எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.



Wednesday, October 22, 2008

வனுவாட்டு - பகுதி19 -இவெட் தீவின் கிழக்கு, தெற்குப் பகுதியில் உள்ள சில கிராமங்கள்


அடுத்ததாக வாகனத்தில் நாங்கள் என்ற Pang Pang Village கிராமத்தினூடாகச் சென்றோம். இக்கிராமத்தில் இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா இராணுவம் சுடுகலன்களினால் சுட்டு பயிற்சிகளினை மேற்கொண்டார்கள். சுடுகலன்கள் வெடிக்கும் போது 'Pang' 'Pang' என்று சத்தம் கேட்பதினால் அக்கிராமத்திற்கு Pang Pang என்ற பெயர் ஏற்பட்டது.இக்கிராமம் ஈவெட் தீவின் தென் கிழக்கில் அமைந்துள்ளது.

Pang Pangற்கு அடுத்ததாக உள்ள இடம் Forari. இங்கே உள்ள கண்ணிவெடியை, இப்பொழுதும் அமெரிக்காவில் "Mile a Minute Vines"என்ற பகுதியில் காணலாம். இந்தக்கண்ணி வெடியினை 2ம் உலகப்போரின் போது அமெரிக்காப்படைகள் வனு-அற்றில் இந்த இடத்தில்(Forari) உபயோகித்தார்கள். இக்கண்ணிவெடி பச்சோந்தியினைப் போல உருவமாற்ற மடையக்கூடியது(Camouflage).
Forari க்கு அருகில் உள்ள ' Le Cresionaire Farm ' என்ற இடத்தினைக் கடந்து செல்லும் போது சிறிய நீர்வீழ்ச்சி(Mini Cascades) ஒன்று பாலத்தின் அடியில் போய்க் கொண்டிருப்பதைப் பார்த்தோம். அந்த நீர் நிலையில் குளித்துக் கொண்டு எங்களுக்கு கை காட்டிக் கொண்டிருப்பவர்களை கீழே உள்ள படத்தில் காணலாம்.

அடுத்து வருகிற கிராமம் 'Eton Village'. இங்கே உள்ள வீடுகளில் பெரும்பாலானவை வனுவாட்டில் கிடைக்கப்படும் மூங்கில்களினால் வேயப்பட்ட சுவர்களினை உடையதாகவும் , மேற்ப்பகுதி 'Natangoora' என்ற இடத்தில் செய்யப்பட்ட கூறைகளைக் கொண்டதாகவும் இருக்கிறது.

வனுவாட்டு மக்கள் மரத்தினால் செய்யப்பட்ட படகில் சில ஆறுகளில் பயணம் செய்கிறார்கள்.

அடுத்ததாக எங்களது வாகனம் Banana Bay என்ற இடத்தில் நிற்க எங்களுக்கு உண்பதற்கு பழங்களும் குளிர்பானங்களும் தந்தார்கள். நான் போன எல்லா இடங்களிலும் வெட்டப்பட்ட பழங்களை வாழையிலையில் வைத்திருந்து இன்னொரு வாழை இலையினால் மூடப்பட்டிருப்பதைக் கண்டேன். வனுவாட்டில் இலையான்களின் தொல்லை அதிகம் என்பதினால் பழங்களை வாழை இழையினால் மூடுகிறார்கள்.
Banana Bay இல் இருந்து வெளிக்கிட்ட எமது வாகனம் அரை மணித்தியாலத்தில் எங்கள் விடுதியை அடைந்தது. காலை 9 மணிக்கு ஆரம்பமாகிய இவெட் தீவைச்சுற்றும் பயணம் மாலை 5 அரை மணிக்கு முடிவடைந்தது.
இப்பயணத்தின் போது ஒவ்வொரு கிராமங்கள் பற்றிய விவரங்களை அறிந்து கொண்டும் பயணித்தோம். விதிகளில் செல்லும் போது வித்தியாசமான மரங்களினால் அமைக்கப்பட்ட வேலிகள்,தென்னந்தோட்டங்கள், மாட்டுப்பண்ணைகள், நீர்னிலைகள், ஆலமரங்களினை அதிகளவில் கண்டோம்.


Monday, September 29, 2008

வனுவாட்டு - பகுதி18 -அதிசயக்கல்

சமுத்திரத்துடன் ஆறு சந்திக்கும் இடத்துக்கு முன்பாக இருக்கும் ,ஆற்றில் நாங்கள் போகும் திசைக்கு வலப்பக்கத்தில் உள்ள Warieka என்ற கிராமத்தில் படகு சென்று நிக்க நாங்கள் எல்லோரும் படகை விட்டு அங்கே இறங்கினோம். அங்கே ஒலையினால் வேயப்பட்ட ஆடைகள் அணிந்த இரு பெண்களும் ஒரு ஆணும் எங்களை வர வேற்கக் காத்திருந்தார்கள்.
இறங்கியதும் அப்பெண்களில் ஒருவர் எங்களின் தலையில் இலைகளினால் வேயப்பட்ட வட்ட வடிவமான வலையத்தினை அணிவித்தார். அவ்வலையத்தில் செவ்வரத்தம் பூவும் இருந்தது. அதன்பிறகு குடிப்பதற்கு செவ்விளனீரை வெட்டி இளனீர் தந்தார்கள்.

பிறகு அருகில் உள்ள பசுபிக்கடலில் மீன்களுக்கு அவர்கள் உணவு வீச பல மீன்கள் அவ்வுணவை உண்டன.


அதன் பிறகு 59 கிலோகிராம் உள்ள ஒரு பெரிய கல்லினைத் தூக்கி கடலில் வீசச் சொன்னார்கள். மிகவும் பாரமாக இருந்தது. ஒருவரும் தூக்கவில்லை.

அவர்களில் இருவர் சேர்ந்து அக்கல்லைத் தூக்கி கடலில் வீசினார்கள்.


கடலில் விழுந்த அந்த பெரிய கல் கடலில் மிதந்தது.

அதே இனத்தினச் சேர்ந்த சிறு கற்களினை அக்கடலில் எறியும் போது அக்கற்கள் மிதக்கவில்லை. கடலில் மிதந்த அந்தப் பெரிய கல் ஆபூர்வ சத்தி வாய்ந்ததாக அவர்கள் சொன்னார்கள். 59 கிலோ நிறை உள்ள அந்தக்கல் சுவாசிக்கும் தன்மை உடையது என்றும் சொன்னார்கள்.
அதன்பிறகு நாங்கள் ஒன்றையடிப்பாதையினூடாக நடக்க, சில நிமிடங்களில் அங்கே நாங்கள் வந்த கூண்டுந்து(van) நின்றதைக் கண்டோம். வாகன ஒட்டி படகில் வரவில்லை. அவர் வேறு பாதையினால் அவ்விடத்துக்கு வந்தார். 59 கிலோ கல் அமைந்துள்ள மிகவும் பெரிய காணி அந்த வாகன ஒட்டியின் குடும்பத்தாருடையது என அறிந்தோம்.

Tuesday, September 23, 2008

வனுவாட்டு - பகுதி17 Eboule ஆற்றில் வள்ளத்தில் பயணம்

ஈவெட்(Efate) தீவைச் சுற்றி ஒரு நாள் பயணத்தின் போது Beachcomberல் மதிய உணவு உண்டும், கடலிழும், நீர் நிலையிலும் நீந்திய பின்பு மீண்டும் பயணித்து எங்களது வாகனம் Eboule ஆற்றுப்ப்பாலத்தினை(River Bridge ) அடைந்தது.

பாலத்தின் கீழே ஆறு ஒன்று ஓடிக்கொண்டிருந்தது.

வனுவாட்டில் எப்பொழுது பார்த்தாலும் ஆறுகளிலும் , நீர் நிலைகளிலும் குளித்துக் கொண்டிருப்பவர்களைக் காணலாம். இந்த Eboule ஆற்றிலும் சிறுவர்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள்.

ஆற்றில் வனுவாட்டு மரம் ஒன்றினால் செய்யப்பட்ட வள்ளம்(Canoe) ஒன்றினை ஒருவர் நாங்கள் இருந்த கரைக்கு ஒட்டி வந்தார்.
வள்ள ஒட்டியை விட எங்களில் 9பேர் இருந்தோம். இதனால் இன்னொரு வள்ளமும் வர, எங்களில் அதிக நிறை கூடிய நான்கு பேரை ஒரு வள்ளத்திலும், மற்றைய ஐந்து பேரை மற்றைய வள்ளத்திலும் ஏற்றினார்கள்.

வள்ளத்தில் ஒரு பக்கத்தில் ஒருவர் இருந்தால், அடுத்தவர் அவருக்கு எதிர்த்திசையில் மாறி இருந்தவாறே செல்ல வேண்டும். எங்கள் வள்ளம் முதலில் சென்றது. எனது வள்ளத்தில் இருந்து மற்றைய வள்ளத்தில் இருப்பவர்களினைப் புகைப்படக்கருவியினால் எடுத்தபடத்தினைக் கீழே காண்கிறீர்கள்.

இயற்கைக்காட்சிகளைப் பார்த்தவாறே பயணித்தேன்.






கிட்டத்தட்ட 15 நிமிடப்பயணத்தின் பின்பு, அந்த ஆறு பசுபிக் சமுத்திரத்துடன் சேருவதைக் காணக்கூடியதாக இருந்தது.

Thursday, September 04, 2008

வனுவாட்டு - பகுதி16 -Beachcomber

மதியம் 1 மணி ஆக எல்லோருக்கும் நல்ல பசி. எங்கள் வாகனம் Beachcomber என்ற இடத்தை அடைந்தது. ஈவெட் தீவைச்சுற்றி ஒருநாள் பயணம் என்ற இச்சுற்றுலாவை நடாத்தும் அவுஸ்திரெலியாக்காரரின் சொந்தமான விடுதியான Beachcomber lodgeம் அங்குதான் இருந்தது. நாங்கள் உண்பதற்கு உணவு அங்கே தயார் செய்யப்பட்டிருந்தது.

நாங்கள் அங்கே செல்ல, வரவேற்புக் கீதங்களினை இசைக்கருவிகளின் உதவியுடன் பாடி எங்களை வரவேற்றார்கள்.

எல்லோருக்கும் பசித்திருந்தாலும், அங்கே இருந்த மூன்றுவகை வெப்பனிலையில் உள்ள நீர்நிலைகளினைக் கண்டதும், பசியினை மறந்து அதில் நீந்தச் சென்றோம்.




குளித்துவிட்டு மதிய உணவு உண்ணச்சென்றோம். மீன், இறால் உட்பட பலவிதமான கடல் உணவுகளுடன், மரக்கறி உணவுகள், கோழிக்கால்கள், மாட்டிறச்சி என சோற்றுடன் உணவுகள் அங்கே இருந்தன. இதை விட இத்தாலி நாட்டின் உணவுகளும் அங்கே இருந்தன. விருப்பமானவற்றினை உண்டபின்பு, வாழை இலையில் இருந்த சிறு துண்டுகளாக்கப்பட்ட வெவ்வேறு விதமான பழங்களினை உண்டோம். அதன்பிறகு சுவையான குளிர்களி எல்லோருக்கும் வழங்கப்பட்டது. சாப்பிட்டதும் சிலர் மீண்டும் நீர் நிலைகளில் நீந்தச்சென்றார்கள். சிலர் கடலில் சிறு படகில் சென்றார்கள். நான் கடலில் முருகைக்கல் போன்ற கூரிய கற்கள் இருந்ததினால், அவதானித்து கவனமாகச் சென்று கடலில் குளித்தேன்.


கடற்கரையில் பல உயிர் உள்ள சோகிகளும், சங்குகளும் ஊர்ந்து திரிவதினைக் காணக்கூடியதாக இருந்தது.

குளித்தபின்பு எங்கள் வாகன ஓட்டி, வனுவாட்டு மக்கள் விரும்பி உண்ணும் தேங்காய் நண்டினைப்(Coconut Crabs) பற்றி விளக்கம் தந்தார்.

நண்டின் பின்பக்கத்தில் பிடித்துத் தூக்க வேண்டும். இந்நண்டினைத் தூக்கி பாருங்கள் என்று எங்களிடம் அவர் சொல்ல, கடித்துவிடும் என்ற பயத்தில் நாங்கள் ஒருவரும் நண்டுக்குக் கிட்டச் செல்லவில்லை.

வனுவாட்டில் பல இடங்களில் மனித உறுவில் செய்யப்பட்ட கறுத்த நிறமுடைய, தலைப்பகுதி பெரிதாகவுள்ள ஒரே மாதிரியான சிலைகளைக் கண்டேன்.இச்சிலையினை Beachcomberவிலும் கண்டேன். இச்சிலைகள் முன்பு வாழ்ந்த கிராமத் தலைவர்களினைக் குறிக்கும் என அறிந்தேன்.

Sunday, August 31, 2008

வனுவாட்டு - பகுதி15 -2ம் உலகப் போரில் வனுவாட்டில் இருந்த அமெரிக்கப்படைகள்

எரிமலைக்கற்கள் உள்ள 'VETETAP FIREWALK'(பகுதி14) இருந்து, இயற்கைக் காட்சிகளினைப் பார்த்தவாறு பயணத்தினை தொடர்ந்தோம்.

பயணத்தின் போது 2ம் உலகப்போரில், அமெரிக்கா இராணுவம் பாவித்துக்கைவிட்ட இராணுவ இயந்திரத்தினை மரங்களுக்கிடையே கடலில் கண்டோம்.

எமது வாகனம் பிரதான வீதியில் இருந்து(போட்விலாவினைத் தவிர்ந்து ஈவேட் தீவில் ஒரே ஒரு பிரதானவிதிதான் இருக்கிறது. அதுவும் குன்றும் குழியுமாக உள்ளவிதி), திரும்பி புற்கள் உள்ள பாதைகளின் ஊடாக சென்றது.

சில நிமிடப் பயணங்களின் பின்பு வாகனம் 2ம் உலகப்போர் அரும் பொருட் காட்சியகம் (World War II Relics Museum) என்ற இடத்தினை அடைந்தது.

அங்கே 2ம் உலகப்போரில் அமேரிக்காப்படைகள் உபயோகித்து கைவிட்டுச் சென்ற, துருப்படைந்த தற்பொழுது பாவிக்க முடியாத மோட்டார்கள், எறிகணைகளினைப் பார்க்கக்கூடியதாக இருந்தது. வரைபடங்கள், புகைப்படங்கள், அருகில் உள்ள ஆழம் குறைந்த ஏரியில் விழுந்து உடைந்த விமானத்தினைப் பார்த்தவர்களின் சாட்சியங்கள்,விமானத்தின் சில பாகங்கள் போன்றவற்றினையும் பார்த்தோம். மேலதிக விளக்கங்களையும் சுற்றுலா வழிகாட்டி எங்களுக்குத் தந்தார்.
2ம் உலகப்போரில் 1942ம் ஆண்டில் யப்பான் படைகள் வனுவாட்டின் அருகில் உள்ள சொலமன் தீவுகளைக் கைப்பற்ற, அமெரிக்காப்படைகள் வனுவாட்டில் மேமாதம் 1942ல் தளம் அமைத்தார்கள். யப்பான் விமானம் ஒரே ஒரு முறை தான் வனுவாட்டில் குண்டினைப் போட்டது. அக்குண்டினால் ஒரு மாடு மட்டுமே உயிர் இழந்தது. பிறகு அவ்விமானம் அமெரிக்காப்படைகளினால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
அருகில் உள்ள ஆழம் குறைந்த ஏரியில் விழுந்த விமானத்தின் பகுதிகளினைப் பார்ப்பதற்கு ஏரியில் படகில் செல்ல வேண்டும்( போய் வர 1 மணித்தியாலம் எடுக்கும்). ஈவெட் தீவில் சுற்றி வரும் இச்சுற்றுலாவில் இப்பயணம் இடம் பெறவில்லை. அப்படிப் பார்க்கவேண்டும் என விரும்பினால் இதற்கு 1200 வனுவாட்டுப் பணம் மேலதிகமாகச் செலுத்த வேண்டும். அத்துடன் விமானத்தினைக் கிட்டச்சென்று பார்ப்பதற்கு நீரினுள், அடிக்கு நீந்திச் செல்லக்கூடிய ஆற்றல் இருக்க வேண்டும். இதனால் எங்களுடன் வந்தவர்கள், இதற்கு செல்வதற்கு பெரிதாக விருப்பம் தெரிவிக்கவில்லை.
இந்த ஆழம் குறைந்த ஏரிப்பகுதியின் அருகில் உள்ள புற்களில் ஈழத்தில் யாழ்ப்பாணத்தில் காணப்படும் தொட்டாச்சினுங்கி என்ற புற்களையும் காணக்கூடியதாக இருந்தது.

மீண்டும் பிரதான வீதியை அடைந்த வாகனத்தில் எங்களை சிறிய 3 குன்றுகள் இருந்த இடத்துக்குக் கூட்டிக்கொன்று சென்றார்கள். ஒவ்வொரு குன்றும் முறையே U,S,A என்ற ஆங்கில எழுத்துக்கள் வடிவில் அமைந்திருந்தன. யப்பான் விமானப்படைக்கு குழப்பம் விளைவிப்பதற்காகவே(Psychological Pain) அந்தக் குன்றுகளினை அமெரிக்காப்படைகள் அமைத்தனர்.
பிறகு வாகனத்தில் பயணம் சென்று அமெரிக்கப்படைகள் அமைத்து, உபயோகித்த (தற்பொழுது கைவிடப்பட்ட) விமான ஒடுபாதையினை அடைந்தோம். முன்பு வென்னீர் ஊற்று உள்ள நீர்ப்பரப்பினை கற்களினாலும், மண்களினாலும் முடி, B52 வகையிலான குண்டு வீச்சுவிமானங்கள் ஒடுவதற்கு ஏற்றவாறே இவ் ஓடு பாதையினை அமைத்தார்கள். இப்படியான ஒடுபாதை, தற்காலத்தில் உலகில் மிகவும் சிறிய விமானங்கள் ஒடுவதற்கு உபயோகப்படுத்தப் படுகிறது. இவ் ஒடு பாதையில் விமானம் எத்திசையில் இருந்து இறங்குவது பற்றியும் விளங்கப்படுத்தினார்கள்.

Tuesday, August 26, 2008

வனுவாட்டு - பகுதி14 -தீ மிதித்தல்(VETETAP FIREWALK)

இவெட் தீவைச் சுற்றி வரும் பயணத்தில் Taniliou Havana Harborல் இருந்து மீண்டும் பயணித்தோம்.




தொடர்ந்து பயணத்தின் போது 2ம் உலகப்போரில் அமெரிக்காப்படைகளினால் குளிப்பதற்கு கட்டப்பட்ட, தற்பொழுது ஒருவரும் பாவிக்கமுடியாத நிலையில் பழுதடைந்துள்ள கேணி ஒன்றினைக் காட்டினார்கள்.

அதனைப்பார்த்துவிட்டு சில நிமிடங்கள் பயணம் செய்ய 'VETETAP FIREWALK' என்ற இடத்தினை அடைந்தோம். அங்கே செம்பரத்தம் பூவினை ஒரு கூடையில் வைத்திருந்த பெண் ஒருவர் எங்களுக்கு காதில் சூடுவதற்கு செம்பரத்தம் பூக்களைத் தந்தார். நாங்கள் ஒரு கொட்டில் இருக்க அதற்கு முன்னால் உள்ள எரிமலைக்கற்களின் மேல் விறகுகள் இட்டு, நெருப்பினை மூட்டினார்கள். நன்றாக எரிந்ததும் சாம்பலினை அகற்ற ஒருவர் அவ்விடத்தினை நோக்கிவந்தார்.


மேலாடை அணியாமல், ஒலைகளினால் வேயப்பட்ட ஆடையினை அணிந்து, தென்னம் பொச்சினைத் தலையில் சூடி நடந்து வந்தவர், எரிமலைக்கற்களின் மேல் நடந்தார்.

பெரும்பாலான சுற்றுலாக்களை வனு-அற்று நாட்டைச் சேர்ந்தவர்களே நடாத்துகிறார்கள். ஆனால் நான் சென்ற ஈவெட் தீவைச்சுற்றி வரும் இச்சுற்றுலாவினை அவுஸ்திரெலியா நாட்டவர்(படத்தில் பின்னுக்கு நிற்பவர்) வனுவாட்டு மக்களைக்கொண்டு நடாத்துகிறார்.

அந்த அவுஸ்திரெலியா நாட்டைச்சேர்ந்தவர் 1 முறை இந்த எரிமலைக்கற்களில் நடந்ததாகவும் சொன்னார். அதற்கு மனதினைத் தைரியமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்றார். எங்களுடன் வந்திருந்த ஒருவருக்கும் எரிமலைக்கற்களில் நடக்கிற எண்ணம் இருக்கவில்லை. நான் கொஞ்சம் முயற்சி செய்யலாம் என நினைத்து மெதுவாக எரிமலைக் கற்களில் காலை வைத்தேன். சாடையாகச் சுட ஒரே ஒட்டமாக எரிமலைக் கற்களினூடாக ஓடினேன். ஒரே கைதட்டல் கிடைத்தது. பிறகு அங்கிருந்து மீண்டும் திரும்பி எரிமலைக் கற்களில் ஊடாக வேகமாக ஒடி வந்தேன். சாடையான சூடாகத் தான் எனக்குத் தெரிந்தது. அவர்கள் சொல்வது போல பயங்கர சூடு அல்ல. எதோ நெருப்புக்குள் நடந்து சாதனை படைத்து விட்டு திரும்பிவிட்டேன் என்று என்னுடன் வந்திருந்த வெள்ளைக்காரர்கள் என்னைப் பாராட்டினார்கள்.