எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.



Tuesday, July 06, 2010

நியூசிலாந்து 7 -புராதன நகரம்(Shanty Town)

புனாகைகியில் இருந்து வெளிக்கிடும் போது நேரம் கிட்டத்தட்ட மாலை 4 மணியாக இருந்தது.இன்னும் அரை மணித்தியாலம் வந்த பாதையின் வழியாக (தெற்கை நோக்கி) பிரயாணம் செய்தால் Greymouth வரும். அதில் இருந்து மேலும் அரை மணித்தியாலம் சென்றால், அன்று இரவு தங்கும் விடுதி உள்ள Hokitika வரும். நல்ல வெளிச்சமாக இருப்பதினால் Greymouthல் உள்ள Shanty Townல் நேரத்தை செலவிட விரும்பினேன்.
இவ்விடம் தெற்கு கிறேமவூத்தில் இருந்து 10 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்திருக்கிறது. நத்தார் விடுமுறை தவிர மற்றைய எல்லா நாட்களும் இவ்விடத்துக்கு காலை 8.30 மணியில் இருந்து மாலை 5 மணிக்குள் சென்று வரலாம். இங்கு செல்ல கட்டணம் அறவிடுவார்கள்.19ம் நூற்றாண்டில் தெற்கு நியூசிலாந்தில் மேற்குக்கடற்கரையில் குடியேறியவர்களின் வாழ்க்கையை இங்கு காணலாம். அக்காலங்களில் தங்கங்களைப் பெற பலர் மேற்குக்கடற்கரையில் குடியேறியுள்ளார்கள். அவர்களில் சீனர்களும் அதிகளவில் இருந்தார்கள்.

30க்கு மேற்பட்ட கட்டிடங்களைக் கொண்ட இவ்விடத்தில் தேவாலயம், இரத்தினக்கற்கள் கனிப்பொருட்கள் உள்ள மண்டபம்,அச்சிடும் நிலையம், விடுதி, தீயணைப்பு நிலையம், புகையிரத நிலையம், தபால் அலுவலகம், கசாப்புக்கடை, சிறைச்சாலை, சீனா நகர் போன்றவற்றைக் காணலாம். இவை அந்தக்காலத்து வாழ்க்கையை சுற்றுலாப் பயணிக்களுக்குச் சொல்லும்.





இயற்கையை இரசித்துக் கொண்டு நடக்க நடைபாதைகளும் இருக்கின்றன.


19ம் நூற்றாண்டில் இருந்த தளபாடங்கள், உடைகள், புகைப்படங்கள் போன்ற பலவற்றை சேகரித்து வைத்திருக்கிறார்கள்.



நிலக்கரியில் ஒடும் புகையிரதப்பயணமும் இருக்கிறது. ஆனால் இதற்கு தனியாகக் கட்டணம் செலுத்த வேண்டும்.


கிட்டத்தட்ட 10 நிமிடப் புகையிரதப்பயணத்தின் முடிவில் தங்கத்தினை வடித்தெடுக்கும் இடத்தினை அடைந்தோம். அங்கே ஒவ்வொருவருக்கும் சிறு பாத்திரத்தில் மண்களைத் தந்தார்கள். நாங்கள் தண்ணீரில் வடித்துக் கழுவும் போது சிறு சிறு தங்கங்களை பாத்திரத்தில் கண்டோம். அவற்றை சிறிய போத்தலில் அடைத்து எங்களுக்கு தந்தார்கள்.

No comments: