எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.



Showing posts with label அறிமுகம். Show all posts
Showing posts with label அறிமுகம். Show all posts

Tuesday, February 07, 2012

நியூசிலாந்து 45 -உலகப் புகழ் பெற்ற பிளவுபட்ட அப்பிள் பாறை (Split Apple Rock)

பிக்டனில் இருந்து வெளிக்கிட்டு ரிவாக்காவினை அடையும் போது மாலை 6.30 ,7 மணியாகிவிட்டது. ஆனால் விடுதி இருக்கும் வீதியைத் தேடிக் களைத்துப் போனோம். வீதியில் செல்பவர்களைக் கேட்டுப் பார்த்து, அருகில் இருந்த எரிபொருள் நிலையத்தில் வேலை செய்பவரின் உதவியுடன் ஒருவாறு விடுதியினைக் கண்டுபிடித்தோம். நல்லகாலம் இருளவில்லை. இருண்டிருந்தால் இன்னும் தேடிக்கொண்டிருந்திருப்போம். பொதுவாக நியூசிலாந்தின் தெற்கு நிலப்பரப்பில் பிரதான முக்கிய நகரங்களைத் தவிர மற்றைய இடங்களுக்கு இரவில் பயணிப்பது மிகவும் கடினமானது. நாங்கள் இருந்த விடுதி(Chalets @ Terraced Gardens) சுற்றவர தோட்டங்களுக்கு நடுவில் இருந்தது. செம்மறி ஆடுகள் விடுதியின் பின்னால் நின்றன. றிவாக்காவில் இரவில் பார்ப்பதற்கு ஒன்றுமில்லை. மறு நாள் காலை எழுந்ததும் அபில் தஸ்மான் தேசிய பூங்காவில் உள்ள கைத்தேரிதேரி(Kaiteriteri) என்ற இடத்துக்கு சென்றோம். விடுதியில் இருந்து 7, 8 நிமிடங்கள் பயணித்தால் கைத்தேரிதேரியினை அடையலாம். இங்கு தான் நான் முதல் நாள் முன்பதிவு செய்த அபில் தஸமான் தேசிய பூங்காவில் படகுப் பயணம் ஆரம்பிக்கும் இடமாகும். அங்குள்ள தகவல் நிலையத்தில் முன்பதிவு செய்த விபரத்தினைக் காட்டினேன். படகு வெளிக்கிட அரை மணித்தியாலம் இருப்பதினால் அருகில் இருந்த கடை ஒன்றில் சில விசுக்கோத்துக்கள், சிப்ஸ் போன்ற உணவுகளை வாங்கி உண்டேன்.
அபில் தஸமான் தேசிய பூங்காவில் பல சுற்றுலாப் பயணிகள் 2, 3 நாட்கள் தங்கித் தங்கி நடந்து செல்வார்கள். சிலர் படகுகளில் சென்று சில இடங்களில் நடந்து செல்வார்கள். நாங்கள் சென்ற பயணம் கிட்டத்தட்ட 3 மணித்தியாலப் படகுப் பயணம்.Torrent Bay, Bark Bay, Awaroa and Totaranui போன்ற இடங்களினூடகப் படகு சென்று வரும். நாங்கள் பயணித்த படகின் பெயர் Abel Tasman Sea Shuttles. காலை 9.15க்குப் படகு கைத்தேரிதேரியில் இருந்து வெளிக்கிட்டு மதியம் 12 மணிக்கு மீண்டும் கைத்தேரிதேரியினை அடைகின்றது.
படகில் இருந்து இயற்கைக்காட்சிகளை இரசிக்கத் தொடங்கினேன்.
சில நிமிடப்பயணத்தின் பெரிய பாறை ஒன்றினைக் கண்டோம். பார்ப்பதற்கு பிளவுபட்ட அப்பிள் போலக் காட்சி அளிப்பதினால் Split Apple Rock என்று அழைப்பார்கள். இப்பாறை உலகப் புகழ் பெற்றது. இதனைப் பார்ப்பதற்கு பலர் இங்கு வருவார்கள்.
தொடர்ந்து அழகிய இயற்கைக்காட்சிகளைப் பார்த்தபடி பயணித்தோம்.
படகு கடற்கரை ஒன்றினை நோக்கி சென்று கொண்டிருந்தது.

Thursday, July 10, 2008

என்னைப்பற்றி ஒரு சிறு அறிமுகம்.

நான் ஈழத்தில் பிறந்து தற்பொழுது சிட்னியில் வசிக்கிறேன்.
யாழ் இணையத்தளத்தில், நான் பயணித்த வனுவாட்டு என்ற அழகிய நாடு பற்றி புகைப்படங்களுடன் 2006ல் இருந்து 2007 வரை பதிவுகளை எழுதி வந்தேன். நண்பர் கானாபிரபா அவர்கள் என்னை இப்பதிவினை தனியான வலைப்பதிவில் இட்டால் நன்றாக இருக்கும் என்று ஆலோசனை சொன்னார். யாழ்கள உறவு சின்னக்குட்டி அவர்கள் தமிழ்மணத்திலும் எனது பதிவுகள் வரவேண்டும் என்றார். 2006ல் வலைப்பதிவினை ஆரம்பித்தாலும் தொடர்ந்து பதிவுகள் நான் எழுதவில்லை. யாழ் இணையத்தளத்தில் மட்டுமே எழுதினேன். திடிரென்று யாழ் இணையத்தளத்தில் நான் எழுதிய பயணக்கட்டுரைகளை எனது வலைப்பதிவில் இடலாம் என்று எனக்கு யோசனை தோன்றியது.இதுவரை நான் வனுவாட்டு சுற்றுலா பற்றி 3 பதிவுகளை இட்டுள்ளேன். தமிழ்மணத்தில் எனது பதிவினை வருவதற்கு ஆலோசனை, உதவிகள் செய்த தூயா அவர்களுக்கும் நன்றி.