5ம் நாள் பயணம்.
ரி-ஆனாவில் இருந்து மில்வேட் சவுண்டுக்குச்செல்ல கிட்டத்தட்ட 2 மணித்தியாலம் பிரயாணிக்க வேண்டும்.

10 மணியளவில் மில்வேட் சவுண்டில் கப்பல் பயணம் செல்ல முன்பதிவினை 3ம் நாள் மாலை குயின்ஸ்டவுனில் உள்ள சுற்றுலாத் தகவல் மையத்தில் பதிந்திருந்ததினால், காலை 7மணியளவில் ரி-ஆனாவில் இருந்து வாகனத்தில் பிரயாணிக்க ஆரம்பித்தேன். ரி-ஆனாவில் உணவகங்கள் எல்லாம் அதிகாலையில் மூடப்பட்டிருந்தமையினால் மில்வேட் சவுண்டில்(Milford Sound) இருக்கும் உணவகங்களில் உண்ணலாம் என முடிவெடுத்தேன். எரிபொருள் நிலையம் ஒன்றும் மில்வேட் சவுண்டில் இல்லை ,ரி-ஆனாவில் தான் கடைசி எரிபொருள் நிலையம் இருக்கிறது . இதனால் எரிபொருள் நிலையத்தில் மகிழுந்துக்கு தேவையான பெற்றோலைப் பெற்றேன். எரிபொருள் நிலையத்தில் இருந்த விசுக்கோத்துக்கள் வாங்கி உண்டபின்பு மில்வேட் சவுண்டை நோக்கிப் பயணித்தேன்.
சுற்றுலாப்பயணிகள் பலர் மில்வேட் நடைப்பயணத்தில்( Milford Track) நடந்து செல்வார்கள்.

அதாவது இந்த மில்வேட் நடைப்பயணம் ரி-ஆனா ஏரியில் இருந்து ஆரம்பித்து மில்வேட் சவுண்டில் முடிவடையும். கரடு முரடான பாதையில் 53.5 கிலோமீற்றர்கள் நடக்க வேண்டும். சுற்றுலாப்பயணிகள் 3,4 நாட்களாக இயற்கைக்காட்சிகளைக் இரசித்துக்கொண்டு நடந்து முடிப்பார்கள். போகிற வழியில் இரவில் தங்கி விட்டு காலை எழுந்தபின்பு நடப்பார்கள். எனக்கு நேரம் கிடைக்காததினால் நான் வாகனத்தில் 2 மணித்தியாலம் சென்று மில்வேட் சவுண்டுக்கு சென்றேன். 53.5 கிலோமீற்றர் மகிழுந்தில் செல்ல 2 மணித்தியாலம் தேவைப்படுமா? என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால் மில்வேட் நடைப்பயணம் செல்லும் பாதையில் மகிழுந்தில் பிரயாணிக்க முடியாது. வேறு பாதையில் செல்ல வேண்டும்.
ரி- ஆனாவில் இருந்து மில்வேட் சவுண்டை நோக்கிப் பயணிக்கும் போது எனது புகைப்படக் கருவியினால் எடுக்கப்பட்ட புகைப்படங்களினைக் கீழே இணைத்திருக்கிறேன்.
மலைகளிலும், புற்தரைகளிலும் பனிக்கட்டிகள் இருந்தன.
போகும் வழியில் உள்ள ஏரியில் அருகில் உள்ள மலையின் தலைகீழான விம்பத்தினைக் காணக்கூடியதாக இருந்தது.
பனி படிந்த மலைகளினை போகும் வழியில் அதிகளவில் கண்டேன்.
பாதை குகையினூடாகச் சென்றது.
குகைக்குள் வெளிச்சமில்லை.
சில நிமிடப் பயணங்களின் பின்பு
மில்வேட் சவுண்டை அடைந்ததும் காலை உணவினை(sandwich) அங்கிருந்த உணவகம் ஒன்றில் வாங்கி உண்டபின்பு கப்பலை நோக்கிச்சென்றேன்.
No comments:
Post a Comment