எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.Wednesday, September 29, 2010

நியூசிலாந்து 26 - உலகப் புகழ் பெற்ற மில்வேட் சவுண்டில் கப்பல் பயணம் ஆரம்பம்

'TripAdvisor' என்ற அமைப்பின் கணிப்பின் படி 2008ம் ஆண்டிற்கான உலகத்தில் சுற்றுலா செல்லும் இடங்களில் முதல் இடத்தைப் பிடித்த இடம் மில்வேட் சவுண்ட். நியூசிலாந்திற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவு மில்வேட் சவுண்டுக்குத் தான் செல்கிறார்கள். பிரபலமான எழுத்தாளரும் கவிஞருமான 'Rudyard Kipling' அவர்கள் 8வது உலக அதிசயமாக மில்வேட் சவுண்டினைச் சொல்லியிருக்கிறார். இந்த உலகப் புகழ் பெற்ற மில்வேட் சவுண்டில் கப்பல் பயணம் செய்ய கப்பலில் ஏறச் சென்றேன்.
கப்பல் செல்லும் பாதையினைக் கீழே உள்ள படத்தில் காணலாம்.

Anita bay, Dale point பகுதியில் கடலுடன் நீர் சங்கமிக்கிறது.

மில்வேட் சவுண்டில் கப்பலில் ஏற முன்பு புகைப்படம் எடுத்தார்கள். விரும்பினால் பயண முடிவில் அப்படத்தைக் காசு கொடுத்து வாங்கலாம் என்று சொன்னார்கள். இயற்கைக்காட்சிகள் மிக்க மலைகளினால் சூழப்பட்ட நீர்ப்பரப்பில் கப்பல் பயணித்தது. நான் கப்பலின் மேல்தட்டில் இருந்து கொண்டே இயற்கை அழகினை இரசித்தேன். மலைகளில் இருந்து வரும் நீர்வீழ்ச்சிகளை பல இடங்களில் காணக்கூடியதாக இருந்தது. எங்களது பயணம் கிட்டத்தட்ட இரண்டு மணித்தியாலப் பயணமாக இருந்தது.


கீழே உள்ள படத்தில் சுற்றுலாப் பயணிகள் செல்லும் இன்னுமொரு கப்பல்


குளிரினால் உடல் நடுங்கியது. கப்பலின் 2வது தளத்தில் உணவகங்கள் இருந்தன. ஆனால் கப்பலின் மேல்த்தளத்தில் இருந்து மில்வேட் சவுண்டின் இயற்கை அழகினை இரசித்துக் கொண்டு இருந்ததினால் உணவகங்களுக்கு நான் செல்லவில்லை.
மலை உட்சியில் இருந்து கீழ் நோக்கிப் பாயும் நீர்வீழ்ச்சிகள்


Thursday, September 23, 2010

நியூசிலாந்து 25 - ரி ஆனாவில் இருந்து மில்வேட் சவுண்ட் வரை

நான் அதிகமாக 'Staralliance' விமானங்களில் பயணிப்பதினால் எனக்கு நியூசிலாந்துக்குப் பயணிக்க இலவச நுளைவுச்சீட்டு கிடைத்தது. 'Staralliance' விமானங்களில் நான் 'Singapore airlines'ல் தான் அங்கத்தவராக இருக்கிறேன். இதனால் அவர்கள் மூலமாகத்தான் நான் இலவச நுளைவுச்சீட்டினைப் பெற முடியும். பயணம் செய்ய முதல் 2 மாதத்துக்கு முன்பே அவர்களுடன் தொடர்பு கொண்டால் தான் விரும்பிய நேரத்தில் பயணிக்க இலவச விமானச் சீட்டுக்களைப் பெறமுடியும். தென் நியூசிலாந்த்துக்குப் பயணிக்க விரும்பியதினால் சிட்னியில் இருந்து கிறைஸ் சேர்ச்சுக்கு சென்று வர சிங்கப்பூர் எயார்லைன்ஸின் மூலம் தொடர்பு கொண்டேன். நான் விரும்பிய நாட்களில் நியூசிலாந்தில் 7 முழு நாட்கள் நிற்கவே எனக்கு நுளைவுச்சீட்டுக் கிடைத்தது. வொக்ஸ் கிளேசியரும். மில்வேட் சவுண்டும் பார்க்கவே அதிகம் விரும்பியதினால் அதற்கு ஏற்றவாறு விடுதிகளை முன்பதிவு செய்திருந்தேன். ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 3 மணித்தியாலங்கள் பயணிப்பதற்கு ஏற்றவாறே விடுதிகளைத் தெரிவு செய்தேன். மில்வேட் சவுண்டில் நல்ல விடுதிகள் இல்லை. ரி- ஆனாவில் இருந்து கிட்டத்தட்ட 2 மணித்தியாலம் தூரத்தில் தான் மில்வேட் சவுண்ட் இருக்கிறது. ரி- ஆனாவில் இருந்து மில்வேட் சவுண்ட் சென்று திரும்பி வர 4 மணித்தியாலப் பிரயாணம் தேவை. 7ம் நாள் முடிவில் கிறைஸ் சேர்ச்சுக்கு செல்ல வேண்டும். ரி- ஆனாவில் இருந்து மில்வேட் சவுண்டுக்கு 4 மணித்தியாலம் சென்று வரவும், மேலும் 2 மணித்தியாலமும் 15 நிமிடங்களும் பயணித்து குயின்ஸ்டவுன் வரவும் அன்று 5ம் நாள் பயணிக்க மட்டும் 6 மணித்தியாலத்தையும் 15 நிமிடத்தையும் ஒதுக்கினேன்.

5ம் நாள் பயணம்.

ரி-ஆனாவில் இருந்து மில்வேட் சவுண்டுக்குச்செல்ல கிட்டத்தட்ட 2 மணித்தியாலம் பிரயாணிக்க வேண்டும்.

10 மணியளவில் மில்வேட் சவுண்டில் கப்பல் பயணம் செல்ல முன்பதிவினை 3ம் நாள் மாலை குயின்ஸ்டவுனில் உள்ள சுற்றுலாத் தகவல் மையத்தில் பதிந்திருந்ததினால், காலை 7மணியளவில் ரி-ஆனாவில் இருந்து வாகனத்தில் பிரயாணிக்க ஆரம்பித்தேன். ரி-ஆனாவில் உணவகங்கள் எல்லாம் அதிகாலையில் மூடப்பட்டிருந்தமையினால் மில்வேட் சவுண்டில்(Milford Sound) இருக்கும் உணவகங்களில் உண்ணலாம் என முடிவெடுத்தேன். எரிபொருள் நிலையம் ஒன்றும் மில்வேட் சவுண்டில் இல்லை ,ரி-ஆனாவில் தான் கடைசி எரிபொருள் நிலையம் இருக்கிறது . இதனால் எரிபொருள் நிலையத்தில் மகிழுந்துக்கு தேவையான பெற்றோலைப் பெற்றேன். எரிபொருள் நிலையத்தில் இருந்த விசுக்கோத்துக்கள் வாங்கி உண்டபின்பு மில்வேட் சவுண்டை நோக்கிப் பயணித்தேன்.

சுற்றுலாப்பயணிகள் பலர் மில்வேட் நடைப்பயணத்தில்( Milford Track) நடந்து செல்வார்கள்.

அதாவது இந்த மில்வேட் நடைப்பயணம் ரி-ஆனா ஏரியில் இருந்து ஆரம்பித்து மில்வேட் சவுண்டில் முடிவடையும். கரடு முரடான பாதையில் 53.5 கிலோமீற்றர்கள் நடக்க வேண்டும். சுற்றுலாப்பயணிகள் 3,4 நாட்களாக இயற்கைக்காட்சிகளைக் இரசித்துக்கொண்டு நடந்து முடிப்பார்கள். போகிற வழியில் இரவில் தங்கி விட்டு காலை எழுந்தபின்பு நடப்பார்கள். எனக்கு நேரம் கிடைக்காததினால் நான் வாகனத்தில் 2 மணித்தியாலம் சென்று மில்வேட் சவுண்டுக்கு சென்றேன். 53.5 கிலோமீற்றர் மகிழுந்தில் செல்ல 2 மணித்தியாலம் தேவைப்படுமா? என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால் மில்வேட் நடைப்பயணம் செல்லும் பாதையில் மகிழுந்தில் பிரயாணிக்க முடியாது. வேறு பாதையில் செல்ல வேண்டும்.

ரி- ஆனாவில் இருந்து மில்வேட் சவுண்டை நோக்கிப் பயணிக்கும் போது எனது புகைப்படக் கருவியினால் எடுக்கப்பட்ட புகைப்படங்களினைக் கீழே இணைத்திருக்கிறேன்.
மலைகளிலும், புற்தரைகளிலும் பனிக்கட்டிகள் இருந்தன.


போகும் வழியில் உள்ள ஏரியில் அருகில் உள்ள மலையின் தலைகீழான விம்பத்தினைக் காணக்கூடியதாக இருந்தது.

பனி படிந்த மலைகளினை போகும் வழியில் அதிகளவில் கண்டேன்.

பாதை குகையினூடாகச் சென்றது.

குகைக்குள் வெளிச்சமில்லை.

சில நிமிடப் பயணங்களின் பின்பு

மில்வேட் சவுண்டை அடைந்ததும் காலை உணவினை(sandwich) அங்கிருந்த உணவகம் ஒன்றில் வாங்கி உண்டபின்பு கப்பலை நோக்கிச்சென்றேன்.

Monday, September 13, 2010

நியூசிலாந்து 24 - ரி ஆனா ஒளிரும் புழுக்களின் குகை(Te-anau Glow worm cave)

ரி ஆனாவை(Te anau ) கிட்டத்தட்ட மாலை ஐந்து மணிக்கு அடைந்தேன். அருகில் இருக்கும் படகுத்துறைக்கு செல்ல அங்கே படகு ஒன்று காத்துக் கொண்டிருந்தது.

ஏற்கனவே குயின்ஸ்டவுனில் உள்ள சுற்றுலாத் தகவல் மையத்தில், ஒளிரும் புழுக்களின் குகைக்கான (Te-anau Glow worm cave) நுளைவுச்சீட்டினைப் பதிவு செய்து இருந்தேன். குயின்ஸ்டவுனில் நுளைவுச்சீட்டினைப் பெற முன்பு நான் இக்குகைக்குச் செல்ல நினைக்கவில்லை. சிட்னியில் இருந்து கிட்டத்தட்ட இரண்டரை மணித்தியாலப் பயணமுடிவில் வரும் Jenolan cavesக்குச் சென்றிருந்ததினால் ஒளிரும் புழுக்களின் குகைக்குச் செல்ல விரும்பவில்லை. ஆனால் ரி - ஆனாவில் நேரம் இருப்பதினால் குகைக்குச் முடிவு செய்தேன். ஒளிரும் புழுக்களின் குகைக்கான பிரயாணத்தில் முதலில் நாற்பத்தைந்து நிமிடங்கள் படகின் மூலம் Te Anau எரியின் ஒரு கரையில் இருந்து மறுகரைக்குச் செல்ல வேண்டும். படகின் மேல்தளத்தில் இருந்து கொண்டு ஏரியின் அழகினை இரசித்துக்கொண்டு பயணித்தேன். இப்படகில் கிட்டத்தட்ட ஐம்பதுக்கு மேற்பட்ட பயணிகள் என்னுடன் பயணித்தார்கள்.


மறு கரையினை அடைந்ததும் இயற்கைக்காட்சிகளைப் பார்த்தவாறு குகை இருக்கும் இடத்தை நோக்கி நடந்தோம்.
சில நிமிடங்களில் ஒரு மண்டபத்தை அடைந்தோம். எங்களை ஏழு,எட்டு குழுக்களாகப் பிரித்தார்கள். குகைக்குள் படகில் செல்ல வேண்டும். ஒரே நேரத்தில் இரண்டு படகுகள் தான் செல்வதினால், முதல் இரண்டு குழுக்களும் குகைக்குள் செல்ல, மற்றவர்களுடன் நானும் அம்மண்டபத்தில் இருந்தேன். அக்குகை பற்றியும்,அக்குகையில் உள்ள ஒளிரும் புழுக்களின் வரலாறுகள் பற்றியும் விளங்கப்படுத்தினார்கள். அம்மண்டபச் சுவற்றில் பல வரலாற்றுச் சம்பவங்கள் பதியப்பட்டிருந்தன.

நாங்கள் அவற்றைப் பார்வையிட்டோம். குடிப்பதற்கு தேனீரும், உண்பதற்கு விசுக்கோத்தும் தந்தார்கள். குகைக்குள் சென்றவர்கள் திரும்பிவர நான் இருந்த குழு குகைக்குள் சென்றது. குகைக்குள் புகைப்படம் எடுக்கக் கூடாது என்று அறிவித்திருந்தார்கள். புகைப்படம் எடுப்பதினால் அங்குள்ள ஒளிரும் புழுக்களின் தூக்கம் கலைந்து விடும் என்று சொன்னார்கள். நியூசிலாந்தில் ஒளிரும் புழுக்களின் தூக்கம் கலைந்து விடுவதினால் புகைப்படம் எடுக்கக்கூடாது என்று சொல்லுகிறார்கள். ஆனால் நான் பிறந்த மண்ணில் ????
குகைக்குள் புகைப்படம் எடுப்பது தடை செய்யப்பட்டதினால், இணையத்தில் இருந்து பெறப்பட்ட படங்களை இங்கு இணைத்திருக்கிறேன்.
நிலத்துக்கு அடியில் தான் குகை உள்ளது. கீழே செல்லப் படிகள் இருந்தன. குகைக்குள் மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. மெலிசான வெளிச்சத்தில் இரும்புக் கைபிடிகளைப் பிடித்துக் கொண்டு படிகளின் ஊடாக நடந்து சென்றோம்.

ஒன்றிரண்டு ஒளிரும் புழுக்கள் குகையில் இருந்தன. சில இடங்கள் மிகவும் குறுகலாக இருந்தன. பாறைகள் தலையினை இடிக்க வாய்ப்புக்கள் இருந்ததினால் அவதானமாக குனிந்து நடந்து செல்ல வேண்டும் என்ற எச்சரிக்கை அறிவுப்புகள் அங்கே இருந்தன. சில நிமிடங்கள் நடந்தபின்பு, குகைக்குள் சிறு ஓடை இருப்பதினை அவதானித்தோம். ஒடையில் மிகச்சிறிய படகு ஒன்று இருந்தது. அதில் கவனமாக ஒவ்வொரு சுற்றுலாப் பயணிகளையும் கையைப் பிடித்து ஏற்றினார்கள்.

எல்லோரும் படகில் ஏறி அமர,படகு வெளிக்கிட்டது. இப்படகு இயங்குவதற்கு துடுப்புக்கள் உபயோகிக்கப்படவில்லை. குகையின் சுவர்களில் குறுக்கும் நெடுக்குமாக கயிறு கட்டப்பட்டிருந்தது. அதனைப்பிடித்தவாறு படகோட்டி படகை இழுக்க, படகு அசைந்து சென்றது.

குகைக்குள் அப்பகுதியில் மின்விளக்கு பொருத்தப்படவில்லை. மின்விளக்கு பொருத்தப்படாததினால், குகைக்குள் செல்ல செல்ல ஒரே இருளாக இருந்தது. சில ஒளிரும் புழுக்களை குகைகளின் சுவர்களில் காணக்ககூடியதாக இருந்தன. படகு சில நிமிடங்கள் சென்றதும், படகோட்டி இனிஒருவரும் கதைக்கவேண்டாம், அமைதியாக இருக்கும் படி சொன்னார். எனென்றால் சில நிமிடங்கள் செல்ல, அதிகளவு ஒளிரும் புழுக்கள் இருக்கும் இடத்துக்கு படகு செல்லவுள்ளதினால், கதைப்பதினால் ஒளிரும் புழுக்களின் தூக்கம் கெட்டுவிடும். நாங்கள் அமைதியாக இருக்க, அதிகளவு ஒளிரும் புழுக்கள் இருக்கும் இடத்துக்குச் சென்றோம். குகையின் சுவர்களின் எல்லா இடங்களிலும் ஒளிரும் புழுக்கள் நிறைந்து காணப்பட்டன.

சில நிமிடங்களின் பின்பு மறுபடியும் படகின் மூலம் குகையினை விட்டு வெளியில் வந்தோம். பெரிய படகில் வந்த எல்லோரும் குகைக்குள் சென்று வந்த பின்பு, படகுத்துறையில் இருந்த படகில் மீண்டும் நாற்பத்தைந்து நிமிடப் பிரயாண முடிவில், ஆரம்பத்தில் படகு ஏறிய படகுத்துறை இடத்தை( Te-Anau)அடைந்தோம்.


ஒரு சீனா நாட்டு உணவகத்தில் அன்று இரவு உணவை உண்டபின்பு, அன்று இரவு தங்க வேண்டிய விடுதிக்கு சென்றேன்.

சிட்னியில் இருந்து குயின்ஸ்டவுன், மில்வெட் சவுண்ட் போன்ற இடங்களுக்குச் சென்ற எனக்குத் தெரிந்த பலர் ரி - ஆனாவில் உள்ள இக்குகைக்குச் செல்லவில்லை. புளுமவுண்டனில் உள்ள ஜெனோலான் குகைக்குச் சென்றதினால் செல்லவில்லை என்று சொன்னார்கள். ஆனால் Jenolan cavesல் படகுப்பயணம் இல்லை. ஒளிரும் புழுக்கள் இல்லை. அங்கு பார்ப்பது வேறு. இங்கு பார்ப்பது வேறு. கட்டாயம் செல்ல வேண்டிய இடங்களில் ஒன்று Te-anau Glow worm cave.

Wednesday, September 08, 2010

நியூசிலாந்து 23 - குயின்ஸ்டவுனில் இருந்து ரி ஆனா வரை

குயின்ஸ்டவுனில் இருந்து கிட்டத்தட்ட 2 மணித்தியாலமும் 15 நிமிடங்களும் பயணித்தால் ரி ஆனாவுக்குச் செல்லலாம். மதிய உணவை முடித்ததும் ரி ஆனாவை நோக்கிப் பிரயாணித்தேன்.

போகும் போது எனது புகைப்படக்கருவியினால் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கீழே காணலாம். ஏரி, மலைகள் உட்பட அழகிய இயற்கைக் காட்சிகளை இரசித்துக் கொண்டு பயணித்தேன்.