எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.Wednesday, June 20, 2012

நியூசிலாந்து 50- ஆர்தர்பாசில் பார்த்த நீர்வீழ்ச்சி

புனாகைகியில் உள்ள புகழ்பெற்ற 'Pancake Rocks' க்கு சென்ற போது பார்த்தவற்றை நியூசிலாந்து பகுதி 6,7ல் விபரமாகச் சொன்னதினால், சென்ற 49வது பதிவில் நான் பெரிதாக விபரிக்கவில்லை. 2005ல் இங்கு சென்ற போது ஒரே ஒரு உணவகம் இருந்ததை பகுதி 6ல் சொல்லி இருந்தேன். இம்முறை சென்ற போது இன்னுமொரு உணவகம் அங்கே இருந்தது. எனினும் 2005ல் சென்ற உணவகத்துக்கு சென்று காலை உணவினை உண்டு விட்டு ஆர்தர்பாசினை நோக்கிப் பயணித்தோம். ஆர்தர்பாசில் இருந்து புனாகைகி வரை 2005ல் பயணித்ததினை பகுதி நியூசிலாந்து- 5 ல் சொல்லியிருந்தேன். இதனால் இம்முறை புதிதாக ஒன்றும் சொல்லுவதற்கு இல்லை. இம்முறை என்னால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கீழே இணைத்திருக்கிறேன்.
மதியம் 12 மணியளவில் ஆர்தர்பாசினை அடைந்தோம். 2005ல் பயணித்தபோது ஆர்தர்பாசில் ஒரே ஒரு தேனீர் கடை(Cafe) மட்டுமே இருந்தது. இப்பொழுது மேலும் ஒரு தேனீர்கடை இருந்ததைக் கண்டேன். அருகில் சுற்றுலாத்தகவல் நிலையம் அமைந்திருந்தது. இப்பகுதிகளில் கியா(KIA) என்று அழைக்கப்படும் பறவைகளைக் காணலாம்.
ஆர்தர்பாசில் சில நீர்வீழ்ச்சிகளைக் காணலாம். பல சுற்றுலாப்பயணிகள் நீர்வீழ்ச்சிகளைக் காண நடைபயணம் மேற்கொள்வார்கள்(bush walking). 2005ல் இங்கு வந்தபோது மழை பெய்து கொண்டிருந்ததினால் ஒரு நீர்வீழ்ச்சிகளையும் சென்று பார்க்கவில்லை. சுற்றுலாத்தகவல் மையத்தில் கேட்ட போது மிக அருகில் சுற்றுலாத்தகவல் மையத்தின் பின்னால் ஒரு சிறிய நீர்வீழ்ச்சி இருப்பதாகச் சொன்னார்கள்.அந்த நீர்வீழ்ச்சியை நோக்கி நடந்தோம்.
மதிய உணவினை தேனீர் கடையில் உண்டபின்பு அன்று இரவு தங்கும் ரிமாறு(Timaru) என்ற இடத்தினை நோக்கிப் பயணித்தோம். Arthur's Pass பூங்கா(Arthur's Pass National Park) மிகவும் பெரியது.இதனூடாக வாகனத்தில் பயணிக்க கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் தேவை. குறிப்பாக ஆர்தர்பாசில் இருந்து கிறைஸ்சேர்ச் நோக்கி செல்லும் போது அழகான இயற்கைக் காட்சிகளைக் காணலாம். இம்முறை ஆர்தர்பாசிற்கு வந்த போது காலநிலை நன்றாக இருந்ததினால் வாகனத்தினை அடிக்கடி நிறுத்தி இயற்கை அழகினைக் கண்டு இரசித்தோம். (2005ல் இங்கு வந்ததினை நியூசிலாந்து பகுதி 4ல் சொல்லியிருக்கிறேன். பார்க்கவும்)
இம்முறை நியூசிலாந்துக்குப் பயணித்த போது எனது புகைப்படக்கருவியின் வில்லை (Camera lens) எதோ ஒரு கீறல் ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான படங்களின் நடுவில் ஒரு புகார் போன்று ஒரு தோற்றம் இருப்பதனைக் காணலாம். இன்னுமொரு முக்கியவிடயம் இப்பதிவு நியூசிலாந்து பற்றிய எனது 50வது பதிவு.

Thursday, June 14, 2012

நியூசிலாந்து 49 - எத்தனை முறை சென்றாலும் கவரும் புனாகைகிப் பாறைகள்

'Murchison swingbridge'ல் இருந்து Inangahua ,Reefton நகரங்களினூடாக கிறேமவுத்தினை நோக்கிப் பயணிக்கத் தொடங்கினோம்.
ஆள் அரவமற்ற பாதைவழியாக மழையின் தூறலின் மத்தியில் பயணித்து கிட்டத்தட்ட மாலை 6 மணியளவில் கிறேமவூத்தினை அடைந்தோம்.
கிறேமவூத்தில் இருக்கும் இந்திய உணவகமொன்றில் அன்றைய இரவு உணவினை வாங்கி உண்டபின்பு, அன்று இரவு தங்கும் விடுதியை அடைந்தோம்.
மறு நாள் காலையில் அன்று இரவு தங்கும் ரிமாறு(Timaru) என்ற இடத்திற்கு செல்ல ஆயத்தப்படுத்தினேன். கிறைச் சேர்ச்சில்(Christchurch) இருந்து தெற்காக 2 மணித்தியாலமும் 15 நிமிடமும் பயணித்தால் ரிமாறுவினை அடையலாம்.
ஆனால் கிறேமவுத்தில்(Greymouth) இருந்து கிழக்கில் இருக்கும் கிறைச் சேர்ச் செல்ல 3 மணித்தியாலம் தேவை. கிறைச் சேர்ச் செல்லாமல் இடைவெளிப்பாதையினால் ரிமாறு செல்ல 4.30 மணித்தியாலம் தேவை.
என்னுடன் இம்முறை சிட்னியில் இருந்து பயணித்தவர்கள் 2005ல் நியூசிலாந்துக்கு என்னுடன் சுற்றுலா செல்லவில்லை. அவர்கள் புனாகைகிப்(Punakaiki) பாறைகளைப் பார்க்க விரும்பினார்கள். புனாகைகிப் பாறைகள் கிறேமவுத்தில் இருந்து வடக்கு நோக்கி 30 நிமிடப்பயணம் செல்ல வேண்டும். புனாகைகிப் பாறைகளைப் பார்த்து விட்டு ரிமாறு செல்ல 5.30 மணித்தியாலப் பயணம் செய்ய வேண்டும்.
என்றாலும் என்னுடன் பயணித்தவர்கள் விரும்பியதினால் மறுபடியும் புனாகைகி பாறைகளை நோக்கிப் பயணித்தேன். 2005ல் சென்ற போது பார்த்தவற்றை நியூசிலாந்து-5, நியூசிலாந்து -6 பகுதியில் எழுதியிருக்கிறேன். அம்முறை சென்ற போது மழை பெய்து கொண்டிருந்ததினால் புனாகைகி பாறைகளை அவசர அவசரமாகப் பார்த்தேன். இம்முறை காலநிலை நன்றாக இருந்தது. விடுதியில் இருந்து புனாகைகிப் பாறைகளை நோக்கிப் பயணித்தேன்.
புனாகையினை அடைந்ததும் வாகனத்தில் இருந்து இறங்கி பாறைகள் இருக்கும் இடத்திற்கு சென்றோம்.
அழகாக காட்சி அளிக்கும் புனாகைகிப் பாறைகள்.
ஒடுக்கமான பாதைகளினூடாக நடக்க வேண்டும்
2005ல் சென்ற போது மழை பெய்ததினால் ஓடி ஒடிப் பார்த்தேன். இம்முறை ஆறுதலாக சென்று பார்த்து இரசித்தேன். இம்முறை பார்க்கும் போது புதிதாகப் பார்ப்பது போல பிரமிப்பாக இவ்விடம் இருந்தது. எத்தனை முறை சென்றாலும் கட்டாயம் நியூசிலாந்தில் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று புனாகைகிப் பாறைகள். நியூசிலாந்து-5, நியூசிலாந்து -6 பகுதியில் புனாகைகிப் பாறைகளைப் பற்றி நான் விபரமாகச் சொன்னதினால் இப்பகுதியில் இப்பாறைகளைப் பற்றி விபரிக்கவில்லை.