எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.



Wednesday, July 27, 2011

நியூசிலாந்து 38 - கிறைஸ் சேர்ச்சில் இருந்தி கன்மர் ஸ்பிரிங்க் வரை

முதல் 37 பதிவுகளில் நான் நியூசிலாந்து நாட்டின் தெற்குத் தீவுக்கு 2005ல் சென்ற போது ஏற்பட்ட அனுபவங்களை சொல்லி இருந்தேன். 2008ல் எனது பெற்றோர் சிட்னிக்கு வந்திருந்தார்கள். அவர்கள் தங்களது உறவினர்கள் வாழும் நியூசிலாந்தின் வடக்கு தீவில் இருக்கும் ஒக்லண்ட் நகரில் வசிக்கும் தங்களது உறவினர்களைப் பார்க்க விரும்பினார்கள். ஒக்லண்ட் நகரில் தான் ஈழத்தமிழர்கள் நியூசிலாந்தில் அதிகளவில் வாழ்கிறார்கள். பெற்றோரோடு வேறு உறவினர்களும் எங்களுடன் நியூசிலாந்துக்கு வர விரும்பினார்கள்.
நேரடியாக சிட்னியில் இருந்து ஒக்லண்டுக்கு செல்லுவதை விட, சிட்னியில் இருந்து நியூசிலாந்தின் தெற்குத் தீவில் இருக்கும் கிறைஸ் சேர்ச்சுக்கு சென்று அங்கிருந்து விமானத்தில் வடக்கு தீவில் இருக்கும் ஒக்லண்ட் சென்றால் மொத்த விமான சீட்டுக்கள் மலிவாக அச்சமயத்தில் கிடைத்தன. (எனக்கு சிங்கப்பூர் விமான புள்ளிகள் இருந்ததினால் இலவச பயணம் செய்யக்கூடியதாக இருந்தது. ) இதனால் நாங்கள் கிறைஸ் சேர்ச்சுக்கு(christchurch) சென்றோம். கிறைஸ் சேர்ச்சில் ஒரு நாள் பொழுதைப் போக்க விரும்பினோம். 2005 பயணத்தின் போது பார்க்காத கன்மர் ஸ்பிரிங்(hanmer springs) வெந்நீரூற்றுக்கு செல்ல விரும்பினேன். ஈழத்தின் நகரமான திருகோணமலையில் உள்ள பிரபல்யமான கன்னியா வெந்நீரூற்றினைப் போல நியூசிலாந்திலும் உள்ள கன்மர் ஸ்பிரிங்க் வெந்நீரூற்றும் பிரபல்யமானது.

அதிகப் பேருடன் சுற்றுலா சென்றால் நினைத்த நேரத்தில் விரும்பிய இடங்களுக்கு செல்ல முடியாது. மதிய உணவை கிறைஸ் சேர்ஸ் நகரத்தில் இருக்கிற இந்திய உணவகத்தில் உறவினர்கள் உண்ண விரும்பினார்கள்.சுற்றுலா செல்லும் போது இலங்கை, இந்தியா, சீனா, தாய், வியட்னாம் போன்ற உணவகங்களில் மதியம் உண்ணுவதை தவிர்ப்பதுண்டு. காரணம் அங்கே குறைந்தது ஒரு மணித்தியாலம் இருக்க வேண்டும். இரவு நேரங்களில் தான் இந்த உணவகங்களுக்கு செல்வதுண்டு. மதிய உணவகத்தினை இந்தியா உணவகம் ஒன்றில் உண்டோம். உணவகம் இருந்த பகுதிக்கு இப்பொழுது செல்ல ஒரு வித தயக்கம் இருக்கிறது. ஏன் நியூசிலாந்தும் செல்லவே தயக்கமாக இருக்கிறது. அண்மைக்காலங்களில் பாரிய நிலவதிர்வுகள் ஏற்பட்டு சிலர் கொல்லப்பட்டிருப்பதை கேள்விப்பட்டிருக்கிறோம்.

மதிய உணவை முடித்து விட்டு கன்மர் ஸ்பிரிங்கை நோக்கிப் பயணித்தோம். கிறைஸ் சேர்ச்சில் இருந்து கன்மர் ஸ்பிரிங்கிற்கு செல்ல 1.75 மணித்தியாலம் தேவை.(திரும்பிவர 3.50 மணித்தியாலம் தேவை).நான் நியூசிலாந்துக்கு 2008ல் சென்ற போது கோடை காலம். பெப்ரவரி மாதம். இருள நேரம் எடுக்கும்.

இயற்கைக் காட்சிகளை இரசித்துக் கொண்டு பயணித்தோம்.