ஏற்கனவே குயின்ஸ்டவுனில் உள்ள சுற்றுலாத் தகவல் மையத்தில், ஒளிரும் புழுக்களின் குகைக்கான (Te-anau Glow worm cave) நுளைவுச்சீட்டினைப் பதிவு செய்து இருந்தேன். குயின்ஸ்டவுனில் நுளைவுச்சீட்டினைப் பெற முன்பு நான் இக்குகைக்குச் செல்ல நினைக்கவில்லை. சிட்னியில் இருந்து கிட்டத்தட்ட இரண்டரை மணித்தியாலப் பயணமுடிவில் வரும் Jenolan cavesக்குச் சென்றிருந்ததினால் ஒளிரும் புழுக்களின் குகைக்குச் செல்ல விரும்பவில்லை. ஆனால் ரி - ஆனாவில் நேரம் இருப்பதினால் குகைக்குச் முடிவு செய்தேன். ஒளிரும் புழுக்களின் குகைக்கான பிரயாணத்தில் முதலில் நாற்பத்தைந்து நிமிடங்கள் படகின் மூலம் Te Anau எரியின் ஒரு கரையில் இருந்து மறுகரைக்குச் செல்ல வேண்டும். படகின் மேல்தளத்தில் இருந்து கொண்டு ஏரியின் அழகினை இரசித்துக்கொண்டு பயணித்தேன். இப்படகில் கிட்டத்தட்ட ஐம்பதுக்கு மேற்பட்ட பயணிகள் என்னுடன் பயணித்தார்கள்.


மறு கரையினை அடைந்ததும் இயற்கைக்காட்சிகளைப் பார்த்தவாறு குகை இருக்கும் இடத்தை நோக்கி நடந்தோம்.



சில நிமிடங்களில் ஒரு மண்டபத்தை அடைந்தோம். எங்களை ஏழு,எட்டு குழுக்களாகப் பிரித்தார்கள். குகைக்குள் படகில் செல்ல வேண்டும். ஒரே நேரத்தில் இரண்டு படகுகள் தான் செல்வதினால், முதல் இரண்டு குழுக்களும் குகைக்குள் செல்ல, மற்றவர்களுடன் நானும் அம்மண்டபத்தில் இருந்தேன். அக்குகை பற்றியும்,அக்குகையில் உள்ள ஒளிரும் புழுக்களின் வரலாறுகள் பற்றியும் விளங்கப்படுத்தினார்கள். அம்மண்டபச் சுவற்றில் பல வரலாற்றுச் சம்பவங்கள் பதியப்பட்டிருந்தன.

நாங்கள் அவற்றைப் பார்வையிட்டோம். குடிப்பதற்கு தேனீரும், உண்பதற்கு விசுக்கோத்தும் தந்தார்கள். குகைக்குள் சென்றவர்கள் திரும்பிவர நான் இருந்த குழு குகைக்குள் சென்றது. குகைக்குள் புகைப்படம் எடுக்கக் கூடாது என்று அறிவித்திருந்தார்கள். புகைப்படம் எடுப்பதினால் அங்குள்ள ஒளிரும் புழுக்களின் தூக்கம் கலைந்து விடும் என்று சொன்னார்கள். நியூசிலாந்தில் ஒளிரும் புழுக்களின் தூக்கம் கலைந்து விடுவதினால் புகைப்படம் எடுக்கக்கூடாது என்று சொல்லுகிறார்கள். ஆனால் நான் பிறந்த மண்ணில் ????
குகைக்குள் புகைப்படம் எடுப்பது தடை செய்யப்பட்டதினால், இணையத்தில் இருந்து பெறப்பட்ட படங்களை இங்கு இணைத்திருக்கிறேன்.
நிலத்துக்கு அடியில் தான் குகை உள்ளது. கீழே செல்லப் படிகள் இருந்தன. குகைக்குள் மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. மெலிசான வெளிச்சத்தில் இரும்புக் கைபிடிகளைப் பிடித்துக் கொண்டு படிகளின் ஊடாக நடந்து சென்றோம்.

ஒன்றிரண்டு ஒளிரும் புழுக்கள் குகையில் இருந்தன. சில இடங்கள் மிகவும் குறுகலாக இருந்தன. பாறைகள் தலையினை இடிக்க வாய்ப்புக்கள் இருந்ததினால் அவதானமாக குனிந்து நடந்து செல்ல வேண்டும் என்ற எச்சரிக்கை அறிவுப்புகள் அங்கே இருந்தன. சில நிமிடங்கள் நடந்தபின்பு, குகைக்குள் சிறு ஓடை இருப்பதினை அவதானித்தோம். ஒடையில் மிகச்சிறிய படகு ஒன்று இருந்தது. அதில் கவனமாக ஒவ்வொரு சுற்றுலாப் பயணிகளையும் கையைப் பிடித்து ஏற்றினார்கள்.

எல்லோரும் படகில் ஏறி அமர,படகு வெளிக்கிட்டது. இப்படகு இயங்குவதற்கு துடுப்புக்கள் உபயோகிக்கப்படவில்லை. குகையின் சுவர்களில் குறுக்கும் நெடுக்குமாக கயிறு கட்டப்பட்டிருந்தது. அதனைப்பிடித்தவாறு படகோட்டி படகை இழுக்க, படகு அசைந்து சென்றது.

குகைக்குள் அப்பகுதியில் மின்விளக்கு பொருத்தப்படவில்லை. மின்விளக்கு பொருத்தப்படாததினால், குகைக்குள் செல்ல செல்ல ஒரே இருளாக இருந்தது. சில ஒளிரும் புழுக்களை குகைகளின் சுவர்களில் காணக்ககூடியதாக இருந்தன. படகு சில நிமிடங்கள் சென்றதும், படகோட்டி இனிஒருவரும் கதைக்கவேண்டாம், அமைதியாக இருக்கும் படி சொன்னார். எனென்றால் சில நிமிடங்கள் செல்ல, அதிகளவு ஒளிரும் புழுக்கள் இருக்கும் இடத்துக்கு படகு செல்லவுள்ளதினால், கதைப்பதினால் ஒளிரும் புழுக்களின் தூக்கம் கெட்டுவிடும். நாங்கள் அமைதியாக இருக்க, அதிகளவு ஒளிரும் புழுக்கள் இருக்கும் இடத்துக்குச் சென்றோம். குகையின் சுவர்களின் எல்லா இடங்களிலும் ஒளிரும் புழுக்கள் நிறைந்து காணப்பட்டன.
சில நிமிடங்களின் பின்பு மறுபடியும் படகின் மூலம் குகையினை விட்டு வெளியில் வந்தோம். பெரிய படகில் வந்த எல்லோரும் குகைக்குள் சென்று வந்த பின்பு, படகுத்துறையில் இருந்த படகில் மீண்டும் நாற்பத்தைந்து நிமிடப் பிரயாண முடிவில், ஆரம்பத்தில் படகு ஏறிய படகுத்துறை இடத்தை( Te-Anau)அடைந்தோம்.
ஒரு சீனா நாட்டு உணவகத்தில் அன்று இரவு உணவை உண்டபின்பு, அன்று இரவு தங்க வேண்டிய விடுதிக்கு சென்றேன்.
சிட்னியில் இருந்து குயின்ஸ்டவுன், மில்வெட் சவுண்ட் போன்ற இடங்களுக்குச் சென்ற எனக்குத் தெரிந்த பலர் ரி - ஆனாவில் உள்ள இக்குகைக்குச் செல்லவில்லை. புளுமவுண்டனில் உள்ள ஜெனோலான் குகைக்குச் சென்றதினால் செல்லவில்லை என்று சொன்னார்கள். ஆனால் Jenolan cavesல் படகுப்பயணம் இல்லை. ஒளிரும் புழுக்கள் இல்லை. அங்கு பார்ப்பது வேறு. இங்கு பார்ப்பது வேறு. கட்டாயம் செல்ல வேண்டிய இடங்களில் ஒன்று Te-anau Glow worm cave.
2 comments:
நல்லா எழுதி இருக்கீங்க. ஒரு சின்னத் திருத்தம் மட்டும் சொல்லிக்கிறேன்.
இது மின்மினிப்பூச்சிகள் இல்லை. இது ஒளிரும் புழுக்கள். இவை நகர்ந்து நகர்ந்து நெளிஞ்சு போய் கூரையின் மேல்பகுதியில் ஒட்டிப்பிடிச்சுக் கிடக்கும். இதன் உடலில் இருந்து பசை போல ஒரு திரவம் சுரந்து வருது.
நேரம் கிடைச்சால் இந்தச்சுட்டியில் பாருங்கள்.
http://thulasidhalam.blogspot.com/2008/06/blog-post_24.html
நாம் இருவரும் ஒரே படத்தைச் சுட்டுப் போட்டுருக்கோம்:-)))))
துளசி கோபால் said...
இது மின்மினிப்பூச்சிகள் இல்லை. இது ஒளிரும் புழுக்கள்.
----------------------
தவறைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள். நான் எனது பதிவில் தற்பொழுது திருத்தி எழுதிவிட்டேன்.
Post a Comment