எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.



Monday, October 31, 2011

நியூசிலாந்து 40 - வெலிங்டனை நோக்கிப் பயணம் ஆரம்பம்

கன்மர் ஸ்பிரிங்கில் இருந்து வெளிக்கிட்டு கிறைஸ் சேர்ச்சினை நோக்கிப் பயணித்தோம்.


ஒன்றரை மணித்தியாலப் பிராயணத்துக்கு பிறகு மீண்டும் கிறைஸ் சேர்ச்சினை அடைந்தோம். மறு நாள் விமானத்தில் நியூசிலாந்தின் வடக்கு தீவான ஒக்லாண்டினை நோக்கிப் பறந்தோம். நியூசிலாந்தின் தெற்கு தீவில் பார்த்தவற்றை எழுதிமுடிந்ததும் வடக்கு தீவில் பார்த்தவற்றை பிறகு சொல்கிறேன்.

2009ம் ஆண்டிலும் நியூசிலாந்திற்கு 7 முழு நாட்கள் சுற்றுலா சென்றிருக்கிறேன். இம்முறை வடக்குத்தீவில் தென் மூலையில் இருக்கும் நியூசிலாந்தின் தலை நகர் வெலிங்டனுக்கு நியூசிலாந்து விமானத்தில் பயணித்தேன்.

வடக்கு தீவில் இருக்கும் வெலிங்டனை நோக்கி சிட்னியில் இருந்து விமானத்தில் பயணித்தாலும் இந்த ஏழு நாட்களும் தெற்கு தீவில் தான் சுற்றுலா சென்றேன்.. இலவச விமானசீட்டு என்பதினால் சிங்கப்பூர் எயர்லைன்சின் மூலம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு Star alliance உள்ள நியூசிலாந்து விமானத்தில் பறக்க நுளைவு சீட்டினைப் பெறவேண்டும். அச்சமயத்தில் கிறைஸ் சேர்ச் விமான நிலையத்துக்கு செல்ல இலவச விமான சீட்டு கிடைக்கவில்லை. வெலிங்டன் விமான நிலையத்துக்கு சென்று வரத்தான் நான் விரும்பிய நாளில் செல்ல விமான சீட்டு கிடைத்தது. இதனால் வெலிங்கடன் செல்ல நுளைவுச்சீட்டினைப் பெற்று அங்கிருந்து தெற்கு தீவிற்கு செல்ல விரும்பினேன். 2005, 2008ல் சென்ற போது பார்க்காத தெற்கு தீவில் உள்ள இடங்களுக்கே செல்ல விரும்பினேன். குறிப்பாக டனீடன் என்ற இடத்துக்கு செல்ல விரும்பினேன். சிட்னியில் இருந்தே, நியூசிலாந்தில் 9 இரவுகளில் தங்கும் விடுதிகளை முன்பதிவு செய்தேன்.

வெலிங்டன் விமான நிலைய ஓடு பாதை மிகவும் சிறியது என்பதினால் பெரும்பாலும் பெரியவிமானங்கள் வெலிங்டன் விமான நிலையத்துக்கு பறப்பதில்லை. ஒரு பக்கம் மலை மறுபக்கம் கடல் என இயற்கையாக அமைந்திருக்கும் இந்த விமான நிலையத்தில் விமானங்கள் இறங்கும் போது காற்றழுத்ததினால் சிலவேளைகளில் ஆடி ஆடித்தான் இறங்குகின்றன. விமானம் சிட்னியில் இருந்து வெலிங்கடனை நோக்கிப் பறக்க தொடங்கியது. சிட்னியில் இருந்து நியூசிலாந்தில் உள்ள எல்லா விமான நிலையங்களுக்கும் செல்ல 3 மணித்தியாலங்கள் தேவை. ஏயர் நியூசிலாந்தில் எனது இருக்கைக்கு முன்னால் அமைந்திருக்கும் தொலைக்காட்சியில் நியூசிலாந்தில் உள்ள முக்கிய இடங்களை குறிப்பாக இந்தப்பயணத்தில் பார்க்கவிருக்கும் இடங்கள் பற்றிய சுற்றுலாத்தகவல்களை பார்த்துக் கொண்டிருந்தேன்.

Monday, August 15, 2011

நியூசிலாந்து 39 - கன்மர் ஸ்பிரிங் (Hanmer Springs )

கிறைஸ் சேர்ச்சில் இருந்து கன்மர் ஸ்பிரிங் நோக்கிய பயணத்தில் கன்மர் ஸ்பிரிங்க் கிட்டப் பயணிக்கும் போது 'Waiau Gorge' என்ற இடத்தில் ஒரு பாலத்தின் கீழ் பயணிக்க வேண்டும். பாலத்தின் கீழ் ஆறு ஒன்று ஒடிக்கொண்டிருந்தது.


அந்த ஆற்றில் வேகப்படகில் (Jet Boat) பயணிக்கலாம். அத்துடன் 'Bungy Jump' போன்றவற்றையும் செய்யலாம்.
நான் குயின்ஸ்டவூனில் இரண்டு வேகப்படகில் சென்றதினை (நியூசிலாந்த்து பகுதி -21,22) விபரித்திருக்கிறேன். சிட்னியிலும் வேகப்படகில் சென்றிருக்கிறேன். இதனால் நான் இங்கு பயணிக்க விரும்பவில்லை. அத்துடன் படகில் செல்ல கட்டணம் 99 நியூசிலாந்து வெள்ளிகள் செலுத்த வேண்டும். என்னுடன் வந்த உறவினர்களில் சிலர் படகில்சென்றார்கள். படகோட்டி ஏன் இப்படகில் நான் வரவில்லை சென்று கேட்டார். நான் குயின்ஸ்டவூனில் சென்றிருக்கிறேன் என்றேன். அங்கு சென்றதினை விட இங்கு பயணம் நன்றாக இருக்கும். நீண்ட தூரத்துக்கு ஒரு மணித்தியாலம் பயணிக்கலாம் என்று எனக்கு ஆசை காட்டினார். ஆனாலும் நான் படகில் ஏறாத உறவினர்களோடு அங்கே இருந்து அப்பகுதியின் இயற்கை காட்சிகளை இரசித்தேன்.








ஒரு மணித்தியாலத்தின் பின்பு படகில் இருந்து உறவினர்கள் வந்ததும் கன்மர் ஸ்பிரிங்க் வெப்பக்குளத்தினை நோக்கிப் பயணித்தோம்.

சில நிமிடப்பயணங்களின் பின்பு கன்மர் ஸ்பிரிங்க் வெப்பக்குளத்தினை அடைந்தோம். காடுகளுக்கும் மலைகளுக்கும் நடுவே இந்த விருது பெற்ற வெப்பக்குளங்கள் அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு குளங்களும் வெவ்வேறான வெப்ப நிலையில் இருந்தன.
இங்கு நான்கு 35ல் இருந்து 38 செல்சியஸ் டிகிரியில் அமைந்த பாறை குளங்கள் (Rock pools) இருக்கின்றன. 40ல் இருந்து 42 செல்சியஸ் வெப்பமான கந்தகக்குளங்கள் (Sulphur Pools) மூன்றும் இருக்கின்றன.36ல் இருந்து 37 செல்சியஸ் வெப்பமான Rainbow Pools இருக்கின்றன. ஆனால் 38 - 40 செல்சியஸ் வெப்பமுடைய மூன்று Hexagonal Pools குளங்களில் தான் பல சுற்றுலாப் பயணிகள் விரும்பிக்குளிப்பார்கள். 28 டிகிரி செல்சியஸில் இருந்து 42 டிகிரி செல்சியஸ் வரையிலான இக்குளங்கள் எல்லாவற்றிலும் குளித்துப் பார்த்தேன். இங்கு மசாஜ்,facial போன்ற உதவிகளையும் பெறக்கூடியதாக இருந்தது.







அத்துடன் நீந்துபவர்களுக்கும் இங்கு வசதி செய்யப்பட்டிருக்கின்றது.


சில மணித்தியாலங்கள் கன்மர் ஸ்பிரிங்கில் குளித்து பொழுதைப் போக்கிய பின்பு சூடான உணவினை உண்டபின்பு கிறைஸ் சேர்ச்சினை நோக்கிப் பயணித்தோம்.

Wednesday, July 27, 2011

நியூசிலாந்து 38 - கிறைஸ் சேர்ச்சில் இருந்தி கன்மர் ஸ்பிரிங்க் வரை

முதல் 37 பதிவுகளில் நான் நியூசிலாந்து நாட்டின் தெற்குத் தீவுக்கு 2005ல் சென்ற போது ஏற்பட்ட அனுபவங்களை சொல்லி இருந்தேன். 2008ல் எனது பெற்றோர் சிட்னிக்கு வந்திருந்தார்கள். அவர்கள் தங்களது உறவினர்கள் வாழும் நியூசிலாந்தின் வடக்கு தீவில் இருக்கும் ஒக்லண்ட் நகரில் வசிக்கும் தங்களது உறவினர்களைப் பார்க்க விரும்பினார்கள். ஒக்லண்ட் நகரில் தான் ஈழத்தமிழர்கள் நியூசிலாந்தில் அதிகளவில் வாழ்கிறார்கள். பெற்றோரோடு வேறு உறவினர்களும் எங்களுடன் நியூசிலாந்துக்கு வர விரும்பினார்கள்.
நேரடியாக சிட்னியில் இருந்து ஒக்லண்டுக்கு செல்லுவதை விட, சிட்னியில் இருந்து நியூசிலாந்தின் தெற்குத் தீவில் இருக்கும் கிறைஸ் சேர்ச்சுக்கு சென்று அங்கிருந்து விமானத்தில் வடக்கு தீவில் இருக்கும் ஒக்லண்ட் சென்றால் மொத்த விமான சீட்டுக்கள் மலிவாக அச்சமயத்தில் கிடைத்தன. (எனக்கு சிங்கப்பூர் விமான புள்ளிகள் இருந்ததினால் இலவச பயணம் செய்யக்கூடியதாக இருந்தது. ) இதனால் நாங்கள் கிறைஸ் சேர்ச்சுக்கு(christchurch) சென்றோம். கிறைஸ் சேர்ச்சில் ஒரு நாள் பொழுதைப் போக்க விரும்பினோம். 2005 பயணத்தின் போது பார்க்காத கன்மர் ஸ்பிரிங்(hanmer springs) வெந்நீரூற்றுக்கு செல்ல விரும்பினேன். ஈழத்தின் நகரமான திருகோணமலையில் உள்ள பிரபல்யமான கன்னியா வெந்நீரூற்றினைப் போல நியூசிலாந்திலும் உள்ள கன்மர் ஸ்பிரிங்க் வெந்நீரூற்றும் பிரபல்யமானது.

அதிகப் பேருடன் சுற்றுலா சென்றால் நினைத்த நேரத்தில் விரும்பிய இடங்களுக்கு செல்ல முடியாது. மதிய உணவை கிறைஸ் சேர்ஸ் நகரத்தில் இருக்கிற இந்திய உணவகத்தில் உறவினர்கள் உண்ண விரும்பினார்கள்.சுற்றுலா செல்லும் போது இலங்கை, இந்தியா, சீனா, தாய், வியட்னாம் போன்ற உணவகங்களில் மதியம் உண்ணுவதை தவிர்ப்பதுண்டு. காரணம் அங்கே குறைந்தது ஒரு மணித்தியாலம் இருக்க வேண்டும். இரவு நேரங்களில் தான் இந்த உணவகங்களுக்கு செல்வதுண்டு. மதிய உணவகத்தினை இந்தியா உணவகம் ஒன்றில் உண்டோம். உணவகம் இருந்த பகுதிக்கு இப்பொழுது செல்ல ஒரு வித தயக்கம் இருக்கிறது. ஏன் நியூசிலாந்தும் செல்லவே தயக்கமாக இருக்கிறது. அண்மைக்காலங்களில் பாரிய நிலவதிர்வுகள் ஏற்பட்டு சிலர் கொல்லப்பட்டிருப்பதை கேள்விப்பட்டிருக்கிறோம்.

மதிய உணவை முடித்து விட்டு கன்மர் ஸ்பிரிங்கை நோக்கிப் பயணித்தோம். கிறைஸ் சேர்ச்சில் இருந்து கன்மர் ஸ்பிரிங்கிற்கு செல்ல 1.75 மணித்தியாலம் தேவை.(திரும்பிவர 3.50 மணித்தியாலம் தேவை).நான் நியூசிலாந்துக்கு 2008ல் சென்ற போது கோடை காலம். பெப்ரவரி மாதம். இருள நேரம் எடுக்கும்.

இயற்கைக் காட்சிகளை இரசித்துக் கொண்டு பயணித்தோம்.











Wednesday, June 01, 2011

நியூசிலாந்து 37 -கிறைஸ்சேர்ச் Gondola

அந்தாட்டிக்கா நிலையத்தைப் பார்த்து முடிக்க கிட்டத்தட்ட மாலை 4 மணியாகி விட்டது. அன்றைய மாலைப் பொழுதினைப் போக்க கிறைஸ்சேர்ச்சில் உள்ள Gondola க்கு சென்றேன். மலையின் அடியில் இருந்து மலை உச்சிக்கு கம்பிகையிற்றினால்( cable car -gondola) மேலே செல்லவேண்டும். ஏற்கனவே நான் 3ம் நாள் பயணமன்று குயின்ஸ்டவுனில் உள்ள gondolaக்கு சென்றதினைப் பற்றி நியூசிலாந்து 20 ல் விபரித்திருந்தேன்.

மேலே ஏறியதும் அங்கிருந்து எனது புகைப்படக்கருவியினால் எடுக்கப்பட்ட கிறைஸ் சேர்ச் நகரத்தின் புகைப்படங்கள்.








அன்றைய இரவு உணவைக் கிறைஸ்சேர்ச்சில் உள்ள வட இந்திய உணவகத்தில் உண்டபின்பு, விடுதிக்கு சென்றேன். இவ்விடுதியில் தான் நியூசிலாந்துக்கு வந்த போது முதல் நாள் இரவு தங்கியிருந்தேன். மறு நாள் அதிகாலை சிட்னியை நோக்கி விமானத்தில் பறந்தேன்.

இதுவரை காலமும் நியூசிலாந்து நாட்டின் தெற்குத்தீவில் உள்ள முக்கிய இடங்களுக்கு 2005ம் ஆண்டில் பயணித்த சம்பவங்களை இங்கு உங்களுடன் பகிர்ந்திருந்தேன். நியூசிலாந்த்துக்கு 2008ம் ஆண்டிலும் ,2009ம் ஆண்டிலும் பயணம் சென்றேன். 2008ல் வடக்கு தீவிற்கும், தெற்கு தீவிற்கும் பயணித்திருந்தேன். 2009ல் தெற்கு தீவில் மட்டுமே(வெலிங்டனைத் தவிர) பயணித்திருந்தேன். 2008ல் தெற்குத்தீவில் பார்த்தவற்றை அடுத்த பதிவில் இருந்து பார்க்கலாம்.