எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.Wednesday, August 25, 2010

நியூசிலாந்து 21- Kawarau Jetல் படகுப்பயணம்

4ம் நாள் பயணம்
எனது பயணத்தின் போது தங்கியிருந்த விடுதிகளில் காலை உணவினை உண்பதற்கு மேலதிகமாக 10 - 20 நியூசிலாந்து வெள்ளிகள் கொடுக்கவேண்டும். அப்பணத்தினை விட குறைந்த பணத்துக்கு வெளியில் உள்ள உணவகங்களில் சுவையான உணவுகளை உண்ணலாம் என்பதினால் காலை உணவினை பயணத்தின் போது வெளியில் உள்ள உணவகங்களில் உண்டேன். ஆனால் நான் தங்கியிருந்த குயின்ஸ்டவுன் விடுதியில் தங்குமிட வாடகையுடன் காலை உணவினையும் தந்தார்கள்(அதாவது காலை உணவு இலவசம்). காலை உணவினை விடுதியில் உண்டபின்பு( இதே விடுதியில் தான் நான் 5ம் நாள் பயணமுடிவில் தங்கினேன்)Kawarau Jet என்ற வேகமாகச் செல்லும் படகில் செல்லும் இடத்துக்கு புறப்பட்டேன். இதற்கான நுளைவுச்சீட்டினை ஏற்கனவே 3ம் நாள் இரவு குயின்ஸ்டவுனில் உள்ள சுற்றுலா தகவல் மையத்தில் வாங்கியிருந்தேன். சென்ற பதிவில் சொல்லியிருந்தேன்.

மேலே உள்ள படம் விடுதியில் இருந்து படகு வெளிக்கிடும் இடத்துக்கு செல்லும் போது எடுக்கப்பட்டது.

சிட்னியில் இருக்கும் போது, குயின்ஸ்டவுனில் சென்றால் Shotover Jet என்ற வேகப்படகில் செல்லத்தான் விரும்பியிருந்தேன். பல்வேறு விளம்பரங்களில், காணொளிகளில் இப்படகுப் பயணம் பற்றிச் சொல்லி இருந்தார்கள். ஆனால் குயின்ஸ்டவுனில் நான் சென்ற சுற்றுலா தகவல் மையத்தைச் சேர்ந்தவர்கள், Kawarau Jet படகுப்பயணம் நன்றாக இருக்கும். Shotover Jet விட நீண்ட தூரமும், அதிக நிமிடங்களும் Kawarau Jetல் பயணிக்கலாம். அத்துடன் Kawarau Jet படகில் பிராயணித்து முடிந்ததும், கடலின் அடியில் சுற்றிவர கண்ணாடியினால் அமைக்கப்பட்ட அறைக்கு கூட்டிச் செல்வார்கள். அவ்வறையில் இருந்து கடலினுள் தெரியும் மீன்கள், கடல் வளங்களைப் பார்க்கலாம். அத்துடன் இரு படகுப்பயணச்சீட்டின் விலைகளில் Kawarau Jetவின் விலைதான் குறைவு என்றும் சொன்னார்கள். இதனால் தான் நான் Kawarau Jetனைத் தெரிவு செய்தேன். ஆனால் Kawarau Jet படகில் செல்வதினை விட Shotover Jet படகில் செல்வது தான் நன்றாக இருக்கும் என்று நான் தங்கியிருந்த குயின்ஸ்டவுன் விடுதியில் வேலை செய்பவர்களில் ஒருவர் சொன்னார்.

படகு வெளிக்கிடும் இடத்துக்கு சென்ற போது நேரம் கிட்டத்தட்ட காலை 8 மணியாக இருந்தது. காலை 9மணிக்கு Kawarau Jetல் பயணிக்க முன்பதிவு செய்ததினால்,நேரம் இருப்பதினால் அருகில் இருக்கும் குயின்ஸ்டவுனில் உள்ள கடைகள் இருக்கிற இடங்களுக்குச் சென்று வரத்தீர்மானித்தேன்.9மணிக்கு முன்பாகவே படகுப் பிரயாணம் ஆரம்பிக்கும் இடத்துக்கு சென்றோம். நீர் உட்புகாத மேலாடையினை(Rain coats jacket)அணியத்தந்தார்கள். புகைப்படங்கள் எடுத்தார்கள். படகில் ஏறி அமர்ந்ததும் மறுபடியும் படங்கள் எடுத்தார்கள். கீழே உள்ள படகில் தான் நான் பிரயாணித்தேன். இப்படகில் நான் இருக்கிறேன். சிவப்பு நிற மேலாடை அணிந்தவர் தான் படகோட்டி.
படகுப்பயணம் முடிய விருப்பம் இருந்தால் படங்களைக் காசு கொடுத்து சுற்றுலாப் பயணிகள் வாங்குவார்கள். சென்ற பதிவில் நான் பதிந்த, நான் சென்ற குயின்ஸ்டவுன் கொண்டலாவிலும் புகைப்படம் எடுத்தார்கள். பயண முடிவில் படங்களைப் பெற்றுக் கொண்டோம். நியூசிலாந்தில் பெரும்பாலான முக்கிய சுற்றுலாக்களில் சுற்றுலாப் பயணிகளை இப்படிப் படம் பிடிப்பார்கள்.
படகில் செல்லச்செல்ல பயங்கர குளிராக இருந்தது. நீர் உட்புகாத ஆடை அணிந்திருந்தாலும் வேகமாகச் செல்லச் செல்ல ஏரி நீர் முகத்தில் அடிக்க முகம் குளிராக இருந்தது. அத்துடன் கைகளினால் படகின் கம்பியினைப் பிடிக்கும் போது குளிரினால் கை விரைக்கத் தொடங்கியது. நான் 2005 செப்டம்பர் மாதம் இறுதிக் கிழமைகளில் இந்த நியூசிலாந்துப் பயணத்தை மேற்கொண்டேன். அவ்வருடத்தில் அக்டோபர் மாதம் 1 ம்திகதி தான் கோடைகால நேரமாற்றம் செய்திருந்தார்கள். வேகமாகச் சென்ற படகு 180 பாகையில் வேகமாக திரும்பி பிரயாணித்தது.

கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் படகு வேகமாக மலைகளின் அருகிலும், செடி, கொடிகளின் கீழாகவும் பிரயாணித்தது.

Monday, August 23, 2010

நியூசிலாந்து 20- மெளரி(Maori) நடனம்

2005ம் ஆண்டில் நான் சென்ற இந்த நியூசிலாந்து சுற்றுலாவில் 7 நாட்களுக்குள் முக்கியமாக வொக்ஸ்கிளேசியரையும், மில்வேட் ஒலியையும் பார்ப்பதற்காகவே எனது பயண ஒழுங்குகளை அமைத்திருந்தேன். இதனால் தான் 3ம் நாள் அன்று வொக்ஸ்கிளேசியரில் இருந்து வெளிக்கிட்டு குயின்ஸ்டவுனை அடைய நான்கரை மணித்தியாலம் பயணம் செய்தேன். 5ம் நாளில் மில்வோட் ஒலியைப் பார்ப்பதாக முடிவு செய்திருந்தேன். 4ம் நாளில் குயின்ஸ்டவுனில் வேகப் படகில் பயணம், Queenstown gondolaக்கும் செல்ல நினைத்திருந்தேன். இரவு ரி ஆனாவில் தங்க முடிவு செய்திருந்தேன். குயின்ஸ்டவுனை(Queenstown) அடையும் போது கிட்டத்தட்ட மாலை 6 மணியாகிவிட்டது. குயின்ஸ்டவுனில் நான் தங்கியிருந்த விடுதியிற்கு செல்லும் பாதை அறிய, குயின்ஸ்டவுன் வரைபடம் பெற அருகில் இருந்த சுற்றுலா தகவல் மையத்துக்கு சென்றேன்.1ம், 2ம் நாட்களில் இரவு தங்கியிருந்த கொகிரிகா, வொக்ஸ் கிளேசியரில் 6 மணிக்குப் பிறகு பார்ப்பதற்குப் பெரிதாக ஒன்றும் இருக்கவில்லை. ஆனால் குயின்ஸ்டவுனில் அன்று இரவு குயின்ஸ்டவுன் cable car -gondolaக்கு செல்லலாம். அங்கே மெளரி நடனம் பார்க்க முடியும் என்று சுற்றுலா தகவல் மையத்தில் சொன்னார்கள். அன்று cable car -gondolaக்கு செல்வதற்கும், மறுநாள் (4ம் நாள்) குயின்ஸ்டவுனில் வேகப் படகில் பயணிப்பதற்கும், 4ம் நாள் இரவு செல்லும் ரி ஆனா குகைக்குக்கு செல்வதற்கும், 5ம் நாள் மில்வோட் ஒலியில் படகில் பயணிப்பதற்கும் நுளைவுச்சீட்டினை முன்பதிவு செய்தேன். விடுதிக்கு சென்று உடமைகளை வைத்தபின்பு குயுன்ஸ்டவுன் skyline க்கு சென்றேன். மலையின் அடியில் இருந்து மலை உச்சிக்கு கம்பிகையிற்றினால்( cable car -gondola) மேலே செல்லவேண்டும்.
மலை உச்சியைக்கு சென்றதும் உச்சியில் இருந்து குயின்ஸ்டவுனின் அழகை இரசித்தேன்.


மலை உச்சியில் உணவகமும், மலை ஊச்சியில் இருந்து கீழே செல்லும் பாதையில் சறுக்கிக் கொண்டு செல்லும் விளையாடும் இடமும், நியூசிலாந்துப் பழங்குடியினர் ஆடும் ஆட்டம் நடைபெறும் இடமும் இருந்தன.

நியூசிலாந்துப் பழங்குடியினரை மெளரி(Maori)என்று அழைப்பார்கள்.அவர்களின் மொழிகளில் உரத்த குரலில் பாடி ஆடும் நடன நிகழ்வினை இங்கு காணலாம்.
இங்கேயுள்ள மெளரி மக்களது கடவுளின் சிலையினை கீழே இணைந்திருக்கின்ற படத்தில் காணலாம்.

மலை உச்சியில் இருந்து இறங்கிய பின்பு இரவு குயின்ஸ்டவுனில் உள்ள உணவகங்களுக்கு சென்று பார்த்தேன். பெரும்பாலான உணவகங்களில் மக்கள் நிரம்பி வழிந்து கொண்டிருந்தார்கள். தாய்லாந்து உணவகம் ஒன்றுக்கு சென்றேன். அங்கும் மக்கள் நிரம்பி வழிந்து சிலர் வரிசையில் இடம் கிடைக்கும் வரை நின்றார்கள். நானும் இடம்கிடைக்கும் வரை வரிசையில் நின்று 10,15 நிமிடங்களின் பின்பு எனக்கு இடம் கிடைத்தது. உணவை உண்டதும் அன்று இரவு தங்கும் விடுதிக்கு சென்றேன். விடுதி ஏரிக்கரையின் அருகில் இருந்தது.

Thursday, August 19, 2010

நியூசிலாந்து 19- வானகாவில் இருந்து குயின்ஸ்டவுன் வரை

நேரம் செல்லச் செல்ல முடிவில்லாமல் பாதை மேலே போய்க் கொண்டிருந்தது. நேரமும் மாலை 4 மணியாகி விட, இனி மேலே சென்றால் இருளில் தான் திரும்பி வர வேண்டும். இரவுப் பயணம் ஆபத்தானது. இருளமுதல் குயின்ஸ்டவுன் செல்ல வேண்டும் என்பதினால் திரும்பி போக முடிவெடுத்தேன். ஆனால் திரும்பிச் செல்ல வாகனத்தைத் திருப்புவதற்கு சிறிய இடமே இருந்தது. அப்படி திருப்பும்போது மறைவில் இருந்து வேறு வாகனங்கள் வந்தால் இடிபடும் அபாயமும் இருப்பதினால், நன்றாகத் திருப்பக்கூடிய இடம் வரை மேலே வாகனத்தில் பயணித்தேன். கொஞ்சம் கவனக்குறைவாக வாகனத்தினை ஓட்டினால் மலையில் இருந்து உருண்டு விழக்கூடிய அபாயமும் இருக்கிறது. சில நிமிடப் பயணங்களில் பாதையின் அருகில் உலங்கு வானூர்தி வந்து இறங்கி மேலே செல்லக்கூடிய ஒரு இடம் இருந்தது. அங்கே வாகனத்தைத் திருப்பக்கூடியதாக இருந்தது.

ஒருவாறு மலையின் அடிவாரத்துக்கு வந்து குயின்ஸ்டவுன் நோக்கி பிரயாணித்தேன். பிரயாணிக்கும் பாதையும் குன்றுகள், மலைகளின் ஊடாக வளைந்து வளைந்து செல்லும் வீதியாகவே இருந்தது. மிகவும் அவதானமாகப் பயணித்தோம்.
சில நிமிடப்பயணங்களின் முடிவில் தூரத்தில் கட்டிடங்கள் தெரிவது அவதானிக்கக்கூடியதாக இருந்தது. மலைப்பிரதேசத்தில் இருந்து பிரயாணிக்கும் போது தூரத் தெரியும் கட்டிடங்கள் உள்ள பகுதிதான் குயின்ஸ்டவுன்.

மலையில் இருந்து பாக்கும் போது தெரிந்த குயின்ஸ்டவுன், மலையை விட்டு இறங்கியதும் தெரியவில்லை.

குயின்ஸ்டவுனை நோக்கிப் பிரயாணிக்க மேலும் 20 நிமிடங்கள் தேவைப்பட்டது. குயின்ஸ்டவுனை அடைய மாலை 6 மணியாகிவிட்டது. குயின்ஸ்டவுனில் தான் கிறைஸ்சேர்ச்சை விட்டு வெளிக்கிட்டபின்பு அதிகளவு கட்டிடங்கள், வாகனங்கள், மனிதர்களைக் காணக்கூடியதாக இருந்தது. மற்றைய இடங்கள் இரவு ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் இடங்களைப் போல அமைதியாகவே இருந்தன. ஆனால் குயின்ஸ்டவுனில் கடைகளும், உணவகங்களும் இரவு நேரத்திலும் திறந்து திருவிழா போலக் காட்சியளித்தன. கிரைஸ்சேர்ச்சசை விட்டு வெளிக்கிட்டபின்பு கிறைஸ்சேர்சுக்கு அடுத்தபடியாக அதிக வீதிகளை குயின்ஸ்டவுனில் தான் நான் பார்த்தேன். படத்தில் இருப்பது குயின்ஸ்டவுனின் வரைபடம்.

குயின்ஸ்டவுனைவிட மற்றைய இடங்கள் மிகவும் சிறியவை.கிறைஸ்சேர்ச் தான் மிகவும் பெரியது.

Wednesday, August 18, 2010

நியூசிலாந்து 18- வானகா(Wanaka)

'Puzzling World'ல் இருந்து வெளிக்கிடும் போது மதியம் 2 மணியாகிவிட்டது.அன்று காலையில் உணவினை ஒழுங்காக உண்ணாத காரணத்தினாலும்,Puzzling World ற்கு சென்று மாயத்தோற்றங்களைப் பார்த்ததினால் தலை சுற்றியதினாலும் தலையிடி ஏற்பட்டது. சில நிமிடப் பயணங்களில் வானகா நகரப்பகுதியை அடைந்தேன்.கிறைஸ் சேர்ச்சில் இருந்து(Christchurch) முதல் நாள் வெளிக்கிட்ட பின்பு, இங்கு தான் அதிக மக்களையும், கடைகளையும் கண்டேன். வீதியின் ஒரு பக்கத்தில் ஏரியும், மறுபக்கத்தில் கடைகளும் இருக்கின்றன.

சுற்றுலாப் பயணிகள் சிலர் குளிர்காலங்களில் வானகா, குயின்ஸ்டவுண் ஆகிய இடங்களுக்கு பனிக்கட்டிகளில் விளையாட விரும்பிச் செல்வார்கள். பனி படர்ந்த மலைகளில் பனிகளில் சறுக்கிக் கொண்டு விளையாடுவார்கள்(Skiing). அத்துடன் மலை உச்சியில் அமைக்கப்பட்ட Chair liftலும் விரும்பிச்செல்வார்கள்.


மதிய உணவை உண்டதும் அருகில் உள்ள ஏரிப்பக்கம் நடக்க நினைத்தேன்.அப்பொழுது நேரம் கிட்டத்தட்ட மணி 3 இருக்கும். இன்னும் 1 மணித்தியாலமும் 15 நிமிடங்களும் பயணித்தால் அன்று இரவு தங்கவேண்டிய் குயின்ஸ்டவுன் வந்துவிடும்.அத்துடன் அருகில் இருக்கும் பனிமலையில் உள்ள உயரச் செல்லும் கதிரைகளில்(Chair lift) சென்று வரவிரும்பினேன். மலைகள், ஏரிகள் உள்ள இப்பிரதேசங்களில் இருள முன்பு பயணிப்பது நல்லது என்பதினால் ஏரியின் அருகில் நடக்கவிரும்பவில்லை. குயின்ஸ்டவுனுக்கு வானகாவில் இருந்து செல்வதற்கு 2 வீதிகள் இருக்கிறன. ஒன்று பிரதான வீதி. மற்றைய வீதியினால் சென்றால் தான் உயரச் செல்லும் கதிரை(Chair lift) இருக்கும் இடம் வரும். அதனால் இரண்டாவதுவழியைத்தீர்மானித்தேன். அவ்வீதி பிரதான வீதியல்ல.

போகும் போது வலது பக்கத்தில் தெரிந்த மலைப்பகுதியில் தான் உயரச் செல்லும் கதிரை இருப்பதாக வீதி அறிவுறுத்தலில் சொல்லப்பட்டதினால் வலதுபக்கத்திற்கு செல்லும் வீதியில் எமது வாகனத்தை திருப்பினோம். மலையைச்சுற்றிச் சுற்றி பாதைகள் பாதைகள் இருந்தன. அப்பாதையும் புளுதி படிந்த தார் பூசப்படாத வீதியாகக் காணப்பட்டது.மலையைச்சுற்றிச் சுற்றி வாகனம் மேலே ஏறிப் பயணித்தது. பாதுகாப்பற்ற வீதியாக இருந்ததினால் மிகவும் கவனமாகச் செல்லவேண்டும்.

நேரம் செல்ல,செல்ல, முடிவில்லாமல் பாதை மேலே போய்க் கொண்டிருந்தது. நேரமும் மாலை 4 மணியாகி விட்டது.

Monday, August 16, 2010

நியூசிலாந்து 17 -Puzzling World (குழப்பமான உலகம்)

அழகிய ஏரிகளை இரசித்துக் கொண்டு கிட்டத்தட்ட மதியம் ஒரு மணியளவில் வானகாவினை அடைந்தோம். வீதியில் அருகில் இருந்தது Puzzling World(குழப்பமான உலகம்).அங்கே சில கட்டிடங்கள் விழுவது போல சரிந்த நிலையில் காணப்பட்டன.
.
சிட்னியில் இருந்து நியூசிலாந்துக்கு செல்லும்வரை Puzzling World பற்றி நான் அறிந்திருக்கவில்லை. நியூசிலாந்தில் சுற்றுலா வழிகாட்டும் நூல்களில் Puzzling World பற்றிய தகவல்கள் இருந்தன. பிரயாணிக்கும் வீதியின் அருகில் Puzzling World இருப்பதினாலும், நேரமும் இருந்ததினாலும், மாயத்தோற்றத்தில் (Illusion)அமைக்கப்பட்டுள்ள பல விடயங்களை உள்ள Puzzling Worldக்கு சென்று பார்க்கலாம் என முடிவு செய்தேன்.


மேலே படத்தில் காணப்படும் கட்டடம் The Leaning Tower of Wanaka என்று அழைக்கப்படுகிறது. 53 பாகை சரிவில் அமைக்கப்பட்டிருக்கிறது.

Puzzling Worldக்கு செல்ல மாயத்தோற்றங்கள் உள்ள அறைகளுக்கும் , Maze(சுற்றிச் சுற்றிச் செல்லும் சிக்கலான வழி)க்கும் செல்ல தனித்தனிக் கட்டணம் செலுத்த வேண்டும். இரண்டுக்கும் சேர்த்து கட்டணம் வாங்கினால் நுளைவுச்சீட்டுப் பணத்தில் சில தள்ளுபடிகள் உள்ளன. மெல்பேர்னுக்கு கிட்ட Arthurs Seat என்ற இடம் இருக்கிறது.அங்கே உள்ள Mazeக்கு 2003ம் ஆண்டு சென்றிருக்கிறேன். என்னுடன் அங்கு வந்தவருக்கு தெரியாமல் அந்த Mazeல் ஒளிக்கப் போய் திரும்பிவர பாதை தெரியாமல் கஸ்டப்பட்டுவிட்டேன். இங்கேயும் இந்த Mazeக்கு சென்று திரும்பிவரத் தெரியாமல் நேரம் செல்லவாய்ப்பிருக்கிறது. அன்று இரவு குயின்ஸ்டவுனில் உள்ள விடுதியில் தங்குவதற்கு முன்பதிவு பதிந்திருந்தேன். குயின்ஸ்டவுனுக்குச் செல்ல அன்று சில மணித்தியாலப் பயணங்கள் இருப்பதினால் நான் இந்த Mazeக்கு செல்லவில்லை. இதனால் மாயத்தோற்றங்கள் உள்ள அறைகளுக்கு செல்ல மட்டுமே நுளைவுச்சீட்டினை வாங்கினேன்.

ஒரு அறையில் பிரபல்யமானவர்களின் மாதிரி உருவங்கள் காணப்பட்டன.அறை முழுவதும் காணப்பட்ட 168 முகங்களும் எங்களைப் பார்ப்பதுபோல அமைக்கப்பட்டிருந்தன. அம்முகங்களில், மேற்கத்தைய நாடுகள் தங்களது சுயநலத்துக்காக ஆரம்பத்தில் பயங்கரவாதியாகச் சித்தரித்து, பிற்காலத்தில் எல்லோராலும் போற்றப்பட்ட நெல்சன் மண்டேலாவின் முகங்களும் இருந்தன.

வேறு ஒரு அறைக்கு சென்றால் கீழே நான் இணைத்த படத்தில் தெரிவது போல அறையின் இடதுபக்கத்தில் இருந்து அறையின் வலதுபக்கத்துக்கு செல்லும் போது இடதுபக்கத்தில் நிற்கும் போது உயரமாகத் தோற்றமளித்தவர் தற்பொழுது உயரம்குறைந்தவர் போல தோற்றமளிப்பார். அவ்வாறே வலதுபக்கத்தில் இருப்பவர் இடதுபக்கத்துக்கு செல்லும்போது உயரம் குறைந்தவராக இருப்பவர் உயரம் கூடியவராகத் தோற்றமளிப்பார். இந்த மாயத்தோற்ற தொழில் நுட்பம், நியூசிலாந்தில் படம் பிடிக்கப்பட்ட உலகப் புகழ்பெற்ற 'The Lord of the Rings' என்ற திரைப்படத்தில் உபயோகிக்கப்பட்டது.

கீழே நான் இணைத்த படங்களில் உள்ள அறை 15 பாகை கோணத்தில் சரிவாகக் கட்டப்பட்டுள்ளது. அறையின் உள்ளே இருப்பவை வழமைபோல அமைக்கப்பட்டிருந்தாலும், அறையின் உள்ளே செல்லும் போது விழுந்து விடுவோமோ என்ற எண்ணம் ஏற்படும்.


உரோமர் காலத்து மலசல கூடத்தினை கீழே உள்ள படத்தில் காணலாம். படத்தில் இருப்பவர்களில் சிலர் உண்மையான மனிதர்கள். சில சிலைகள்.

Thursday, August 12, 2010

நியூசிலாந்து 16 -Hawea ஏரி

காஸ்டில் இருந்து வானகாவை நோக்கிப் பயணிக்கும் போது வீதியின் வலதுபக்கத்தில் காணப்பட்ட நியூசிலாந்தின் 4வது பெரிய ஏரியான வானகாவின் அழகினை இரசித்துக் கொண்டு பயணித்தேன். கொஞ்சந்தூரம் செல்ல வீதியின் இடதுபக்கத்தில் Hawea ஏரியைக்கண்டேன்.

இரு ஏரிகளும் நான் இங்கு இணைத்த படங்களில் பார்ப்பதைவிட நேரில் சென்று பார்க்கும் போது பல மடங்கு அழகாகத் தெரியும்.2005ல் பயணித்தபோது என்னிடம் இருந்தது சாதாரண புகைப்படக்கருவி(2 megapixel camera).பயணத்தின் போது இடை இடையே மழை தூறிக்கொண்டிருந்தது.