எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.



Sunday, July 22, 2012

நியூசிலாந்து 54 -உலகப்புகழ்பெற்ற 'Taieri Gorge train journey' புகையிரதப்பயணம் ஆரம்பம்

டனிடன் சொக்கலேற் தொழிற்சாலையினை விட்டு வெளியேறும் போது மதியம் 1 மணியாகிவிட்டது. அருகில் இருக்கும் டனிடன் புகையிரத நிலையத்தில் இருந்து மதியம் 2:30க்குத்தான் 'Taieri Gorge train journey' என்ற புகையிரத பயணம் ஆரம்பிக்கும். நேரம் இருப்பதினால் மறு நாள் காலையில் பார்க்கும் இடங்களுக்கு முன்பதிவு செய்ய சுற்றுலாத்தகவல் நிலையத்துக்கு சென்றேன். 'Natures Wonders' என்ற சுற்றுலாவிற்கு காலை 10 மணிக்கு செல்வதிற்கு இடம்கிடைக்கவில்லை. 11.30 மணி சுற்றுலாவிற்கே இடம் கிடைத்தது. இன்னும் கொஞ்சம் பிந்தி சுற்றுலாத்தகவல் நிலையத்துக்கு வந்திருந்தால் 11.30 மணிச்சுற்றுலாவிற்கும் இடம் கிடைத்திருக்க முடியாமல்போயிருக்கும். சுற்றுலாத்தகவல் நிலையத்தில் மறுநாள் பயண ஒழுங்குகள் செய்து முடிக்க கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் முடிவடைந்துவிட்டது. அத்துடன் சுற்றுலாத்தகவல் நிலையத்திலேயே, அன்று செல்ல இருக்கும் புகையிரதப்பயணத்துக்கும் பயணமுன்பதிவையும் செய்தேன். உணவகமொன்றில் சென்று மதிய உணவினை வாங்கச் சென்றால் சிலவேளை புகையிரதப்பயணத்தினை தவறவிடலாம் என்ற எண்ணத்தில் உடனே புகையிரத நிலையத்தினை நோக்கிச் சென்றோம். அன்சாக் சதுக்கத்தில்(Anzac Square) புகையிரத நிலையம் அமைந்திருந்தது. புகையிரதக்கட்டிடத்தினைப் பார்த்தால் பெரிய மாடமாளிகை போல காட்சி அளித்தது.
புகையிரத நிலையத்தில் முன்பதிவு செய்யப்பட்ட பற்றுச்சீட்டினைக் காட்டி பயண நுளைவுச்சீட்டினைப் பெற்றோம். புகையிரத நிலையத்தில் இருந்த தேனீர் கடை ஒன்றில் இருந்த சிறு உணவுகளை அவசர அவசரமாக வாங்கி உண்டபின்பு புகையிரத்தினை எதிர்ப்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தோம்.
'Taieri Gorge train journey' என்ற உலகப்புகழ் பெற்ற புகையிரதப்பயணம் டனிடன் புகையிரத நிலையத்தில் ஆரம்பிக்கிறது. மலைகளிற்கிடையே உள்ள குறுகிய பாதையான 'Taieri Gorge' என்ற இடத்தின் ஊடாக புகையிரதம் பயணிப்பதினால் 'Taieri Gorge train journey' என்று இப்பயணத்தினை அழைக்கிறார்கள்.இப்பாதை('Taieri Gorge') நியூசிலாந்தில் உள்ள ஆறுகளில் 4வது நீளமான Taieri ஆற்றின் மேல் அமைந்திருக்கிறது. டனிடன் புகையிரத நிலையத்தில் ஆரம்பிக்கும் புகையிரதப்பயணம் வடமேற்கு திசை நோக்கி 'PUKERANGI' என்ற இடத்தினை அடைந்தபின்பு மீண்டும் டனிடனை அடைகிறது. வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலையில் 'PUKERANGI' க்கு அப்பால் இருக்கும் 'MIDDLEMARCH' என்ற இடத்தினை அடைந்து திரும்புகிறது. 'MIDDLEMARCH'ல் இருந்து குயின்ஸ்டவுன், வனக்கா போன்ற இடங்களுக்கு வேறு புகையிரதத்தில் ஏறி பயணிகள் பயணிப்பார்கள். டனிடனில் இருந்து வடகிழக்கு நோக்கி கடற்கரை வழியாகவும் 'Palmerston' வரை சுற்றுலா செல்லலாம். நான் மலைகளினூடாகவும் ஆறுகளினூடகவும் அழகிய இயற்கைக்காட்சிகள் அமைந்த 'PUKERANGI' க்கு செல்லும் பயணத்திற்குத்தான் நுளைவுச்சீட்டினைப் பெற்றேன். அன்று புதன்கிழமை என்பதினால் டனிடன் இருந்து வெளிக்கிடும் புகையிரதம் 'PUKERANGI' வரை சென்று திரும்புகிறது. 2:30 மணிக்கு டனிடனை விட்டு வெளிக்கிடும் இப்புகையிரதம் மீண்டும் 6:30 மணிக்கு டனிடனை வந்தடையும்.
சரியாக 2:30 மணியளவில் புகையிரதம் வெளிக்கிட்டது. டனிடனில் அப்பொழுது வெப்பநிலை 6 பாகை செல்சியஸ். குளிருக்கு ஏற்ற ஆடைகள் அணிந்திருந்தபடியால் குளிர் பெரிதாகத் தெரியவில்லை. புகையிரதப்பெட்டிகளுக்கு இடையே உள்ள பாதைகளில் நின்று கொண்டு அழகிய இயற்கைக்காட்சிகளை புகைப்படக்கருவியினால் படம் பிடிக்கத்தொடங்கினேன்.
பொறியியல் துறையின் சாதனை என்று சொல்லக்கூடிய இப்புகையிரதப்பாதையினை 1879ல் இருந்து கட்ட ஆரம்பித்து 1891ம் ஆண்டில் நிறைவு செய்தார்கள். 12க்கும் மேற்பட்ட பாலங்களின் மேல் இப்புகையிரதம் பயணிக்கிறது. அவற்றில் ஒன்று பூமிப்பந்தின் மத்திய கோட்டின் கீழே உள்ள நிலப்பரப்பில் உள்ள அந்தாட்டிக்கா, அவுஸ்திரெலியா, தென்னமெரிக்கா, அபிரிக்கா ஆசியா நாடுகளில் இருக்கிற இரும்புக் கட்டிட பாலங்களிலிலும் பெரியது.(Southern hemisphere's largest wrought iron structure) 12 பெரிய குகையினூடாகப் பயணிக்கும் இப்புகையிரதப்பயணத்தில் நேரடி வர்ணனை மூலம், புகையிரதம் போகும் இடங்களைப் பற்றிய மேலதிக தகவல்களையும் தந்துகொண்டிருந்தார்கள்.
குளிருக்கு ஏற்ற ஆடை அணிந்திருந்தாலும் புகையிரதப்பெட்டிக்கு இடையில் இருக்கின்ற பாதையில் நின்று இயற்கைக்காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்ததினால், வெளிக்காற்றினால் உடல் நடுங்கத்தொடங்கியது. இதனால் புகையிரதப்பெட்டியில் இருந்து கொண்டு இயற்கைக்காட்சிகளைப் பார்க்க சென்றேன்.

Wednesday, July 18, 2012

நியூசிலாந்து 53- டனிடன் சொக்கலேற் தொழிற்சாலை (Dunedin Cadbury World)

டனிடனை அடையும் போது கிட்டத்தட்ட நேரம் மதியம் 11:30. தென் நியூசிலாந்தில் 2 வது பெரிய நகரம் டனிடன்(Dunedin). கிறைஸ் சேர்ச்(Christchurch) தான் தென் நியூசிலாந்தில் மிகப்பெரிய நகரம். டனிடனின் மத்தியில் இருக்கும் சொக்கலேற் தயாரிக்கும் நிறுவனத்தினால் 'Cadbury World' என்ற சுற்றுலாவினை நடாத்துகிறார்கள். உலகில் தற்பொழுது பிரித்தானியாவில் பேர்மிங்காம்(Birmingham) என்ற இடத்திலும், நியூசிலாந்தில் டனிடனிலும் தான் 'Cadbury World' என்ற சுற்றுலா நடைபெற்றுவருகின்றது, டனிடனில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமைகளில் இத்தொழிற்சாலை இயங்குவதினால் தொழிற்சாலை சுற்றுலா (Factory Tour ) இந்நாட்களில் தான் நடாத்தப்படும். சனி, ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா செல்பவர்கள் வரவேற்பு அறையினுள் இருந்து காணொளிகள் மூலம் சொக்கலேற் தயாரிப்பதினை அறிவார்கள்(Shortened Tours). டனிடனில் உள்ள பலசரக்குக் கடைகளில் சொக்கலேற்றுக்களை வாங்குவதினைவிட, இங்கு மலிவுவிலையில் சொக்கலேற்றுக்களை வாங்கலாம்.
நாங்கள் புதன்கிழமை தான் இத்தொழிற்சாலைக்கு சென்றோம். இதனால் 75 நிமிட தொழிற்சாலை சுற்றுலாவிற்கு நாங்கள் செல்லக்கூடியதாக இருந்தது. வரவேற்பு அறையில் 10 நிமிடங்கள் கட்பறி சொக்கலேற் பற்றிய விளக்கங்கள் தந்தார்கள். பிரபல்யமான கட்பறி சொக்கலேற்றின் விளம்பரங்கள், உலகில் கட்பறி சொக்கலேற் எங்கே தயாரிக்கிறார்கள் என்பது பற்றிய சிறிய விளக்கங்களைப் பெற்றோம். அடுத்ததாக காணொளியொன்றில் டனிடனில் உள்ள கட்பறி சொக்கலேற் தொழிற்சாலையில், கட்பறி சொக்கலேற்றில் இருந்து உற்பத்தியாகும் பொருட்கள் பற்றிய விபரணங்களைப் பார்த்தோம். அடுத்து எங்களை தொழிற்சாலைக்கு அழைத்துச் சென்றார்கள். பெண் சுற்றுலாப்பயணிகள் உள்ளே செல்ல கட்டாயம் தலைமுடிக்கு மேல் hair net அணியவேண்டும். தொழிற்சாலையில் 5 மாடிகளில் சொக்கலேற்றினை எவ்வாறு தயாரிக்கிறார்கள் என்பதினை விளங்கப்படுத்தினார்கள்.
விளங்கப்படுத்தும் போது உண்பதற்கு சில சொக்கலேற்றுக்களையும் தந்தார்கள். இவற்றில் நீர்த்தன்மையான புதிதாகச் செய்த சொக்கலேற்றுக்களும் இருந்தன.
இடையிடையே சொக்கலேற் தயாரிப்பு பற்றிய கேள்விகளையும் கேட்டார்கள். சரியாக பதில் சொல்பவர்களுக்கும் மேலதிகமாக சொக்கலேற்றுக்களை வழங்கினார்கள்.
இத்தொழிற்சாலையில் இருக்கிற,தற்பொழுது உலகிலே மிகவும் பெரிய சொக்கலேற் நீர்வீழ்ச்சியையும் காண்பித்தார்கள்.
கொக்கோ மரத்தின் விதைகளினை(Cocoa bean) கட்பறி பால், பழைய தங்கம், சொக்கலேற் தயாரிப்பதற்கு உபயோகிக்கிறார்கள் என்பதனை இங்கு மேலதிமாக அறிந்தோம். 75 நிமிட சுற்றுலாப் பயண முடிவில் மலிவு விலையில் சில சொக்கலேற்றுக்களையும் வாங்கியபின்பு தொழிற்சாலையின் அருகில் இருந்த வாகனங்களுடன் நின்று புகைப்படம் எடுத்தோம்.
பொதுவாக எனக்கு இயற்கைக்காட்சிகளைத்தான் பிடிக்கும் என்பதினால் இந்தச் சுற்றுலா (Cadbury World)என்னைப் பெரிதாகக் கவரவில்லை.

Wednesday, July 11, 2012

நியூசிலாந்து 52 -ரிமாறுவில்(Timaru) இருந்து டனிடன்(Dunedin) வரை

ரிமாறுவில்(Timaru) பார்ப்பதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை. தெற்கு கன்ரபரி அருங்காட்சியம் இங்கு தான் இருக்கின்றது. 'Caroline bay park' என்ற பூங்கா ஒன்று கடற்கரையின் அருகில் இருக்கின்றது.நத்தார், ஆங்கில புதுவருட விடுமுறைகளில் இங்கு நடைபெறும் களியாட்ட விழா(Caroline Bay Carnival) ரிமாறுவில் பிரபல்யமானது. நாங்கள் இங்கு வந்த போது நவம்பர் மாதம். அன்றைய மழைப் பொழுதினை இந்தப்பூங்காவில் செலவிட்டோம். சிறுவர்கள், குழந்தைகள் விளையாடுவதற்கு ஏற்ற ஊஞ்சல் போன்றவை இங்கே இருந்தன. ரிமாறுவில் இருக்கும் தாய்லாந்து நாட்டு உணவகத்தில் இரவு உணவினை உண்டபின்பு விடுதியை அடைந்தோம். வெலிங்டன் விமான நிலையத்தில் இருந்து வெளிக்கிட்டு 3 நாட்கள் பயண முடிவில் அன்றைய இரவினை ரிமாறு விடுதியில் தங்கினோம். இந்தச் சுற்றுலாப்பயணத்தில் முக்கியமாக டனிடனில்(Dunedin) இருந்து வெளிக்கிடும் 'Taieri Gorge train journey' என்ற புகையிரதப்பயணத்தில் பயணிக்க விரும்பினேன். கோடை காலத்தில் (ஒக்டோபர் மாதம் முதல்) இரண்டு முறை இந்தப்புகையிரதம் காலை 9:30 மணிக்கும் மாலை 2:30 மணிக்கும் டனிடனில் இருந்து பயணிக்கும். பயண நேரம் 4 மணித்தியாலம். அதாவது 9:30க்கு பயணிக்கும் புகையிரதம் மதியம் 1:30க்கும், 2:30க்கு பயணிக்கும் புகையிரதம் மாலை 6:30க்கும் மறுபடியும் டனிடனை வந்தடையும். 4ம் நாள் இரவில் டனிடனிலும், 5ம் நாள் இரவில் கிறைஸ் சேர்ச்சில்(Christchurch) தங்குவதற்கும் முன்பதிவு செய்திருந்தேன். ரிமாறுவில் இருந்து ஒரு மணித்தியாலப் பயணத்தில் ஒமாறு(Oamaru) என்ற இடம் இருக்கிறது.
ஒமாறுவில் இருந்து ஒன்றரை மணித்தியாலப் பயண முடிவில் டனிடனை அடையலாம்.
அதாவது ரிமாறுவில் இருந்து டனிடன் செல்ல இரண்டரை மணித்தியாலம் தேவை. கிறைஸ் சேர்ச் ரிமாறுவில் இருந்து 2 மணித்தியாலத்தூரத்தில் இருக்கிறது. அதாவது டனிடனில் இருந்து கிறைஸ் சேர்ச் செல்ல 4 அரை மணித்தியாலம் பயணிக்க வேண்டும். இரவு நேரங்களில் தென் நியூசிலாந்தின் சில இடங்களில் பயணிப்பது கடினம். மலைகள், ஏரிகளினுடாக வளைந்து செல்லும் பாதைகளில் பயணிக்க வேண்டும். இதனால் 4ம் நாளின் இரவில் டனிடனில் தங்குவதினால், 4ம் நாள் மாலை 2:30 மணிக்கு புகையிரதப் பயணத்தினை மேற்கொள்ளலாம் என முடிவெடுத்தேன். டனிடனிலும், அருகில் இருக்கும் ஒட்டாகோ தீவகற்பத்திலும்(Otago Peninsula) சுற்றுலா செல்வதற்கு பல இடங்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும் பார்க்க 2,3 நாட்கள் தேவை. குறிப்பாக நியூசிலாந்தில் இருக்கும் ஒரே ஒரு கோட்டையான 'Larnach Castle'யும், 'Natures Wonders' என்ற சுற்றுலாவையும் செல்லவிரும்பினேன். சுற்றுலாத்தகவல் நிலையங்களில் பெற்ற புத்தகங்கள், இணையத்தளங்களின் மூலம் இவ்விடங்களைப் பற்றி ஒரளவு அறிந்து வைத்திருந்தேன். என்னுடன் பயணித்த ஒருவருக்கு டனிடனில் இருக்கும் சொக்கலட் தொழிற்சாலைக்கு செல்ல விரும்பி இருந்தார். இதனால் 4ம் நாள் காலையில் ரிமாறுவில் இருந்து காலை 8:30 மணிக்கே டனிடனை நோக்கி வெளிக்கிட்டோம். ரிமாறுவில் இருந்து டனிடன் செல்லும் வழியில் சுற்றுலாப்பயணிகள் விரும்பிச் செல்லும் புகழ்பெற்ற 'Moeraki Boulders' இருக்கின்றது. 5ம் நாள் நேரம் கிடைத்தால் டனிடனில் இருந்து திரும்பிவரும் போது இதனைப் பார்க்கலாம் என முடிவெடுத்தோம். டனிடனுக்கு உடனடியாக செல்ல நினைத்ததினால் அருகில் இருந்த எரிபொருள் நிலையத்தில் விசுக்கோத்து, சிப்ஸ் போன்றவற்றை வாங்கி உண்டபின்பு, இயற்கைக் காட்சிகளை இரசித்துக் கொண்டு டனிடனை நோக்கிப் பயணித்தோம்.
நியூசிலாந்தில் மனிதர்களை விட அதிகளவு செம்மறி ஆடுகள் இருக்கின்றன. செம்மறி ஆடுகளை விட அதிகளவு மாடுகள் இருக்கின்றன. பால்மா அதிகளவு உற்பத்தி செய்யும் நாடுகளில் நியூசிலாந்தும் ஒன்று.
ஒமாறுவிற்கும் டனிடனுக்கும் இடையில் பால்மெஸ்டன்(Palmerston) என்ற இடம் இருக்கிறது. பால்மெஸ்டனில் இருந்து டனிடனுக்கு செல்லும் பாதையின் இருபக்கமும் மஞ்சள் நிறப்பூக்களை அதிகமாகக் காணலாம். இதனால் இவ்விடம் அழகாக இருக்கும்.
கீழே உள்ள படத்தில் தூரத்தில் தெரியும் நகரம் தான் டனிடன். கிட்டத்தட்ட இரண்டரை மணித்தியாலப்பயண முடிவில் டனிடனை அடைந்தோம்.