எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.



Monday, January 05, 2009

வனுவாட்டு - பகுதி24 -சுற்றுலா

வனுவாட்டு போட் விலாவில் நான் இருந்த விடுதியில் வரவேற்பு அறையில் வனவாட்டு சுற்றுலா பற்றிய விபரங்கள் இருந்தன. அதில் பல சுற்றுலா நிறுவனங்களின் விபரங்களும் சுற்றுலாக்கள் பற்றிய தகவல்களும் இருந்தன. ஒரே சுற்றுலா ஒன்றுக்கு மேற்பட்ட சுற்றுலா நிறுவனங்களினால் நடாத்தப்படுகின்றன. ஆனால் சுற்றுலா செல்லும் இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் சில சில வித்தியாசங்கள் இருக்கிறது. ஈவேட் தீவைச் சுற்றி நான் ஒரு நிறுவனத்தினால் நடாத்தப்படும் சுற்றுலாவில் கலந்து கொண்டதினை விபரித்து இருக்கிறேன். வேறு ஒரு நிறுவனம் ஈவேட் தீவைச்சுற்றி நாங்கள் பார்த்த இடத்தில் அதிகமான இடங்களையும், பார்க்காத சில இடங்களையும் காண்பிக்கிறது.

பெரும்பாலான சுற்றுலாக்கள் சில நிறுவனங்களினால் நடாத்தப்படுகின்றன. சில சுற்றுலாக்கள் முழு நாளும், சில அரை நாளும், சில 2 மணித்தியாலங்களும் எடுக்கும். சில சுற்றுலாக்கள் குறிப்பிட்ட கிழமைகளில் மட்டுமே நடைபெறும். அதற்கு ஏற்றமாதிரி நாங்கள் எங்கள் சுற்றுலாவினைத்தெரிவு செய்யவேண்டும். நான் வனுவாட்டுக்குப் போன போது அவுஸ்திரெலியா தாஸ்மேனியா[Tasmania] மானிலத்தின் தலைநகர் கோபாட்டில்[HoBart] இருந்து ஒரு பெரிய கப்பலில் பலர் சுற்றுலாவுக்கு இங்கே வந்திருந்தார்கள். அவர்கள் ஏற்கனவே சில சுற்றுலாக்களினைப் பதிந்தார்கள். இதனால் நான் விரும்பிய நேரத்தில் சில சுற்றுலாக்களுக்குச் செல்லமுடியவில்லை. எனினும் வேறு தினத்தில் நான் அச்சுற்றுலாக்களுக்குச் சென்றேன். நான் தங்கியிருந்த விடுதியின் மூலம் சுற்றுலாக்களினைப் பதியலாம். சுற்றுலா நடாத்தும் நிறுவனங்கள் சொகுசு வாகனத்தில் விடுதியில் இருந்து சுற்றுலா காட்ட கூட்டிக் கொண்டு போவார்கள்.

சில சுற்றுலாக்களுக்கு நாங்கள் பேருந்து அல்லது வாடகை மகிழுந்திலும் செல்லலாம். மேலதிகப்பணம் கூடக்கொடுத்தால் வேறு சில தனியார்களினால் நடாத்தப்படும் சொகுசு வாகனங்களில் இவ்விடங்களுக்குச் செல்லலாம். ஒரு முறை இயற்கையான தோட்டத்துக்கு சுற்றுலா சென்ற பிறகு நான் பேருந்தில் பயணித்தேன். பேருந்தில் மரக்கறிகள்,மீன்கள் போன்றவற்றினை கொண்டு மக்கள் சந்தைக்கு செல்வதினால் அவற்றின் நாற்றத்தினைச் சகிக்க முடியாமல் மூக்கைப் பொத்திக் கொண்டு பயணித்தேன். அதன் பிறகு பேரூந்தில் பயணிப்பதைத் தவிர்த்தேன்.

வனுவாட்டுக்கு சுற்றுலா செல்லும் பயணிகளில் பெரும்பாலோர் ஈவெட் தீவுக்கும், ஈவெட் தீவின் அருகில் உள்ள சிறு தீவுகளுக்கும் செல்வார்கள். அத்துடன் Tanna என்ற பெரிய தீவுக்கும் செல்வார்கள். இத்தீவிற்கு விமானத்தின் மூலம் போட்விலாவில் இருந்து ஒரு மணித்தியாலம் பிரயாணம் செய்ய வேண்டும். விமானக் கட்டணம்,ஒரு நாள் தங்குமிட வசதி, இத்தீவில் கட்டாயம் பார்க்கவேண்டிய எரிமலை ஆகியவற்றுக்கு கிட்டத்தட்ட 17500 வனவாட்டு வாற்று தேவைப்படுகிறது. இரவில் எரிமலை நெருப்பினை, நெருப்பின் மேலே, விமானத்தில் இருந்து கொண்டே பார்க்கலாம். இதனால் தான் கட்டணம் அதிகம் என்றாலும் சுற்றுலாப் பயணிகள் இத்தீவிற்கு கட்டாயம் செல்வார்கள். போட் விலா விமான நிலையத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் விமானம் ஒரு முறை இத்தீவிற்கு செல்கிறது. மற்றைய பெரியதீவுகளுக்கும் போட் விலாவில் இருந்து விமானம் (ஒரு மணித்தியாலம் பயணம், ஒரு முறை ஒரு நாளுக்கு விமானம் பயணிக்கிறது) செல்கிறது. பெரும்பாலும் எல்லாத்தீவுகளும் ஒரே மாதிரி என்பதினாலும் கட்டணம் அதிகம் என்பதினாலும் மிகவும் குறைவான சுற்றுலாப்பயணிகளே இத்தீவுகளுக்குச் செல்கிறார்கள். என்றாலும் இத்தீவுகளில் வாழ்பவர்களின் வாழ்க்கை முறைகள், கலாச்சாரங்கங்கள் தீவுகளுக்கிடையே வித்தியாசமாக இருக்கிறது.

நானும் Tanna தீவில் எரிமலையினைப் பார்க்க விரும்பி விடுதியில் உள்ள வரவேற்பாளாரின் உதவியுடன் பிரயாண முகவர்களிடம் பதிந்திருந்தேன். அவர்கள் குறிப்பிட்டளவு சுற்றுலாப் பயணிகள் சேர்ந்தால் கட்டாயம் பிரயாண ஒழுங்குகள் செய்வதாகவும் கட்டாயம் இடம் கிடைக்கும் என்றும் சொன்னார்கள். அதற்கு நான் எந்த நாள் என்றாலும் பரவாயில்லை என்றும் சொல்லியிருந்தேன். நான் சிட்னிக்கு திரும்பி வரும் நாளுக்கு முதல் நாள் இத்தீவுக்குச் செல்ல இடம் கிடைக்கும் என்றும், மறுநாள் திரும்பிவிடலாம் என்றும் சொன்னார்கள். ஆனால் கடைசி நேரத்தில் சுற்றுலாப் பயணிகள் சேராததினால் அந்த நிறுவனத்தினால் என்னால் Tanna தீவுக்கு செல்ல முடியவில்லை. நான் சிட்னிக்கு திரும்பி வரும் நாளில் விடுதியில் சந்தித்த அவுஸ்திரெலியாக் குடும்பத்தினாரைச் சந்தித்தேன். அவர்களுக்கும் இவ்வாறு இடம் கிடைக்காததினால் நேராக போட்விலா விமான நிலையத்துக்கு சென்று அங்கே பதிந்ததினால் அன்று Tanna தீவுக்கு செல்ல உள்ளதாகச் சொன்னார்கள். Tanna தீவில் உள்ள முகவர்கள் கட்டாயம் சிறு விமானத்தில் எரிமலையினைப் பார்க்கக் கூட்டிச் செல்வார்கள் என்றும் சொன்னார்கள். தென் பசுபிக் நாடுகளில் எரிமலையினைப் பார்க்கலாம். வனவாட்டில் பார்க்கதினைப் பிற்காலத்தில் வேறு ஒரு நாட்டில் பார்க்கலாம் தானே. இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்ட Tanna தீவின் எரிமலையின் புகைப்படத்தினை இங்கே இணைக்கிறேன்.

1 comment:

Aravinthan said...

உங்களின் கருத்துக்கு நன்றி