எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.



Sunday, August 31, 2008

வனுவாட்டு - பகுதி15 -2ம் உலகப் போரில் வனுவாட்டில் இருந்த அமெரிக்கப்படைகள்

எரிமலைக்கற்கள் உள்ள 'VETETAP FIREWALK'(பகுதி14) இருந்து, இயற்கைக் காட்சிகளினைப் பார்த்தவாறு பயணத்தினை தொடர்ந்தோம்.

பயணத்தின் போது 2ம் உலகப்போரில், அமெரிக்கா இராணுவம் பாவித்துக்கைவிட்ட இராணுவ இயந்திரத்தினை மரங்களுக்கிடையே கடலில் கண்டோம்.

எமது வாகனம் பிரதான வீதியில் இருந்து(போட்விலாவினைத் தவிர்ந்து ஈவேட் தீவில் ஒரே ஒரு பிரதானவிதிதான் இருக்கிறது. அதுவும் குன்றும் குழியுமாக உள்ளவிதி), திரும்பி புற்கள் உள்ள பாதைகளின் ஊடாக சென்றது.

சில நிமிடப் பயணங்களின் பின்பு வாகனம் 2ம் உலகப்போர் அரும் பொருட் காட்சியகம் (World War II Relics Museum) என்ற இடத்தினை அடைந்தது.

அங்கே 2ம் உலகப்போரில் அமேரிக்காப்படைகள் உபயோகித்து கைவிட்டுச் சென்ற, துருப்படைந்த தற்பொழுது பாவிக்க முடியாத மோட்டார்கள், எறிகணைகளினைப் பார்க்கக்கூடியதாக இருந்தது. வரைபடங்கள், புகைப்படங்கள், அருகில் உள்ள ஆழம் குறைந்த ஏரியில் விழுந்து உடைந்த விமானத்தினைப் பார்த்தவர்களின் சாட்சியங்கள்,விமானத்தின் சில பாகங்கள் போன்றவற்றினையும் பார்த்தோம். மேலதிக விளக்கங்களையும் சுற்றுலா வழிகாட்டி எங்களுக்குத் தந்தார்.
2ம் உலகப்போரில் 1942ம் ஆண்டில் யப்பான் படைகள் வனுவாட்டின் அருகில் உள்ள சொலமன் தீவுகளைக் கைப்பற்ற, அமெரிக்காப்படைகள் வனுவாட்டில் மேமாதம் 1942ல் தளம் அமைத்தார்கள். யப்பான் விமானம் ஒரே ஒரு முறை தான் வனுவாட்டில் குண்டினைப் போட்டது. அக்குண்டினால் ஒரு மாடு மட்டுமே உயிர் இழந்தது. பிறகு அவ்விமானம் அமெரிக்காப்படைகளினால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
அருகில் உள்ள ஆழம் குறைந்த ஏரியில் விழுந்த விமானத்தின் பகுதிகளினைப் பார்ப்பதற்கு ஏரியில் படகில் செல்ல வேண்டும்( போய் வர 1 மணித்தியாலம் எடுக்கும்). ஈவெட் தீவில் சுற்றி வரும் இச்சுற்றுலாவில் இப்பயணம் இடம் பெறவில்லை. அப்படிப் பார்க்கவேண்டும் என விரும்பினால் இதற்கு 1200 வனுவாட்டுப் பணம் மேலதிகமாகச் செலுத்த வேண்டும். அத்துடன் விமானத்தினைக் கிட்டச்சென்று பார்ப்பதற்கு நீரினுள், அடிக்கு நீந்திச் செல்லக்கூடிய ஆற்றல் இருக்க வேண்டும். இதனால் எங்களுடன் வந்தவர்கள், இதற்கு செல்வதற்கு பெரிதாக விருப்பம் தெரிவிக்கவில்லை.
இந்த ஆழம் குறைந்த ஏரிப்பகுதியின் அருகில் உள்ள புற்களில் ஈழத்தில் யாழ்ப்பாணத்தில் காணப்படும் தொட்டாச்சினுங்கி என்ற புற்களையும் காணக்கூடியதாக இருந்தது.

மீண்டும் பிரதான வீதியை அடைந்த வாகனத்தில் எங்களை சிறிய 3 குன்றுகள் இருந்த இடத்துக்குக் கூட்டிக்கொன்று சென்றார்கள். ஒவ்வொரு குன்றும் முறையே U,S,A என்ற ஆங்கில எழுத்துக்கள் வடிவில் அமைந்திருந்தன. யப்பான் விமானப்படைக்கு குழப்பம் விளைவிப்பதற்காகவே(Psychological Pain) அந்தக் குன்றுகளினை அமெரிக்காப்படைகள் அமைத்தனர்.
பிறகு வாகனத்தில் பயணம் சென்று அமெரிக்கப்படைகள் அமைத்து, உபயோகித்த (தற்பொழுது கைவிடப்பட்ட) விமான ஒடுபாதையினை அடைந்தோம். முன்பு வென்னீர் ஊற்று உள்ள நீர்ப்பரப்பினை கற்களினாலும், மண்களினாலும் முடி, B52 வகையிலான குண்டு வீச்சுவிமானங்கள் ஒடுவதற்கு ஏற்றவாறே இவ் ஓடு பாதையினை அமைத்தார்கள். இப்படியான ஒடுபாதை, தற்காலத்தில் உலகில் மிகவும் சிறிய விமானங்கள் ஒடுவதற்கு உபயோகப்படுத்தப் படுகிறது. இவ் ஒடு பாதையில் விமானம் எத்திசையில் இருந்து இறங்குவது பற்றியும் விளங்கப்படுத்தினார்கள்.

Tuesday, August 26, 2008

வனுவாட்டு - பகுதி14 -தீ மிதித்தல்(VETETAP FIREWALK)

இவெட் தீவைச் சுற்றி வரும் பயணத்தில் Taniliou Havana Harborல் இருந்து மீண்டும் பயணித்தோம்.




தொடர்ந்து பயணத்தின் போது 2ம் உலகப்போரில் அமெரிக்காப்படைகளினால் குளிப்பதற்கு கட்டப்பட்ட, தற்பொழுது ஒருவரும் பாவிக்கமுடியாத நிலையில் பழுதடைந்துள்ள கேணி ஒன்றினைக் காட்டினார்கள்.

அதனைப்பார்த்துவிட்டு சில நிமிடங்கள் பயணம் செய்ய 'VETETAP FIREWALK' என்ற இடத்தினை அடைந்தோம். அங்கே செம்பரத்தம் பூவினை ஒரு கூடையில் வைத்திருந்த பெண் ஒருவர் எங்களுக்கு காதில் சூடுவதற்கு செம்பரத்தம் பூக்களைத் தந்தார். நாங்கள் ஒரு கொட்டில் இருக்க அதற்கு முன்னால் உள்ள எரிமலைக்கற்களின் மேல் விறகுகள் இட்டு, நெருப்பினை மூட்டினார்கள். நன்றாக எரிந்ததும் சாம்பலினை அகற்ற ஒருவர் அவ்விடத்தினை நோக்கிவந்தார்.


மேலாடை அணியாமல், ஒலைகளினால் வேயப்பட்ட ஆடையினை அணிந்து, தென்னம் பொச்சினைத் தலையில் சூடி நடந்து வந்தவர், எரிமலைக்கற்களின் மேல் நடந்தார்.

பெரும்பாலான சுற்றுலாக்களை வனு-அற்று நாட்டைச் சேர்ந்தவர்களே நடாத்துகிறார்கள். ஆனால் நான் சென்ற ஈவெட் தீவைச்சுற்றி வரும் இச்சுற்றுலாவினை அவுஸ்திரெலியா நாட்டவர்(படத்தில் பின்னுக்கு நிற்பவர்) வனுவாட்டு மக்களைக்கொண்டு நடாத்துகிறார்.

அந்த அவுஸ்திரெலியா நாட்டைச்சேர்ந்தவர் 1 முறை இந்த எரிமலைக்கற்களில் நடந்ததாகவும் சொன்னார். அதற்கு மனதினைத் தைரியமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்றார். எங்களுடன் வந்திருந்த ஒருவருக்கும் எரிமலைக்கற்களில் நடக்கிற எண்ணம் இருக்கவில்லை. நான் கொஞ்சம் முயற்சி செய்யலாம் என நினைத்து மெதுவாக எரிமலைக் கற்களில் காலை வைத்தேன். சாடையாகச் சுட ஒரே ஒட்டமாக எரிமலைக் கற்களினூடாக ஓடினேன். ஒரே கைதட்டல் கிடைத்தது. பிறகு அங்கிருந்து மீண்டும் திரும்பி எரிமலைக் கற்களில் ஊடாக வேகமாக ஒடி வந்தேன். சாடையான சூடாகத் தான் எனக்குத் தெரிந்தது. அவர்கள் சொல்வது போல பயங்கர சூடு அல்ல. எதோ நெருப்புக்குள் நடந்து சாதனை படைத்து விட்டு திரும்பிவிட்டேன் என்று என்னுடன் வந்திருந்த வெள்ளைக்காரர்கள் என்னைப் பாராட்டினார்கள்.

Thursday, August 21, 2008

வனுவாட்டு - பகுதி13 - Efate(இவெட்) தீவைச்சுற்றி ஒரு நாள் பயணம்


போட்விலாவில் இருந்து மணிக்குட்டின் திசையாக குளிரூட்டப்பட்ட வாகனத்தில் பிரயாணத்தை ஆரம்பித்தோம். 1940ம் ஆண்டில் தான் முதன் முதலாக அமெரிக்காப் படைகளினால் இத்தீவினைச்சுற்றி உள்ள இந்த ஒரே பாதை அமைக்கப்பட்டது. போட்விலாவில் மட்டும் தான் நல்ல தார் வீதியினைக் காணலாம். மற்றைய இடங்களில் குண்டும் குழியுமான தார் இல்லாத கரடு முரடான பாதைகள் தான் இருக்கும். கரையோரங்களில் தான் வாகனங்கள் போகக்கூடிய பாதைகள் உண்டு. சுற்றுலாவும் கரையோரங்களினை அண்டியதாகவே இருந்தது. போகும் போது வேறு விடுதிகளில் இருந்தும் சிலர் எங்களுடன் இணைந்தார்கள்.


போகும்போது ஏற்கனவே குறிப்பிட்ட Mele(பகுதி6),Hideaway Island(world underwater post office)(பகுதி6),குறிப்பிடாத Le Lepa Island, Moso island,Devils Point, Port villa Harbour போன்றவற்றின் இயற்கைக் காட்சிகளினை வாகனத்தில் இருந்து பார்த்துக் கொண்டு பயணம் செய்தோம்.

படத்தில் கடலின் நடுவே தெரியும் நிலப்பரப்பு HIDEAWAY ISLAND


வாகனத்தில் இருந்து இயற்கைக்காட்சிகள் பார்த்துக்கொண்டே Le Lepa landing என்ற இடத்துக்கு வந்தோம். இங்கிருந்து தான் Le Lepa தீவுக்கு இலவசப்படகுச் சேவைகள் நடைபெறுகிறது.

அடுத்ததாக எங்களது வாகனம் Taniliou Havana Harbor என்ற இடத்தில் நிற்க, அங்கே பிஸ்கட்டுக்களும், குளிர்பானங்களும் தந்தார்கள்.


முன்பு அமெரிக்கா இராணுவத்தின் கடல் விமானம் வந்து தங்குமிடமாக இவ்விடம் இருந்தது(Original water base for the amphibious Catalina sea planes).

அங்கே ஒரு கொட்டிலில் 2ம் உலகப்போரின் போது அமெரிக்காப் படைகள் பாவித்த எறிகணைகள், சன்னங்கள், கொக்கா கோலா போத்தல்களைக் காணக்கூடியதாக இருந்தது. அமெரிக்காவின் ஒவ்வொரு மாகாணத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட கொக்காகோலாப் போத்தல்களினை, அந்தக்கொக்கா கோலா போத்தல்களின் மூடிகளில் இருந்து அறியக்கூடியதாக இருந்தது. மூடிகளில் NY, NJ,NH,CT,CA(US State Codes)என மாகாணங்கள் குறிக்கப்பட்டிருந்தது. படத்தில் உள்ளவர் தான் இவற்றினைச் சேகரித்து இக்கொட்டிலில் வைத்திருந்து எங்களுக்கு விளங்கப் படுத்தினார்.

இவ்விடத்துக்கு அருகில் சுற்றுலாப்பயணிகள் உபயோகிப்பதற்காக இருந்த மலசலகூடத்தினை கீழே உள்ள படத்தில் காணலாம். இம்மலசலகூடம் மக்கள் வாழும் குடியிருப்புக்களில் அமைந்திருக்கிறது. இங்கு சென்ற எங்களுடன் வந்த வெள்ளைக்காரர்கள் நிரம்ப அவதிப்பட்டார்கள்.

அருகில் உள்ள வீடுகளில் பார்த்தால் பெரும்பாலோர் மர நிழலில் இருந்து கதைத்துக்கொண்டும், படுத்துக்கொண்டும் இருந்தார்கள். இவர்கள் எல்லா நேரமும் வேலைக்கு போவதில்லை. சில மணித்தியாலங்கள் வேலைக்குப் போய்விட்டு (தோட்டவேலை அல்லது மீன்பிடிப்பு) அதில் கிடைக்கும் உணவுகளினை உண்டு மிகுதி நேரங்களில் ஒய்வெடுத்து பொழுதைப் போக்கி வாழ்கிறார்கள். பெரும்பாலான மக்கள் ஆடம்பரமாக இங்கு வாழ்வதில்லை. தேவைக்கு மேல் ஆசைப்படுவதுமில்லை. இதனால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். உலகில் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழும் நாடாக பி.பி.ஸியினால் (கருத்துக் கணிப்பின் போது) வனுவாட்டு நாடு தெரிவு செய்யப்பட்டுள்ளது.(பகுதி11)

Monday, August 18, 2008

வனுவாட்டு - பகுதி12 - நீர் வாழ் உயிரினங்கள் உள்ள இடம்

இங்கு வனுவாட்டில் பல சுற்றுலா நிறுவனங்களின் உதவியுடன் சுற்றுலா செல்லலாம். Adventures in Paradise என்ற நிறுவனம் பல சுற்றுலாக்களினை நடாத்துகிறார்கள்.அத்துடன் இவர்கள் விமான நிலையத்தில் இருந்து, தங்கும் விடுதிகளுக்கு பயணிகளைக் கூட்டிக் கொண்டு செல்கிறார்கள் (பயணிகளிடம் இதற்கு பணம் அறவிடுவதில்லை. விடுதிகளிடமிருந்து தான் பணத்தைப் பெறுகிறார்கள்).

சில சுற்றுலா நிறுவனங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பல சுற்றுலாக்களை குறைந்த விலையில் நடாத்துகிறார்கள். அதாவது தனித்தனியே 2 அல்லது மூன்று இடங்களுக்கு செல்வதற்கு செலவிடும் பணத்தை 2 அல்லது 3 சுற்றுலாவையும் ஒரே நிறுவனத்தில் ஒரே நாளில் சென்றால் பணத்தின் செலவைக்குறைக்கலாம். Horizon tours மூலம் போட்விலா நகரம்(பகுதி 2ல் விபரித்திருக்கிறேன்),எரகொர்(Erakor village -Namo Nana Kaljarel Vilij -பகுதி 5ல் விபரித்திருக்கிறேன்),BLUE WATER ISLAND RESORT ஆகிய மூன்றையும் பார்க்க ஒரே நாளில் 3500 வாற்றுக்கள் தேவைப்பட்டது. தனித்தனியே சென்று இருந்தால் குறைந்தது 6000வாற்றுக்கள் தேவைப்பட்டிருக்கும்.(நான் இந்நாட்டுக்கு சென்றபோது ஒரு அவுஸ்திரெலியா வெள்ளி கிட்டத்தட்ட 80 வனுவாட்டு வாற்றுகளுக்கு சமனாக இருந்தது.)

போட் விலாவில் இருந்து 30 நிமிடங்கள் வாகனத்தில் பிரயாணித்தால் நீல நீர் (BLUE WATER)என்ற இடத்திற்கு செல்லலாம். உள்ளூர்வாசிகள் Blue Hole என்றும் சொல்வார்கள். இந்த இடத்தில் தான் BLUE WATER ISLAND RESORT உள்ளன. இங்கே உள்ள நீர் வாழ் உயிரினங்கள் உள்ள இடத்தில்(aquarium) ஆமைகள்,சுறா மீன்கள் உட்பட மீன்கள், நண்டுகள் உள்ளன. இங்கே ஆமைகளுக்கு சுற்றுலாப்பயணிகள் உணவு ஊட்டலாம். நானும் பப்பாசிப் பழத்தை ஆமை ஒன்றுக்கு ஊட்டினேன்.









Thursday, August 14, 2008

வனுவாட்டு சுற்றுலா - பகுதி11 -உலகில் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழும் நாடு

பெரும்பாலான வனுவாட்டு மக்கள் தங்களது தோட்டங்களில் வேலை செய்து, அதில் கிடைக்கும் உணவினையும், மீன்பிடித்து கிடைக்கும் உணவினையும் உண்கிறார்கள். உண்டபின்பு மர நிழலில் பாய்களினை விரித்துப்படுக்கச் சென்று விடுவார்கள். சிலர் மர நிழலில் இருந்து அரட்டை அடிப்பார்கள். சிலர் கடலிலும், குளம் குட்டைகளிலும் நீந்தியும், குளித்துக்கொண்டும் இருப்பார்கள். வேறு வேலைகளுக்குப் போவதில்லை. உணவு தேடுவதும், உண்டபின் கவலையற்று, மிகவும் மகிழ்ச்சியாகப் பொழுதினைப் போக்காட்டுவார்கள். மற்றைய நாட்டு மக்கள் அதிகமாக ஆசைப்பட்டு பணத்தினைத் தேட நாள் பூராவும் உழைக்கிறார்கள். கடைசியில் காசு வரும். ஆனால் அவர்களுக்கு மகிழ்ச்சி வராது. ஆனால் வனுவாட்டு மக்களில் பலர் பணத்தின் மேல் அதிக ஆசைப்பட்டவர்கள் அல்ல. இருப்பதினைக் கொண்டு சந்தோசமாக வாழ்பவர்கள்.உலகில் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழும் நாடாக பி.பி.சி யினால் (கருத்துக் கணிப்பின் போது) வனுவாட்டு நாடு தெரிவு செய்யப்பட்டுள்ளது.





மகிழ்ச்சிக்கான காரணிகள் எவை? (ஆங்கிலத்தில்)
http://news.bbc.co.uk/1/hi/programmes/from...ent/7427768.stm
http://news.bbc.co.uk/1/hi/magazine/5172254.stm


மேலதிக தகவல்கள்
http://news.bbc.co.uk/1/hi/world/asia-paci...les/1249790.stm
http://news.bbc.co.uk/1/hi/world/asia-pacific/6295546.stm

வனுவாட்டினைப்பற்றி அறிந்த சில விடயங்கள்.

வனுவாட்டில் இரண்டு விதமான பாம்புகள் இருக்கிறது. ஆனால் அவை விசமற்ற பாம்புகள். சிலந்திகளும் விசமற்றவை. கடவுள் வனு-அற்றின் மீது பாசம் கொண்டதினால் தான் விசமுள்ள ஊர்வனங்களினை வனு-அற்றில் படைக்கவில்லை என்று எனக்கு ஒரு உள்ளூர் வாசி சொல்லியிருந்தார்.

இங்குள்ள மக்கள் அதிகமானோர் வீடுகளில் பன்றிகளை வளர்க்கிறார்கள்.இலங்கையில் திருமணத்தின் போது பெண்வீட்டாரினால் மாப்பிள்ளைக்கு சீதனம் வழங்குவது போல வனு-அற்றில் பெண்வீட்டார்கள், மணமகனுக்கு தந்தமுள்ள மிகவும் பெரிய பன்றியினைத் திருமணத்தின் போது சீதனமாகக் கொடுப்பார்கள்.

வனுவாட்டுக்கடலில் Malekula என்ற தீவுக்கருகில் 2005ம் ஆண்டு ஜுன் மாதம் நியூசிலாந்தினைச் சேர்ந்த 7 வயதுச் சிறுமி பெரிய சுறாவினால் தாக்கப்பட்டார். ஆனால் வனுவாட்டின் முக்கிய தீவான இவெட் தீவைச் சுற்றியும்,அருகில் உள்ள தீவுகளைனைச் சுற்றியும் சுறாக்கள் வருவது இல்லை.

விடுதியில் இருக்கும் போது நான் இருந்த கதிரை 1 நிமிடம் ஆடுவது போலத்தென்பட்டது. விடுதியில் விசாரிக்க அங்குள்ளவர்கள் 'எதாவது தீவில் நில அதிர்வு ஏற்பட்டிருக்கும், இது இங்கு அடிக்கடி நடைபெறும்' என்று சர்வ சாதாரணமாகச் சொன்னார்கள்.போட்விலாவினைச் சுற்றிப்பார்த்துக்கொண்டு வரும் போது படத்தில் தண்ணீரில் தெரியும் குன்று "2001ல் நடந்த நில அதிர்வின் போது பக்கத்து மலையில் இருந்து பிரிந்து வீதியில் உருண்டு தண்ணீரில் விழுந்தது.. நல்லகாலம் இரவு என்பதினால் ஒருவரும் அவ்வீதியாகச் செல்லவில்லை" என்றார்கள். போட்விலா துறைமுகத்திற்கு அருகில் இக்குன்று இருக்கிறது.


வனுவாட்டில் உள்ள பாடசாலைகளுக்கு சில வெளி நாடுகளும், ஐரோப்பிய யூனியனும் நிதி உதவி செய்கின்றன.

வனுவாட்டில் 'Vanuatu Daily Post' என்ற ஆங்கிலபத்திரிகை மட்டுமே வெளிவருகிறது.

இங்கு 'Shell','BP, Mobil' ஆகிய 3 எரிபொருள் நிலையங்கள் இருக்கின்றன.

ஜூலை 30ம் திகதி சுதந்திர நாளாகக் கொண்டாடப்படுகிறது.

Monday, August 11, 2008

வனுவாட்டு சுற்றுலா - பகுதி10 -கண்ணாடிப் படகில் பயணம்

போட் விலா சந்தைக்கு அருகில் உள்ள கடற்பரப்பில் தண்ணீருக்குள் இருக்கும் அடிப்பகுதி கண்ணாடியினால் செய்யப்பட்ட படகில்(SEMI-SUBMARINE BOAT)அரை மணித்தியாலம் பயணம் செய்தேன். கடலினுள் இருக்கும் மீன்கள், கடல்வளங்களினை அடிப்பகுதியில் இருந்து பார்க்கலாம். படத்தில் தெரிவது கடலிற்கு வெளியே தெரியும் படகின் மேற்பகுதி. படத்தில் தெரியும் நிலப்பரப்பில் அமைந்திருப்பது Iririki Island Resort.

படகில் (SEMI-SUBMARINE BOAT) சென்ற போது நான் கடலின் அடியில் பார்த்தவற்றைக் கிழே உள்ள படங்களில் காணலாம்.