எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.Monday, September 06, 2010

நியூசிலாந்து 22- படகுப் பயணம்(Shot over jet)

'Kawarau Jet' படகுப் பயணம் முடிந்ததும், ஏரியின் அடியில் சுற்றிவர கண்ணாடியினால் அமைக்கப்பட்ட அறைக்கு கூட்டிச் சென்றார்கள். அவ்வறையில் இருந்து ஏரியினுள் தெரியும் மீன்கள், கடல் வளங்களைப் பார்க்கலாம்.

அன்று மாலை 5 மணியளவில் ரி ஆனா குகைக்கு செல்வதற்கு பதிவு செய்திருந்தேன். குயின்ஸ்டவுனில் இருந்து கிட்டத்தட்ட 2 மணித்தியாலமும் 15 நிமிடங்களும் பயணம் செய்தால் ரி ஆனா வரும். 'Kawarau Jet' படகுப் பயணம் முடிய காலை 10.30 மணியாகி விட்டது. நேரம் இருப்பதினால் 'shot over jet' என்ற படகில் பிரயாணிக்கலாம் என முடிவு செய்தேன். அவுஸ்திரேலியாத் தொலைக்காட்சிகளில் சுற்றுலா பற்றிய நிகழ்ச்சிகளில் நியூசிலாந்து குயின்ஸ்டவுனில் சுற்றுலா பற்றிக் காண்பிக்கும் போது பெரும்பாலும் 'ஷொட் ஒவெர் ஜெட்' என்ற வேகப் படகினைக் காட்டுவார்கள். 2003ல் நடைபெற்ற உலகக்கிண்ண துடுப்பாட்டப் போட்டி பற்றி 'Fox Sports' தொலைக்காட்சி விளம்பரத்தில் அந்தத்துடுப்பாட்டப் போட்டியில் பங்குபெறும் நாடான நியூசிலாந்தின் பெயரைச் சொல்லி 'ஷொட் ஒவெர் ஜெட்' படகில் பயணிப்பதைக் காட்டினார்கள். நான் சென்ற Kawarau Jet படகை விட shot over jet படகில் பிரயாணம் செய்வது நன்றாக இருக்கும் என நான் தங்கியிருந்த விடுதியில் வேலை செய்பவர் சொல்லியிருந்தார். இதனால் ஷொட் ஒவெர் ஜெட் படகு இருக்கும் இடத்துக்கு சென்றேன்.நல்ல காலம் படகில் பயணிக்கத் தேவையான நுளைவுச்சீட்டும் உடனே கிடைக்கக்கூடியதாக இருந்தது. இப்படகு வேறு ஒரு ஏரியில் பிரயாணிக்கிறது. பாறைகளுக்கிடையிலான குறுகிய இடைவெளியில் இப்படகு வேகமாகச் செல்லும். பாறைகளுடன் மோதுவது போல வேகமாக பாறையினை நோக்கி சென்று பாறைக்கு கிட்ட படகு வந்தவுடன், படகோட்டி வேகமாக படகைத்திருப்பி பாறையுடன் மோதாமல் செய்வார். 'Shot over jet' படகுப் பயணத்தில் சிவப்பு நிற நீர்புக முடியாத மேலாடைகள் அணிந்து பிரயாணித்தோம்.
கீழே உள்ள படத்தில் தெரியும் மிகவும் ஒடுக்கமான இடைவெளிகள் உள்ள பாறைகளுக்கிடையில் வேகமாக படகு பிரயாணிக்கும்.

கீழே உள்ள படங்களில் நானும் இருக்கிறேன். பயணிக்கும் போது புகைப் படம் எடுத்தார்கள். பயண முடிவில் சுற்றுலாப் பயணிகள் இப்படங்களை வாங்க விரும்பினால் காசு கொடுத்து வாங்கலாம்.


இரண்டு படகுப்பயணங்களிலும் என்னை அதிகம் கவர்ந்தது 'shot over jet'. படகு வெளிக்கிடும் இடத்தில் உள்ள சிறிய தேனீர் கடையில் மதிய உணவை உண்டபின்பு ரி ஆனாவை நோக்கிப் பிரயாணித்தேன்.

No comments: