பயணத்தின் போது 2ம் உலகப்போரில், அமெரிக்கா இராணுவம் பாவித்துக்கைவிட்ட இராணுவ இயந்திரத்தினை மரங்களுக்கிடையே கடலில் கண்டோம்.
எமது வாகனம் பிரதான வீதியில் இருந்து(போட்விலாவினைத் தவிர்ந்து ஈவேட் தீவில் ஒரே ஒரு பிரதானவிதிதான் இருக்கிறது. அதுவும் குன்றும் குழியுமாக உள்ளவிதி), திரும்பி புற்கள் உள்ள பாதைகளின் ஊடாக சென்றது.
சில நிமிடப் பயணங்களின் பின்பு வாகனம் 2ம் உலகப்போர் அரும் பொருட் காட்சியகம் (World War II Relics Museum) என்ற இடத்தினை அடைந்தது.
அங்கே 2ம் உலகப்போரில் அமேரிக்காப்படைகள் உபயோகித்து கைவிட்டுச் சென்ற, துருப்படைந்த தற்பொழுது பாவிக்க முடியாத மோட்டார்கள், எறிகணைகளினைப் பார்க்கக்கூடியதாக இருந்தது. வரைபடங்கள், புகைப்படங்கள், அருகில் உள்ள ஆழம் குறைந்த ஏரியில் விழுந்து உடைந்த விமானத்தினைப் பார்த்தவர்களின் சாட்சியங்கள்,விமானத்தின் சில பாகங்கள் போன்றவற்றினையும் பார்த்தோம். மேலதிக விளக்கங்களையும் சுற்றுலா வழிகாட்டி எங்களுக்குத் தந்தார்.
2ம் உலகப்போரில் 1942ம் ஆண்டில் யப்பான் படைகள் வனுவாட்டின் அருகில் உள்ள சொலமன் தீவுகளைக் கைப்பற்ற, அமெரிக்காப்படைகள் வனுவாட்டில் மேமாதம் 1942ல் தளம் அமைத்தார்கள். யப்பான் விமானம் ஒரே ஒரு முறை தான் வனுவாட்டில் குண்டினைப் போட்டது. அக்குண்டினால் ஒரு மாடு மட்டுமே உயிர் இழந்தது. பிறகு அவ்விமானம் அமெரிக்காப்படைகளினால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
அருகில் உள்ள ஆழம் குறைந்த ஏரியில் விழுந்த விமானத்தின் பகுதிகளினைப் பார்ப்பதற்கு ஏரியில் படகில் செல்ல வேண்டும்( போய் வர 1 மணித்தியாலம் எடுக்கும்). ஈவெட் தீவில் சுற்றி வரும் இச்சுற்றுலாவில் இப்பயணம் இடம் பெறவில்லை. அப்படிப் பார்க்கவேண்டும் என விரும்பினால் இதற்கு 1200 வனுவாட்டுப் பணம் மேலதிகமாகச் செலுத்த வேண்டும். அத்துடன் விமானத்தினைக் கிட்டச்சென்று பார்ப்பதற்கு நீரினுள், அடிக்கு நீந்திச் செல்லக்கூடிய ஆற்றல் இருக்க வேண்டும். இதனால் எங்களுடன் வந்தவர்கள், இதற்கு செல்வதற்கு பெரிதாக விருப்பம் தெரிவிக்கவில்லை.
இந்த ஆழம் குறைந்த ஏரிப்பகுதியின் அருகில் உள்ள புற்களில் ஈழத்தில் யாழ்ப்பாணத்தில் காணப்படும் தொட்டாச்சினுங்கி என்ற புற்களையும் காணக்கூடியதாக இருந்தது.
மீண்டும் பிரதான வீதியை அடைந்த வாகனத்தில் எங்களை சிறிய 3 குன்றுகள் இருந்த இடத்துக்குக் கூட்டிக்கொன்று சென்றார்கள். ஒவ்வொரு குன்றும் முறையே U,S,A என்ற ஆங்கில எழுத்துக்கள் வடிவில் அமைந்திருந்தன. யப்பான் விமானப்படைக்கு குழப்பம் விளைவிப்பதற்காகவே(Psychological Pain) அந்தக் குன்றுகளினை அமெரிக்காப்படைகள் அமைத்தனர்.
பிறகு வாகனத்தில் பயணம் சென்று அமெரிக்கப்படைகள் அமைத்து, உபயோகித்த (தற்பொழுது கைவிடப்பட்ட) விமான ஒடுபாதையினை அடைந்தோம். முன்பு வென்னீர் ஊற்று உள்ள நீர்ப்பரப்பினை கற்களினாலும், மண்களினாலும் முடி, B52 வகையிலான குண்டு வீச்சுவிமானங்கள் ஒடுவதற்கு ஏற்றவாறே இவ் ஓடு பாதையினை அமைத்தார்கள். இப்படியான ஒடுபாதை, தற்காலத்தில் உலகில் மிகவும் சிறிய விமானங்கள் ஒடுவதற்கு உபயோகப்படுத்தப் படுகிறது. இவ் ஒடு பாதையில் விமானம் எத்திசையில் இருந்து இறங்குவது பற்றியும் விளங்கப்படுத்தினார்கள்.