எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.



Sunday, July 22, 2012

நியூசிலாந்து 54 -உலகப்புகழ்பெற்ற 'Taieri Gorge train journey' புகையிரதப்பயணம் ஆரம்பம்

டனிடன் சொக்கலேற் தொழிற்சாலையினை விட்டு வெளியேறும் போது மதியம் 1 மணியாகிவிட்டது. அருகில் இருக்கும் டனிடன் புகையிரத நிலையத்தில் இருந்து மதியம் 2:30க்குத்தான் 'Taieri Gorge train journey' என்ற புகையிரத பயணம் ஆரம்பிக்கும். நேரம் இருப்பதினால் மறு நாள் காலையில் பார்க்கும் இடங்களுக்கு முன்பதிவு செய்ய சுற்றுலாத்தகவல் நிலையத்துக்கு சென்றேன். 'Natures Wonders' என்ற சுற்றுலாவிற்கு காலை 10 மணிக்கு செல்வதிற்கு இடம்கிடைக்கவில்லை. 11.30 மணி சுற்றுலாவிற்கே இடம் கிடைத்தது. இன்னும் கொஞ்சம் பிந்தி சுற்றுலாத்தகவல் நிலையத்துக்கு வந்திருந்தால் 11.30 மணிச்சுற்றுலாவிற்கும் இடம் கிடைத்திருக்க முடியாமல்போயிருக்கும். சுற்றுலாத்தகவல் நிலையத்தில் மறுநாள் பயண ஒழுங்குகள் செய்து முடிக்க கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் முடிவடைந்துவிட்டது. அத்துடன் சுற்றுலாத்தகவல் நிலையத்திலேயே, அன்று செல்ல இருக்கும் புகையிரதப்பயணத்துக்கும் பயணமுன்பதிவையும் செய்தேன். உணவகமொன்றில் சென்று மதிய உணவினை வாங்கச் சென்றால் சிலவேளை புகையிரதப்பயணத்தினை தவறவிடலாம் என்ற எண்ணத்தில் உடனே புகையிரத நிலையத்தினை நோக்கிச் சென்றோம். அன்சாக் சதுக்கத்தில்(Anzac Square) புகையிரத நிலையம் அமைந்திருந்தது. புகையிரதக்கட்டிடத்தினைப் பார்த்தால் பெரிய மாடமாளிகை போல காட்சி அளித்தது.
புகையிரத நிலையத்தில் முன்பதிவு செய்யப்பட்ட பற்றுச்சீட்டினைக் காட்டி பயண நுளைவுச்சீட்டினைப் பெற்றோம். புகையிரத நிலையத்தில் இருந்த தேனீர் கடை ஒன்றில் இருந்த சிறு உணவுகளை அவசர அவசரமாக வாங்கி உண்டபின்பு புகையிரத்தினை எதிர்ப்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தோம்.
'Taieri Gorge train journey' என்ற உலகப்புகழ் பெற்ற புகையிரதப்பயணம் டனிடன் புகையிரத நிலையத்தில் ஆரம்பிக்கிறது. மலைகளிற்கிடையே உள்ள குறுகிய பாதையான 'Taieri Gorge' என்ற இடத்தின் ஊடாக புகையிரதம் பயணிப்பதினால் 'Taieri Gorge train journey' என்று இப்பயணத்தினை அழைக்கிறார்கள்.இப்பாதை('Taieri Gorge') நியூசிலாந்தில் உள்ள ஆறுகளில் 4வது நீளமான Taieri ஆற்றின் மேல் அமைந்திருக்கிறது. டனிடன் புகையிரத நிலையத்தில் ஆரம்பிக்கும் புகையிரதப்பயணம் வடமேற்கு திசை நோக்கி 'PUKERANGI' என்ற இடத்தினை அடைந்தபின்பு மீண்டும் டனிடனை அடைகிறது. வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலையில் 'PUKERANGI' க்கு அப்பால் இருக்கும் 'MIDDLEMARCH' என்ற இடத்தினை அடைந்து திரும்புகிறது. 'MIDDLEMARCH'ல் இருந்து குயின்ஸ்டவுன், வனக்கா போன்ற இடங்களுக்கு வேறு புகையிரதத்தில் ஏறி பயணிகள் பயணிப்பார்கள். டனிடனில் இருந்து வடகிழக்கு நோக்கி கடற்கரை வழியாகவும் 'Palmerston' வரை சுற்றுலா செல்லலாம். நான் மலைகளினூடாகவும் ஆறுகளினூடகவும் அழகிய இயற்கைக்காட்சிகள் அமைந்த 'PUKERANGI' க்கு செல்லும் பயணத்திற்குத்தான் நுளைவுச்சீட்டினைப் பெற்றேன். அன்று புதன்கிழமை என்பதினால் டனிடன் இருந்து வெளிக்கிடும் புகையிரதம் 'PUKERANGI' வரை சென்று திரும்புகிறது. 2:30 மணிக்கு டனிடனை விட்டு வெளிக்கிடும் இப்புகையிரதம் மீண்டும் 6:30 மணிக்கு டனிடனை வந்தடையும்.
சரியாக 2:30 மணியளவில் புகையிரதம் வெளிக்கிட்டது. டனிடனில் அப்பொழுது வெப்பநிலை 6 பாகை செல்சியஸ். குளிருக்கு ஏற்ற ஆடைகள் அணிந்திருந்தபடியால் குளிர் பெரிதாகத் தெரியவில்லை. புகையிரதப்பெட்டிகளுக்கு இடையே உள்ள பாதைகளில் நின்று கொண்டு அழகிய இயற்கைக்காட்சிகளை புகைப்படக்கருவியினால் படம் பிடிக்கத்தொடங்கினேன்.
பொறியியல் துறையின் சாதனை என்று சொல்லக்கூடிய இப்புகையிரதப்பாதையினை 1879ல் இருந்து கட்ட ஆரம்பித்து 1891ம் ஆண்டில் நிறைவு செய்தார்கள். 12க்கும் மேற்பட்ட பாலங்களின் மேல் இப்புகையிரதம் பயணிக்கிறது. அவற்றில் ஒன்று பூமிப்பந்தின் மத்திய கோட்டின் கீழே உள்ள நிலப்பரப்பில் உள்ள அந்தாட்டிக்கா, அவுஸ்திரெலியா, தென்னமெரிக்கா, அபிரிக்கா ஆசியா நாடுகளில் இருக்கிற இரும்புக் கட்டிட பாலங்களிலிலும் பெரியது.(Southern hemisphere's largest wrought iron structure) 12 பெரிய குகையினூடாகப் பயணிக்கும் இப்புகையிரதப்பயணத்தில் நேரடி வர்ணனை மூலம், புகையிரதம் போகும் இடங்களைப் பற்றிய மேலதிக தகவல்களையும் தந்துகொண்டிருந்தார்கள்.
குளிருக்கு ஏற்ற ஆடை அணிந்திருந்தாலும் புகையிரதப்பெட்டிக்கு இடையில் இருக்கின்ற பாதையில் நின்று இயற்கைக்காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்ததினால், வெளிக்காற்றினால் உடல் நடுங்கத்தொடங்கியது. இதனால் புகையிரதப்பெட்டியில் இருந்து கொண்டு இயற்கைக்காட்சிகளைப் பார்க்க சென்றேன்.

4 comments:

துளசி கோபால் said...

அருமை.

இந்தப் பயணம் நான் போனதில்லை. ஒருமுறை கிறைஸ்ட்சர்ச்சில் இருந்து க்ரேமௌத் வரை ரயிலில் போய் வந்து அதை எழுதியாச்சு:-))))

Aravinthan said...

துளசி கோபால் said...

அருமை.

இந்தப் பயணம் நான் போனதில்லை. ஒருமுறை கிறைஸ்ட்சர்ச்சில் இருந்து க்ரேமௌத் வரை ரயிலில் போய் வந்து அதை எழுதியாச்சு:-))))
------------------------

நன்றி. நீங்கள் சென்ற கிறைஸ்சேர்ச் கிறேமவூத் பயண அனுபத்தினைப்பற்றிய எழுதிய பதிவினை எங்கே பெறலாம்?

துளசி கோபால் said...

http://thulasidhalam.blogspot.com/2006/09/1.html

http://thulasidhalam.blogspot.com/2006/09/2.html

ரெண்டு பகுதிகளாப் போட்டுருக்கேன்:-)

Aravinthan said...

துளசி கோபால் said...

http://thulasidhalam.blogspot.com/2006/09/1.html

http://thulasidhalam.blogspot.com/2006/09/2.html

ரெண்டு பகுதிகளாப் போட்டுருக்கேன்:-)
-------------------

தகவலுக்கு நன்றிகள்