எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.



Tuesday, October 26, 2010

நியூசிலாந்து 29 - மில்வேட் சவுண்டில் இருந்து குரொம்வெல் வரை

'underwater observatory'க்கு சென்று கடல் உயிரினங்களைப் பார்த்த பின்பு படிகளினூடாக மேலே வந்து கப்பலுக்காகக் காவல் இருந்தோம். சில நிமிடங்களில் கப்பல் ஒன்று வந்தது. கப்பலின் மேல் தளத்துக்கு சென்று இயற்கைக்காட்சிகளை இரசித்தேன்.


கப்பல் பயணம் முடிவடைந்ததும், மில்வேட் சவுண்டில் காலை உணவு உண்ட இடத்தில் sandwichனை வாங்கி உண்டபின் குயின்ஸ்டவுனை நோக்கிப் பயணித்தேன். அன்றைய இரவு தங்குவதற்கு குயின்ஸ்டவுனில் மூன்றாம் நாள் பயண முடிவில் தங்கியிருந்த விடுதியில் பதிவு செய்திருந்தேன். மில்வேட் சவுண்டில் இருந்து ரி-ஆனாக்குச் செல்ல இரண்டு மணித்தியாலம் எடுக்கும். ரி-ஆனாவில் இருந்து குயின்ஸ்டவுனுக்குச் செல்ல மேலும் இரண்டு மணித்தியாலமும், பதினைந்து நிமிடங்களும் தேவை. ஆக மொத்தம் நான்கு மணித்தியாலமும், பதினைந்து நிமிடங்களும் தேவை.தென் நியூசிலாந்தில் பெரும்பாலான இடங்களில் இருள முதல் பயணிப்பது நல்லது. மலைகளினூடாக இருளில் பயணிப்பது நல்லதல்ல. வந்த பாதையினால் தான் திரும்பிச் செல்ல வேண்டும். ஏற்கனவே நியூசிலாந்து பதிவு 23, 25ல் குயின்ஸ்டவுனில் இருந்து மில்வேட் சவுண்ட்வரை சென்றபோது பார்த்தவற்றை விபரித்திருப்பதினால் இங்கு நான் மறுபடியும் விபரிக்கவில்லை.


மாலை ஆறு மணியளவில் குயின்ஸ்டவுனை அடைந்தேன். குயின்ஸ்டவுனில் மூன்றாம் நாள் இரவு தாய் நாட்டு உணவகமொன்றில் உணவை உண்டதினால், அன்றைய இரவு வட இந்திய உணவகமொன்றில் உணவை உண்டேன். அருகில் இருந்த சுற்றுலாத் தகவல் மையத்தில் மறு நாள் செல்லவுள்ள 'Cromwell','Omarama' போன்ற இடங்களில் என்ன பார்க்கலாம் என்று வினாவினேன். அங்கு பார்ப்பதற்கு பெரிதாக இடங்கள் இல்லை என்று சொன்னார்கள். மறு நாள் இரவு Twizelல் தங்க பதிவு செய்திருந்தேன்.

6ம் நாள் பயணம்

ஆறாம் நாள் காலை விடுதியில் உணவினை உண்டபின் (இவ்விடுதியில் தான் மூன்றாம் நாள் தங்கி இருந்தேன். இவ்விடுதியில் தங்குபவர்களுக்கு இலவசமாக காலை உணவு வழங்கினார்கள்) எனது பயணத்தினை டுவைசலை(Twizel) நோக்கி ஆரம்பித்தேன். 'Cromwell','Omarama' போன்ற இடங்களின் ஊடாகப் பயணிக்க வேண்டும். குயின்ஸ்டவுனில் இருந்து ஒமரமாவுக்குச்(Omarama) செல்ல இரண்டு மணித்தியாலம் தேவை. இரு இடங்களுக்கும் இடையில் இருப்பது குரொம்வெல்(Cromwell)

குயின்ஸ்டவுன் விடுதியில் இருந்து டுவைசலை நோக்கிச்செல்லும் போது கிட்டத்தட்ட பத்து நிமிடப் பயணமுடிவில் ஒரு பாலத்தினைக் காணலாம். இப்பாலத்தின் மேல்தான் பயணிக்க வேண்டும். அப்பாலத்தில் இருந்து சிலர் கால்களைக் கையிற்றினால் கட்டப்பட்ட நிலையில் கீழே பள்ளத்தாக்கினுள் குதித்தார்கள்(Bungy Jump). பள்ளத்தாக்கினுள் ஏரி ஒன்று ஒடிக் கொண்டிருந்தது. கால்கள் கையிற்றினால் கட்டப்பட்டு இருப்பதினால் தலை கீழாக விழ வேண்டும்.




குதிப்பதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். ஏன் காசைக் குடுத்து சித்திரவாதைப் பட வேண்டும் என நினைத்து தொடர்ந்து பயணித்தேன்.

ஐம்பது நிமிடங்களில் குரொம்வெல்(Cromwell) என்ற இடத்தை அடைந்தேன். அங்கு அப்பிள், பியர்ஸ் போன்ற பழங்களின் சிலைகளை வீதியில் கண்டேன்.


அங்கே உள்ள சுற்றுலா தகவல் மையத்தில் குரொம்வெலில் பார்க்கக்கூடிய இடங்கள் எவை என்று கேட்க, அங்கே பொதுவாக வைன் தோட்டம் இருப்பதாகவும் வைன்(Wine -திராட்சைப் பழச் சாற்றினால் செய்யப்படும் குடிவகை) தோட்டத்திற்கு சுற்றுலா செல்லலாம் என்றும் சொன்னார்கள். அவ்விடத்தில் பார்க்கக்கூடிய வேறு இடங்கள் இல்லை என்பதினாலும் சிட்னிக்கு வெளியே உள்ள Hunter Valleyயில் ஏற்கனவே பெரிய வைன் தோட்டங்களைப் பார்த்ததினாலும் டுவைசலை நோக்கிப் பயணித்தேன்.

Monday, October 18, 2010

நியூசிலாந்து 28 -மில்வேட் சவுண்ட் underwater observatory

கப்பல் நீரின் உள் இருப்பதைப் பார்க்கக்கூடிய(underwater observatory ) இடத்தை அடைந்தது. இவ்விடம் Harrison Cove என்ற இடத்தில் இருக்கிறது. இந்த observatoryக்குச் செல்ல நுளைவுச்சீட்டு வைத்திருப்பவர்களை அங்கே இறக்கி விட்டு கப்பல் பயணித்தது. நான் நுளைவுச்சீட்டினை வைத்திருந்ததினால் நீரின் அடியில் இருப்பதைப் பார்க்க சென்றேன். வட்டவடிவில் அமைக்கப்பட்ட அவ்விடத்தின் மேற்பகுதியில் இருந்து அடிப்பகுதிக்கு செல்ல படிக்கட்டுக்கள் இருந்தன. மேற்பகுதியில் இருந்து கீழ்ப்பகுதி 10.4 மீட்டர் நீளமானது. படிக்கட்டின் ஊடாக அடியினை அடைந்ததும் நீருள் இருப்பதினைக் கண்ணாடியினூடாகக் காணக்கூடியதாக இருந்தது. நீர்த்தாவரங்கள், நீர் உயிரனங்களைப் பார்த்தேன்.

















Tuesday, October 05, 2010

நியூசிலாந்து 27 - மில்வேட் சவுண்ட்(Milford Sound) கப்பல் பயணத்தில் பார்த்த அழகிய இயற்கைக் காட்சிகள்

தொடர்ந்து மில்வேட் சவுண்டில் கப்பலில் பயணிக்கும் போது எனது புகைப்படக் கருவியினால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.


Anita bay, Dale point பகுதியில் கடலுடன்(Tasman Sea) நீர் சங்கமிப்பதைக் கீழே உள்ள படத்தில் காணலாம்.




நியூசிலாந்துப் பயணத்தில் சில முக்கிய பயணங்களின் போது சுற்றுலாப் பயணிகளைத் தனித்தனியே அல்லது அவர்களுடன் வந்தவர்களோடு சேர்ந்து புகைப்படம் எடுப்பார்கள். அப்பயணம் முடிவடைந்து வரும் போது , காட்சிப்படுத்தப் பட்டிருக்கும் அப்புகைப்படங்களை எங்களுக்குப் பிடித்தால் காசு குடுத்து வாங்கலாம். அப்படங்களுடன் அவர்களின் இணையத்தள முகவரியையும் தருவார்கள். அம்முகவரியில் நாங்கள் பிரயாணம் செய்த நாளை தெரிவு செய்து, அந்நாளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பார்ப்பதன் மூலம் எங்களது படங்களையும் தேடி எடுக்கலாம் அல்லது புகைப்படத்தின் இலக்கத்தின் மூலம் இலகுவாகப் புகைப்படத்தை இணையத்தில் இருந்து பெறலாம். நான் ஏற்கனவே விபரித்த குயின்ஸ்டவுனில் பிரயாணித்த இரு வேகப் படகுப் பயணத்தின் போது எடுக்கப் பட்ட புகைப்படங்கள், குயின்ஸ்டவுன் gondolaவில் எடுக்கப்பட்ட படங்களை இவ்வாறே பணம் குடுத்துப் பெற்றேன்.

மில் வேட் சவுண்டில் கப்பலில் பிரயாணிக்கும் போது ஒரு சிறு வேகப்படகில் ஒருவர் எமது கப்பலை நோக்கி வேகமாக வந்தார். மில்வேட் சவுண்ட் கப்பலில் ஏறும் பொழுது எங்களை புகைப்படம் எடுத்தார்கள். அப்புகைப்படங்களின் பிரதிகளைத் தருவதற்காகவே அவர் வேகமாக எங்களை நோக்கி வந்தார். நான் கப்பலின் மேல் தட்டில் இருந்து, பிரயாணம் முடியும் வரை இயற்கைக்காட்சிகளை இரசிக்க விரும்புவதினால் கீழ்த்தட்டுக்கு செல்ல விரும்பவில்லை. பயணம் முடிவடைந்து புகைப்படத்தைக் கேட்டபோது, நான் உடனடியாக வராததினால் எனக்கு புகைப்படம் வாங்க விருப்பமில்லை என்று தாங்கள் திருப்பிக் கொடுத்து விட்டதாகவும், புகைப்படத்தை இணையத்தில் தேடிப்பார்த்து வாங்கும்படி சொன்னார்கள். சிட்னி வந்ததும் இணையத்தில் தேடி ஒருவாறு கண்டு பிடித்து அப்படத்தை கணனியில் பிரதி எடுத்தேன். இலவசமாக எடுக்கக் கூடியதாக இருந்தது. தேவையில்லாமல் காசு குடுத்து மற்றைய புகைப்படங்களை குயின்ஸ்டவுனில் வாங்கி விட்டேன்.

தொடர்ந்து மில்வேட் ஒலியில் கப்பலில் பிரயாணிக்கும் போது கடல்சிங்கங்களையும் (Sea Lion)கண்டேன்.




அழகிய நீர்வீழ்ச்சி



சில நிமிடப் பயண முடிவில் கப்பல், நீரினுள் இருப்பதைப் பார்க்கக்குடிய(underwater observatory ) இடத்தை அடைந்தது.