எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.Wednesday, August 18, 2010

நியூசிலாந்து 18- வானகா(Wanaka)

'Puzzling World'ல் இருந்து வெளிக்கிடும் போது மதியம் 2 மணியாகிவிட்டது.அன்று காலையில் உணவினை ஒழுங்காக உண்ணாத காரணத்தினாலும்,Puzzling World ற்கு சென்று மாயத்தோற்றங்களைப் பார்த்ததினால் தலை சுற்றியதினாலும் தலையிடி ஏற்பட்டது. சில நிமிடப் பயணங்களில் வானகா நகரப்பகுதியை அடைந்தேன்.கிறைஸ் சேர்ச்சில் இருந்து(Christchurch) முதல் நாள் வெளிக்கிட்ட பின்பு, இங்கு தான் அதிக மக்களையும், கடைகளையும் கண்டேன். வீதியின் ஒரு பக்கத்தில் ஏரியும், மறுபக்கத்தில் கடைகளும் இருக்கின்றன.

சுற்றுலாப் பயணிகள் சிலர் குளிர்காலங்களில் வானகா, குயின்ஸ்டவுண் ஆகிய இடங்களுக்கு பனிக்கட்டிகளில் விளையாட விரும்பிச் செல்வார்கள். பனி படர்ந்த மலைகளில் பனிகளில் சறுக்கிக் கொண்டு விளையாடுவார்கள்(Skiing). அத்துடன் மலை உச்சியில் அமைக்கப்பட்ட Chair liftலும் விரும்பிச்செல்வார்கள்.


மதிய உணவை உண்டதும் அருகில் உள்ள ஏரிப்பக்கம் நடக்க நினைத்தேன்.அப்பொழுது நேரம் கிட்டத்தட்ட மணி 3 இருக்கும். இன்னும் 1 மணித்தியாலமும் 15 நிமிடங்களும் பயணித்தால் அன்று இரவு தங்கவேண்டிய் குயின்ஸ்டவுன் வந்துவிடும்.அத்துடன் அருகில் இருக்கும் பனிமலையில் உள்ள உயரச் செல்லும் கதிரைகளில்(Chair lift) சென்று வரவிரும்பினேன். மலைகள், ஏரிகள் உள்ள இப்பிரதேசங்களில் இருள முன்பு பயணிப்பது நல்லது என்பதினால் ஏரியின் அருகில் நடக்கவிரும்பவில்லை. குயின்ஸ்டவுனுக்கு வானகாவில் இருந்து செல்வதற்கு 2 வீதிகள் இருக்கிறன. ஒன்று பிரதான வீதி. மற்றைய வீதியினால் சென்றால் தான் உயரச் செல்லும் கதிரை(Chair lift) இருக்கும் இடம் வரும். அதனால் இரண்டாவதுவழியைத்தீர்மானித்தேன். அவ்வீதி பிரதான வீதியல்ல.

போகும் போது வலது பக்கத்தில் தெரிந்த மலைப்பகுதியில் தான் உயரச் செல்லும் கதிரை இருப்பதாக வீதி அறிவுறுத்தலில் சொல்லப்பட்டதினால் வலதுபக்கத்திற்கு செல்லும் வீதியில் எமது வாகனத்தை திருப்பினோம். மலையைச்சுற்றிச் சுற்றி பாதைகள் பாதைகள் இருந்தன. அப்பாதையும் புளுதி படிந்த தார் பூசப்படாத வீதியாகக் காணப்பட்டது.மலையைச்சுற்றிச் சுற்றி வாகனம் மேலே ஏறிப் பயணித்தது. பாதுகாப்பற்ற வீதியாக இருந்ததினால் மிகவும் கவனமாகச் செல்லவேண்டும்.

நேரம் செல்ல,செல்ல, முடிவில்லாமல் பாதை மேலே போய்க் கொண்டிருந்தது. நேரமும் மாலை 4 மணியாகி விட்டது.

2 comments:

துளசி கோபால் said...

ரொம்பச்சரி.

இருட்டுவதற்கு முன் நான் தங்க வேண்டிய இடத்துக்குப் போயிடணும்.

பயணத்தில் இது ஒரு எழுதப்படாத விதி.

அதுவும் குளிர்காலமுன்னா மாலை 4 மணிக்கே அங்கெல்லாம் இருட்டிக்கிட்டு வந்துரும்.

தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறேன்.

Aravinthan said...

இரவில் பயணிப்பது ஆபத்தை விளைவிக்கவும் கூடும்.