எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.



Thursday, November 24, 2011

நியூசிலாந்து 42 -மால்பொரோ சவுண்ட்(Marlborough Sounds)

மால்பொரோ சவுண்டினூடாக(Marlborough Sounds) வெலிங்கடனில் இருந்து பிக்டனை நோக்கிக் கப்பலில் பயணிக்க வேண்டும். எனது நியூசிலாந்து அனுபவ இத்தொடரின் பகுதி 26ல் இருந்து 29 வரை மில்வேட் சவுண்ட்டில்(Milford Sound) பயணித்ததினை சொல்லியிருந்தேன். இரண்டு பயணங்களிலும் என்னை அதிகம் கவர்ந்தது மில்வேட் சவுண்ட். அழகிய இயற்கைக் காட்சிகளைக் கொண்டது மில்வேட் சவுண்ட்.
கப்பலில் ஒரு சிறிய திரை அரங்கும் இருந்தது. அங்கு திரையிடப்படும் திரைப்படத்தினைப் பார்க்க கட்டணம் செலுத்த வேண்டும். சிறுவர்கள் விளையாட சிறு விளையாட்டு இடம், உணவகம், கடை , இணையம் என பல வசதிகளை செய்திருந்தார்கள்.

Monday, November 21, 2011

நியூசிலாந்து 41 -வெலிங்டனில் இருந்து பிக்டன் வரை

விமானம் இரவு 11. 30 க்கு வெலிங்டன் விமான நிலையத்தினை அடைந்தது. முன்பு பாடசாலையில் படிக்கும் போது சமுகக்கல்வி ஆசிரியர் ஒருவர் வெளினாட்டு நகரங்களின் பெயர்களை சொல்லுமாறு வகுப்பில் கேட்க நானும் சிட்னி, வெலிங்டன், இலண்டன் என்று பதில் அளிக்க ஆசிரியர் இவனுக்கு எப்ப பார்த்தாலும் சினிமா ஞாபகம் தான் என்று திட்டியது ஞாபகத்துக்கு வந்தது. யாழ்ப்பாணத்தில் இருந்த வெலிங்டன் திரையரங்கினைத் தான் சொல்கிறேன் என்று அவர் நினைத்திருந்தார். நான் துடுப்பாட்டப் போட்டிகளின் செய்திகளை ஆர்வமாகப் பார்க்கும் பழக்கம் இருப்பதினால் துடுப்பாட்டம் நடைபெறும் இடங்களில் ஒன்றான நியூசிலாந்தின் தலை நகர் வெலிங்கடனையும் எனக்கு தெரிந்த நகரங்களில் ஒன்றாக அப்பொழுது சொன்னேன்.

விமான நிலையத்தில் இருந்து விடுதிக்கு செல்ல இரவு 12.30 மணியாகிவிட்டது. மறு நாள் அதிகாலையில் எழும்பி வெலிங்டன் துறை முகத்தினை நோக்கிப் பயணித்தேன். ஏற்கனவே சிட்னியில் இருக்கும் போது ,கப்பலில் பயணிக்க முன் பதிவு செய்திருந்தேன். நான் பதிவு செய்த கப்பல் 10.25 மணியளவில் தான் தென் நியூசிலாந்தில் உள்ள பிக்டன்(Picton) நகரினை நோக்கிப் பயணிப்பதாக இருந்தது. கப்பல் பயணிக்க கிட்டத்தட்ட 45 நிமிடங்களுக்கு முன்பாகவே(9.40) பயணிகள் துறைமுகத்தில் நிற்க வேண்டும். கப்பலில் வாகனத்தினை ஏற்றி செல்லும் போது வாகனத்துக்கு மேலதிகமாக பணம் கட்ட வேண்டும். வாடகைக்கு வாகனத்தினை வெலிங்டன் விமான நிலையத்தில் முதல் நாள் இரவு எடுத்திருந்தேன். கப்பல் துறை முகத்திலே வாகனத்தினை திருப்பி தருவதாகவே பதிவு செய்திருந்தேன். இந்த நியூசிலாந்து சுற்றுலாவில் மொத்தம் 8 நாட்களுக்கும் ஒரே வாகனத்தில் சென்றிருக்கலாம். ஆனால் அப்படி செல்வதிலும் பார்க்க வெலிங்டன் விமான நிலையத்தில் இருந்து வெலிங்டன் துறைமுகத்துக்கு செல்ல ஒரு வாகனத்தையும், பிக்டன் துறை முகத்தில் இருந்து 7 நாட்கள் தென் நியூசிலாந்தினைப் பார்த்த பின்பு மறு படியும் பிக்டன் துறை முகத்துக்கு செல்ல 2 வது வாகனத்தினையும், வெலிங்டன் துறைமுகத்தில் இருந்து மறு நாள் வெலிங்டன் விமான நிலையம் வரை செல்ல 3வது வாகனத்தினையும் பதிவு செய்தேன். கப்பலில் வாகனத்தினை கொண்டு செல்வது அதிக பணம் என்பதினால் இவ்வாறு பதிவு செய்தேன். பொதுவாக நான் Hertz,Avis, Europcar போன்றவர்களிடம் தான் வாடகை வாகனங்களினைப் பெறுவதுண்டு. இவற்றினை வாடகைக்கு எடுப்பதினால் Air miles pointsனை பெறலாம். அத்துடன் ஒரு இடத்தில் வாடகைக்கு வாகனத்தினை எடுத்தால் வேறு இடங்களில் உள்ள அவ்வாகனநிலையங்களில் அவ்வாகனத்தினை திருப்பிக் கொடுக்கலாம்.


வெலிங்டனில் இருந்து பிக்டன் வரை Interislander ,bluebridge என்ற இரண்டு கப்பல்கள் பயணிக்கின்றது. நான் Interislander தான் பயணித்தேன். நியூசிலாந்தின் வடக்கு தீவில் இருந்து 3 மணித்தியாலம் கப்பலில் பயணித்தால் தான் தெற்கு தீவின் உள்ள பிக்டன் நகரை அடையலாம். வெலிங்டனில் இருந்து பிக்டனுக்கு செல்லும் போது, கடைசி ஒரு மணித்தியாலம் புகழ் பெற்ற Marlborough Sounds என்ற பிரதேசத்திற்கூடாக பயணிக்க வேண்டும்.