது.

அடிவாரத்துக்கு மிகவும் கிட்டச்செல்லக்கூடாது. உயிருக்கு ஆபத்தான இடம். பெரிய பனிக்கட்டிகள் விழவாய்ப்பிருக்கிறது. இதனால் அபாயம் என்ற அறிவுப்புப் பலகையை அங்கே வைத்திருக்கிறார்கள். சென்ற வருடம் மேற்கு அவுஸ்திரெலியாவைச் சேர்ந்த இந்தியர்கள் இருவர் அந்த அறிவுப்பலகையை அலட்சியம் செய்து அறிவுப்பலகைக்கு அப்பால் சென்றபோது பனிக்கட்டிகள் இவர்கள் மீது விழுந்ததினால் புதையுண்டு உயிரழந்தார்கள். இவர்களின் பெற்றோர்களின் முன்னால் இந்த அவலம் நடைபெற்றது.

அடிவாரத்திற்கு அப்பால் வழிகாட்டி ஒருவரின் உதவியுடன் கிலேசியரில் ஏறலாம். அதற்கு கட்டணமுண்டு. ஏறும் போது கிளேசியரில் வழுக்காமல் நடப்பதற்கு ஏற்ப பாதணிகள் அணிய வேண்டும். கொகிரிகாவில் சந்தித்த விடுதி உரிமையாளரின் ஆலோசனையினாலும் நேரப்பிரச்சனை காரணமாகவும் நான் கிளேசியரில் ஏறவில்லை என்று முன்பு உங்களுக்கு சொல்லியிருந்தேன். ஆனால் உலங்குவானூர்தியில் பயணித்து கிளேசியரில் நடந்தேன்.(ஏற்கனவே இப்பிரயாணம் பற்றி சென்ற பதிவில் சொல்லியிருந்தேன்). ஏற்கனவே வழிகாட்டி உதவியுடன் கிளேசியரில் ஏறி நடந்து முடிந்து திரும்பிக் கொண்டிருப்பவர்களை கீழே உள்ள படத்தில் நீங்கள் காணலாம். நான் அடிவாரத்தில் இருந்து எனது புகைப்படக்கருவியினால் இப்படத்தை எடுத்திருந்தேன்.

Sunday, July 25, 2010

நியூசிலாந்து 12 -உலங்குவானூர்தியில் இருந்து நான் பார்த்த கிளேசியர்

பயணத்தின் போது மலையின் ஒருபகுதியில் உலங்கு வானூர்தி வந்து இறங்கியது. மலையின் எல்லா இடங்களிலும் நடப்பது ஆபத்தைத் தரும். எனென்றால் நாங்கள் நடக்கும் போது பனிக்கட்டிக்குள் புதைந்துவிடக்கூடிய அபாயமும் இருக்கிறது. விமான ஓட்டி சொன்ன இடத்தில் நடந்து பார்த்தோம்.

செப்டம்பர் மாத இறுதிக் கிழமைகளில் தான் நான் நியூசிலாந்து சென்றேன். அக்காலத்தில் நியூசிலாந்தில் குளிர் அதிகம். அதுவும் மலைப் பிரதேசங்களில் என்பதினால் இன்னும் குளிர் கூடவாக இருக்கும். ஆனால் உலங்குவானூர்தியில் இருந்து மலையில் உச்சியில் இறக்கிய பகுதியில் சூரிய வெளிச்சம் காரணமாக குளிர் இருக்கவில்லை. உலங்குவானூர்திப் பயணத்தை பதிவு செய்யும் போது, மலை உச்சியில் இருக்கும் போது குளிர்ச்சியான கண்ணாடியை அணிந்து வந்தால் நல்லது என்று சொன்னார்கள். சூரியகதிர்கள் மலையில் உள்ள பனிக்கட்டியில் விழுந்து தெறிப்பதினால் கண்கள் சிலவேளை கூசும் என்றார்கள்.

நாங்கள் நடக்கும் போது இன்னுமொரு உலங்குவானூர்தியில் இருந்தும் பயணிகள் வந்தார்கள்.

சில நிமிடங்களின் பின்பு மீண்டும் மலை உச்சியில் இருந்து உலங்கு வானூர்தியில் எங்களது பயணம் ஆரம்பமாகியது.
பிரயாணத்தின் போது மவுண்ட் குக்கிற்கும்(Mount Cook) மேலாக உலங்குவானூர்தியில் பயணித்தோம். நியூசிலாந்தில் ஏன் பசுபிக் நாடுகளில் மிகவும் உயரமான மலை குக் மலை.
நாங்கள் பயணித்த உலங்குவானூர்தியில் விரான்ஸ் ஜோசப்பில் இருந்து ஏறியவர்களும் இருந்தை முந்தைய பதிவில் சொல்லியிருந்தேன்.அந்த இருவரையும் விரான்ஸ் ஜோசப்பில் இறக்கி விட, விரான்ஸ் ஜோசப்பை நோக்கி உலங்கு வானூர்தி பயணித்தது.

மேலே நான் இணைத்த புகைப்படத்தைப் பெரிதாகப் பார்க்கும் போது கிளேஸியரில் வெய்யில் ஊடுறுவும் போது அடியில் தெரியும் பச்சை கலந்த நீலத்தைக் காணலாம்.சில நிமிடப் பயணங்களின் பின்பு விரான்ஸ் ஜோசப்பில் உலங்கு வானூர்தி தரையிறக்கத் தொடங்கியது.
சுற்றுலாப்பயணிகள் இருவரையும் இறக்கிவிட்டு மீண்டும் உலங்கு வானூர்தி விரான்ஸிச் ஜோசப்பில்(Franz Josef) இருந்து வொக்ஸ் கிளேசியர்(Fox Glacier) நோக்கி பயணித்தது. கீழே உள்ள படத்தில் மலைகளுக்கிடையில் வெள்ளையாகத் தெரிவது கிளேசியர்(Franz Josef Glacier).

தொடர்ந்து வொக்ஸ் கிளேசியரை அடையும் வரை வானிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.


Thursday, July 15, 2010

நியூசிலாந்து 11 - உலங்குவானூர்தியில் பயணம்

உலங்குவானூர்தி பறந்து வந்து எங்களுக்கு முன்னால் சில தூரத்தில் நின்றது. உலங்குவானூர்தியில் இருக்கும் சுற்றும் காத்தாடிச் செட்டைகளினால் ஆபத்து என்பதினால் எங்களை உடனடியாக உலங்குவானூர்திக்கு கிட்டச் செல்ல வழிகாட்டி அனுமதிக்கவில்லை. சில நிமிடங்களின் பின்பு உலங்குவானூர்தியில் ஏற அனுமதித்தார்கள்.

வானூர்தியில் 6 இருக்கைகள் இருந்தன. விமானியுடன், இன்னுமொருவர் துணையாக இருந்தார். இருவரும் பயணத்தின் போது விளக்கங்கள் தருவதாகச் சொன்னார்கள். இவ்வானூர்தியில் பிரான்ஸ் ஜோசப்பில் இருந்து ஏறிய இருவர் இருந்தார்கள். நாங்களும் வானூர்தியில் ஏறியவுடன் வழிகாட்டி திரும்பிச் சென்று விட்டார். உலங்குவானூர்தி பறக்கத் துவங்கியது.


மலை அடிவாரத்தில் தெரியும் Glacier

Glacier க்கு மேலாகப் பறக்கும் போது பார்த்தவை


மலைகளுக்கு மேலாகப் பறக்கும் போது பார்த்த முகில்களும், மலையில் படிந்த பனிக்கட்டிகளும் Glacierயும் நான் இணைத்த புகைப்படங்களில் இருந்து காணலாம்.

நான் இங்கு புகைப்படத்தில் இணைத்தவற்றை விட நேரில் அழகாக இருந்தது. வேறு ஒரு உலகத்தில் இருந்தது போல ஒரு உணர்வு ஏற்பட்டது.


பயணத்தின் போது விமானியும், துணையாக வந்தவரும் நாங்கள் பார்த்த மலைகள், நீர் வீழ்ச்சிகள் பற்றிய விளக்கங்களைத் தந்தார்கள். தென் நியூசிலாந்தின் மேற்குப்பகுதியில் உள்ள பெரும்பாலான மலைகளையும் காண்பித்தார்கள். சில நிமிடப்பயணத்தின் போது மலை உச்சியின் ஒருபகுதியில் உலங்கு வானூர்தி வந்து இறங்கியது.

Tuesday, July 13, 2010

நியூசிலாந்து 10 - Fox Glacier (வொக்ஸ் கிளேசியர்)


விரான்ஸ் ஜோசப்பில் நிற்காமல் தொடர்ந்து வொக்ஸ் கிளேசியரை நோக்கிப் பயணித்தேன்.

பிரான்ஸ் ஜோசப்பில் இருந்து கிட்டத்தட்ட 15 நிமிடப் பயணத்தில் வொக்ஸ் கிளேசியரை அடைந்தேன்.

Fox Glacierல் நான் உலங்கு வானூர்தியில் பறப்பது பற்றி முன்பே நான் நினைத்திருக்கவில்லை.ஆனால் நியூசிலாந்துப் பயணத்தின் 6 வது நாளில் Mount Cook (குக் மலை)என்ற இடத்தில் தான் உலங்கு வானூர்தியில் பறக்கவே விரும்பி இருந்தேன். வொக்ஸ் கிளேசியரில் வழிகாட்டியின் உதவியுடன் நடக்கவே விரும்பி இருந்தேன். ஆனால் உலங்கு வானூர்திப் பிரயாணம் காலநிலை சீராற்ற காலங்களில், மழைக்காலங்களில் நடைபெறுவதில்லை( முதல் நாள் மழை காரணமாக வானூர்திப் பிரயாணம் நடைபெறவில்லை என்றும் அறிந்தேன்) என்று அறிந்ததினாலும், அன்று நல்ல காலநிலை என்பதினாலும் அன்று பறக்க முன்பதிவு செய்யச் சென்றேன்.

அன்று பயணிப்பவர்கள் அதிகமென்பதினால் மாலை 3 மணிக்கு பறக்கும் உலங்குவானூர்தியில் தான் எனக்கு இடம் கிடைத்தது.அப்பொழுது நேரம் 11 மணி. ஆனால் உதவியாளர்களின் உதவியுடன் கிளேசியரில் நடக்கும் நேரமும், உலங்குவானூர்திப் பயணமும் ஒரே நேரத்துக்குள் வருவதினால் நடப்பதைக் கைவிட்டேன்.(கொகிரிகாவில் நான் தங்கியிருந்த உரிமையாளர் கால் வலிக்க நடக்கவேண்டும் என்று சொல்லியிருந்தாலும் நான் கிளேசியரில் நடக்க விரும்பி இருந்தேன்) ஆனால் வழிகாட்டி இல்லாது Glacier மலையின் அடி வரை நடந்து செல்ல கிட்டத்தட்ட 1 மணித்தியாலம் எடுக்கும் பயணத்தை உலங்குவானூர்திப் பயணம் முடிய நடந்து செல்ல விரும்பினேன். உலங்குவானுர்திப் பயணம் செல்ல இன்னும் 4 மணித்தியாலம் இருப்பதினால் மதிய உணவின் பின்பு அருகில் உள்ள பூங்காவிற்கு சென்று பார்வையிட்டேன்.


பூங்காவுக்கு சென்று பார்வையிட்டு வர கிட்டத்தட்ட அரை மணித்தியாலத்துக்கு மேல் நேரம் எடுத்தது.

Fox Glacierல் 2,3 உணவகங்களே இருக்கிறது. கடைகள் மிகக்குறைவு. மதிய உணவு உண்ட உணவகத்தின் படத்தினை நீங்கள் காண்கிறீர்கள்

மாலை 3 மணியளவில் உலங்குவானூர்தி வரும் இடத்துக்கு செல்ல, வானூர்தியும் எம்மை நோக்கி வந்து கொண்டிருந்தது.