எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.Thursday, December 04, 2008

வனுவாட்டு - பகுதி23 -கடலினுள் இருந்த அமெரிக்கா விமானத்தின் பாகங்கள்

படகோட்டி(சுற்றுலா வழிகாட்டி) மீன்கள் அதிகமாக உள்ள இடத்தில் படகை நிற்ப்பாட்டினார். நீச்சல் தெரிந்தவர்கள் நீரினுள் சென்று கடல்வளத்தினைப்பார்க்க, சுழியோடிகள் அணியும் கண்ணாடிகளை எங்களுக்கு படகோட்டி தந்தார். எனினும் கடல் அலைகள் அற்று தெளிவாக உள்ளதினால் படகில் இருந்தே கடலினுள் மீன்களினைப் பார்க்கக்கூடியதாக இருந்தது. படகோட்டி பாண்(வெதுப்பி)துண்டுகளை தர நாங்கள், அவற்றைக் கடலில் வீசினோம். பாண் துண்டுகளை நோக்கி மீன்கள் வந்தன.

வழிகாட்டி படகில் இருந்தவாறே தனது கைகளினால் ஒரு மீனைப் பிடித்துக்காட்டி, பிறகு அம்மீனைக் கடலில் இட்டார்.

படகு லெலெபாதீவின் இன்னுமொரு கரையினை நோக்கிச் சென்றது.

கடற்கரையில் கோழிகள்,குச்சுகளினைக் காணக்கூடியதாக இருந்தது.அக்கரையில் உள்ள ஒரு வீட்டினை அடைந்ததும், அங்கே எங்களுக்கு விசுக்கோத்துடன் தேனீரும் தந்தார்கள். அவ்வீட்டில் உள்ளோர் ஒலைகளினால் வேயப்பட்ட பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தார்கள். குறைந்தது ஒரு பொருளாவது வாங்கி அவர்களுக்கு உதவுமாறு சுற்றுலா வழிகாட்டி எங்களுக்குச் சொன்னார். பொருட்களும் மிகவும் மலிவு விலையில் இருந்தன.

அக்கிராமத்தினைவிட்டு வெளியே வந்து, படகில் இத்தீவினைச் சுற்றி வரும் போது வழிகாட்டி, எங்களுக்கு நீரினுள் பார்க்கக்கூடிய கண்ணாடியை அணியத் தந்து நீருக்குள் பார்க்கச் சொன்னார். பார்க்கும்போது அங்கே நீருக்கடியில் உடைந்த நிலையில் ஒரு விமானத்தின் பாகங்கள் தெரிந்தன. 2ம் உலகப் போரின் போது அங்கே விழுந்த அமெரிக்கா விமானத்தின் பாகங்கள் தான் அவை என்று வழிகாட்டி எங்களுக்குச் சொன்னார். அந்த விழுந்து உடைந்த விமானத்தின் பாகங்களினை கடலில் இருந்து எடுக்கும் செலவு அந்தக்காலத்தில் அதிகம் என்பதினால், உடைந்தபாகங்களினை வெளியே எடுக்க அமெரிக்கர்கள் அக்காலத்தில் முயற்சி செய்து பார்க்கவில்லை.

வழிகாட்டி எங்களை ஈவெட் தீவின் அருகில் படகை நிற்பாட்ட, எங்களை ஏற்றி வந்த வாகனம் எங்களுக்காக அங்கே நின்றது. மீன்பிடிக்கப் போனவர்களும் மீன் கிடைக்காத ஏமாற்றத்துடன் அவ்வாகனத்தில் இருந்தார்கள்.

ஈவேட் தீவுக்கும் லெலெபா தீவுக்கும் இடையில் பயணிகள் படகுச்சேவையினைக் கீழே உள்ள படத்தில் காண்கிறீர்கள்.

காலை 9 மணிக்கு லெலெபாத்தீவுக்கு சுற்றுலா சென்று மாலை 6மணிக்கு நான் தங்கியிருந்த விடுதிக்கு வந்தேன். நகரத்துக்கு சென்று அன்றைய இரவு உணவினை சீனர்களின் உணவகமொன்றில் உண்டேன். ஒருவருக்கு தரும் அவ்வுணவு இருவர் சாப்பிடக்கூடியதாகவும், மிகவும் உரூசியாகவும் இருந்தது.

Tuesday, December 02, 2008

வனுவாட்டு - பகுதி22 -குகைக்குள் பயணம்

லெலெபா தீவில் எங்களைக் கூட்டி வந்த சுற்றுலா வழிகாட்டி மதிய உணவுக்காகச் சமைக்கத் தொடங்க நான் கடலில் குளிக்கச்சென்றேன்.குளிக்கும் போது கடலின் அடியில் இருப்பதினைப்பார்க்க சுழியோடுபவர் அணியும் கண்ணாடியினை தந்தார்கள். அதனூடாக கடலின் அடியினைப் பார்த்தேன்.

அப்பொழுது கடலில் ஒரே ஆரவாரம் கேட்டது. ஒருபடகில் சிலர் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். தொலைக்காட்சியில் English survivors, French survivors னைப் பார்த்திருப்போம். படகில் திரிந்தவர்கள் French Survivors. அவர்களினை இத்தீவில் கொண்டு வந்து விடுவார்கள். அவர்கள் கொஞ்சக்காலம் வெளித் தொடர்பற்று இத்தீவில் சீவிக்க வேண்டும்.கனகாலம் இருப்பவருக்கு அதிக பணம் கிடைக்கும்.

சமைத்து முடிந்ததும் சுற்றுலா வழிகாட்டி, எங்களுக்கு அசைவ,சைவ உணவுகளுடன் சோற்றினையும் பரிமாறினார். அதன் பின்பு பழங்களும் தந்தார். மீன்பிடிக்க படகில் சென்றவர்களைப் பற்றி சென்ற பதிவில் உங்களுக்கு சொல்லியிருந்தேன். அவர்களுக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை. எனவே ஏமாற்றத்துடன் கரைக்கு வந்து உணவு உண்டதும் மீண்டும் மீன் பிடிக்கச் சென்றார்கள். அவர்கள் இத்தீவில் சுற்றுலா பார்க்க எங்களுடன் கலந்து கொள்ளவில்லை. மீன் பிடிக்கவே வந்தார்கள்.
நாங்கள் கிட்டத்தட்ட 3 மணித்தியாலம் அக்கரையில் இருந்து குளித்து இளைப்பாறியபின்பு( உணவு சமைக்க, அவ்விடத்தைச் சுத்தம் செய்ய சுற்றுலா வழிகாட்டிக்கு 3 மணித்தியாலம் எடுத்தது)படகின் மூலம் அத்தீவின் இன்னொரு கறைக்கு வந்தோம்.

அங்கே 5 நிமிடங்கள் மரங்களின் ஊடாக நடக்க குகை ஒன்றினை அடைந்தோம்.

குகைக்குள் செல்லச் செல்ல ஒரே இருட்டாக இருந்தது.

சுற்றுலா வழிகாட்டி கொண்டு வந்த மெழுகுதிரி வெளிச்சத்தின் உதவியுடன்,போகும் வழியில் நிலத்தில் இருந்த மெழுகுதிரிகளையும் வெளிச்சமாக்கி அவ் வெளிச்சத்தின் உதவியுடன் நடந்து சென்றோம்.

குகைக்குள் செல்லச் செல்ல உடலில் இருந்து வியர்வை பெருக்கெடுத்து ஓடியது. போகப்போக குகையின் உயரம் மிகவும் குறைவாகவும் பாதை ஒடுக்கமாகவும் இருந்தது.

இக்குகையில் சிலர் தங்கியிருந்த அடையாளங்கள் இருந்தன. சுற்றுலா வழிகாட்டி, இரவில் இக்குகையில் 'French Survivors' தங்கியிருந்தார்கள் என்று சொன்னார்.

படத்தில் தெரியும் கை அடையாளம் இத்தீவில் வாழ்ந்த மூதாதையர்களின் கை அடையாளம் என்று சுற்றுலா வழிகாட்டி எங்களுக்குச் சொன்னார்.

குகைக்குள் செல்லசெல்ல பாதையின் உயரம் குறையத் தொடங்கியது. இதனால் நாங்கள் தவழ்ந்து தான் செல்ல வேண்டிய நிலை எங்களுக்கு ஏற்பட்டது. அத்துடன் பாதையும் வளைந்து வளைந்து போய்க்கொண்டிருந்தது. சில நிமிடங்களில் பாதையின் முடிவில் சிறு துவாரத்தின் ஊடாக வெளிச்சம் தெரிந்தவுடன் மீண்டும் வந்த பாதை வழியாக, ஏற்றி வைத்த வெளிச்சத்தினை அணைத்துக் கொண்டு திரும்பி நடந்தோம். குகையினை விட்டு வந்ததும் அடர் மரங்களின் ஊடாக நடந்து வந்து மீண்டும் படகில் ஏறி, இத்தீவினைச் சுற்றி வரும் போது இன்னுமொரு குகையினையும் கண்டோம்.

அக்குகையின் உள்ளேயும் சென்று பார்க்கலாம். ஆனால் முதல் குகை போன்று இதனுள் நடப்பதற்கு ஏற்ற இலகுவான பாதை அங்கு இருக்கவில்லை.

Wednesday, November 26, 2008

வனுவாட்டு - பகுதி21 -லெலெபா(Lelepa)தீவில் பயணம்


ஈவெட்(Efate) தீவின் மேற்குப்பகுதியில் அமைந்திருக்கும் தீவுதான் லெலெபா தீவு. விடுதியில் காலை உணவு உண்டபின்பு, விடுதியின் வரவேற்பு அறையில் காத்திருக்க, எங்களை அழைத்துச் செல்ல வாகனம் வந்தது. அவ்வாகனம் இன்னொரு விடுதிக்கு சென்று அங்குள்ள சிலரையும் அழைத்துக் கொண்டு பயணித்தது. கிட்டத்தட்ட 35 நிமிடங்கள் பயணத்தின் பின்பு துறைமுகத்தை(Port Havannah harbor) அடைந்தோம். அங்கே படகுகள் இரண்டு எங்களுக்காகக் காத்திருந்தன. ஒரு படகில் இரண்டாவது விடுதியில் இருந்து வந்தவர்கள் ஏறி கடலில் மீன் பிடிக்கச் சென்றார்கள். நாங்கள் 2வது படகில் ஏறி லெலெபா தீவை நோக்கிப் பயணித்தோம். 10 நிமிடப் பயணத்தில் லெலெபா தீவை அடைந்தோம்.

கீழே உள்ள படத்தில் இருப்பவர் படகோட்டியாகவும் சுற்றுலா வழிகாட்டியாகவும் இருந்தார்.

கீழே உள்ள படத்தில் படகினைத்தள்ளுபவர் படகோட்டியின் மருமகன்.


இத்தீவில் இரண்டு கிராமங்கள் உள்ளது. அதனால் இரண்டு கிராமத்தலைவர்கள்.இத்தீவிற்கு நாங்கள் சென்றசமையத்தில் ஒரு கிராமத்தலைவர் இறந்து விட்டதினால், இத்தீவில் உள்ள மக்களில் பலர் இவரது வீட்டில் அஞ்சலி செய்யப் போய் விட்டார்கள். இவருக்குப் பிறகு இவரது மகன், பிறகு கிராமத்தலைவராக உள்ளார்.

இத்தீவை அடைந்ததும் ஒரு கரையில் இருந்து மரங்கள் உள்ள ஒற்றை அடிப்பாதைகளின் ஊடாக இன்னொரு கரைக்கு எங்களை சுற்றுலா வழிகாட்டி கூட்டிக் கொண்டு சென்றார். அவருடைய மருமகன் படகில் மறுகரையை நோக்கிச் சென்றார். நாங்கள் இறங்கிய கரையில் இருந்து ஒற்றையடிப்பாதையினூடாகச் செல்லும் போது அங்கு காணப்பட்ட மரங்கள், வேர்களினை மூலிகைகளாக, மருந்துகளாக அம்மக்கள் உபயோகிப்பது பற்றி சுற்றுலா வழிகாட்டி எங்களுக்கு விளங்கப்படுத்தினார். ஒரு மரப் பொந்தினைக் காட்டி அப்பொந்தில் தேங்காய் நண்டு இருக்கும் என்றும் சொன்னார். ஏன் தேவையில்லாமல் நண்டிடம் கடிவாங்குவது என்று நினைத்து அப்பொந்துப்பக்கம் செல்வதை நான் தவிர்த்தேன்.

நாங்கள் நடந்து அத்தீவின் இன்னுமொரு கரையினை அடைந்தோம். அங்கே சுற்றுலா வழிகாட்டியின் மருமகன் படகில் வந்திருப்பதைக் கண்டோம். சுற்றுலா வழிகாட்டி அங்கே எங்களின் மதிய உணவுக்காகச் சமைக்கத்தொடங்கினார்.அக்கரையில் உள்ள கொட்டில்களில் சிலர் இளைப்பாற சிலர் கடலில் குளிக்கச் சென்றார்கள்.Monday, November 24, 2008

வனுவாட்டு - பகுதி20 - எரகோர் குடாவில் ஒரு படகுப்பயணம்

நான் தங்கியிருந்த விடுதியான லீ லகுன்(Le Lagon Resort) இன் ஒருபக்கத்தில் உள்ள எரகோர் (Erakor )குடாவின் இருந்து இயந்திரப்படகில் எரகோரின் கரையோரமாக தினமும் காலை 10 மணி முதல் கிட்டத்தட்ட 2 மணித்தியாலம் பயணத்தினை லீ லகுன் விடுதியினர்
நடத்துகிறார்கள். முன்பு நான் குறிப்பிட்டது போல இயந்திரப்படகு என்பதினால் கட்டணம் இப்பயணத்துக்கு அறவிடப்படுகிறது. படகின் அடியில் சில பகுதி கண்ணாடியினால் செய்யப்பட்டுள்ளது.

அதனூடாக இக்குடாவில் உள்ள மீன்கள் உட்பட நீரின் கீழ் உள்ள வளங்களையும் பார்க்கலாம்.
படகில் செல்லும் போது எடுக்கப்பட்ட, நான் தங்கியிருந்த விடுதியான லீ லகுன் இடத்தின் புகைப்படங்கள்.படகில் பயணிக்கும் போது அழகிய பல வீடுகளினைப் பார்த்தேன்.வெள்ளைக்காரர்களும் சீனர்களும் இவ்வீடுகளில் வாழ்கிறார்கள்.


படத்தில் தெரிவது மெரிடியன் விடுதி (Le Meridien Resort)யின் ஒருபகுதி.

படகுப்பயணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

பசுபிக் சமுத்திரத்துடன் குடா நீர் இணைவதனைக் கீழே உள்ள படத்தில் காணலாம்.

Wednesday, October 22, 2008

வனுவாட்டு - பகுதி19 -இவெட் தீவின் கிழக்கு, தெற்குப் பகுதியில் உள்ள சில கிராமங்கள்


அடுத்ததாக வாகனத்தில் நாங்கள் என்ற Pang Pang Village கிராமத்தினூடாகச் சென்றோம். இக்கிராமத்தில் இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா இராணுவம் சுடுகலன்களினால் சுட்டு பயிற்சிகளினை மேற்கொண்டார்கள். சுடுகலன்கள் வெடிக்கும் போது 'Pang' 'Pang' என்று சத்தம் கேட்பதினால் அக்கிராமத்திற்கு Pang Pang என்ற பெயர் ஏற்பட்டது.இக்கிராமம் ஈவெட் தீவின் தென் கிழக்கில் அமைந்துள்ளது.

Pang Pangற்கு அடுத்ததாக உள்ள இடம் Forari. இங்கே உள்ள கண்ணிவெடியை, இப்பொழுதும் அமெரிக்காவில் "Mile a Minute Vines"என்ற பகுதியில் காணலாம். இந்தக்கண்ணி வெடியினை 2ம் உலகப்போரின் போது அமெரிக்காப்படைகள் வனு-அற்றில் இந்த இடத்தில்(Forari) உபயோகித்தார்கள். இக்கண்ணிவெடி பச்சோந்தியினைப் போல உருவமாற்ற மடையக்கூடியது(Camouflage).
Forari க்கு அருகில் உள்ள ' Le Cresionaire Farm ' என்ற இடத்தினைக் கடந்து செல்லும் போது சிறிய நீர்வீழ்ச்சி(Mini Cascades) ஒன்று பாலத்தின் அடியில் போய்க் கொண்டிருப்பதைப் பார்த்தோம். அந்த நீர் நிலையில் குளித்துக் கொண்டு எங்களுக்கு கை காட்டிக் கொண்டிருப்பவர்களை கீழே உள்ள படத்தில் காணலாம்.

அடுத்து வருகிற கிராமம் 'Eton Village'. இங்கே உள்ள வீடுகளில் பெரும்பாலானவை வனுவாட்டில் கிடைக்கப்படும் மூங்கில்களினால் வேயப்பட்ட சுவர்களினை உடையதாகவும் , மேற்ப்பகுதி 'Natangoora' என்ற இடத்தில் செய்யப்பட்ட கூறைகளைக் கொண்டதாகவும் இருக்கிறது.

வனுவாட்டு மக்கள் மரத்தினால் செய்யப்பட்ட படகில் சில ஆறுகளில் பயணம் செய்கிறார்கள்.

அடுத்ததாக எங்களது வாகனம் Banana Bay என்ற இடத்தில் நிற்க எங்களுக்கு உண்பதற்கு பழங்களும் குளிர்பானங்களும் தந்தார்கள். நான் போன எல்லா இடங்களிலும் வெட்டப்பட்ட பழங்களை வாழையிலையில் வைத்திருந்து இன்னொரு வாழை இலையினால் மூடப்பட்டிருப்பதைக் கண்டேன். வனுவாட்டில் இலையான்களின் தொல்லை அதிகம் என்பதினால் பழங்களை வாழை இழையினால் மூடுகிறார்கள்.
Banana Bay இல் இருந்து வெளிக்கிட்ட எமது வாகனம் அரை மணித்தியாலத்தில் எங்கள் விடுதியை அடைந்தது. காலை 9 மணிக்கு ஆரம்பமாகிய இவெட் தீவைச்சுற்றும் பயணம் மாலை 5 அரை மணிக்கு முடிவடைந்தது.
இப்பயணத்தின் போது ஒவ்வொரு கிராமங்கள் பற்றிய விவரங்களை அறிந்து கொண்டும் பயணித்தோம். விதிகளில் செல்லும் போது வித்தியாசமான மரங்களினால் அமைக்கப்பட்ட வேலிகள்,தென்னந்தோட்டங்கள், மாட்டுப்பண்ணைகள், நீர்னிலைகள், ஆலமரங்களினை அதிகளவில் கண்டோம்.