எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.



Thursday, August 05, 2010

நியூசிலாந்து 14 -வொக்ஸ் கிளேசியரில் இருந்து காஸ்ட்(Haast) வரை

வொக்ஸ் கிளேசியர் அடிவாரம்வரை சென்று திரும்பும் போது, வீதியில் காணப்பட்ட சில அறிவிப்புக்களில் சில இடங்களில் இருந்து வொக்ஸ்கிளேசியரைப் பார்க்கலாம் என்று எழுதப்பட்டிருந்தது.அவ்விடங்களுக்கு வாகனத்தில் சென்று பார்த்தோம். தூரத்தில் தெரியும் மலை இடைவெளிக்குள்ளே கிளேசியர் தெரிந்தது.

வொக்ஸ் கிளேசியரின் பிரதான சந்தியில் இருந்து வாகனத்தில் சில நிமிடங்கள் சென்று பிறகு ஒற்றையடிப் பாதைகளினூடாக 20 நிமிடங்கள் நடந்து சென்றால் மதேசன்(Lake matheson) என்ற ஏரியைப் பார்க்கலாம்.


மேலும் 25 நிமிட நடைப்பயணத்தில் மதேசன் ஏரியில் வொக்ஸ் கிளேசியரின் அழகிய நிழலைக் காணலாம்.

அன்று இரவு தங்கிய விடுதியின் (Lake matheson Motel)புகைப்படம்

வொக்ஸ் கிளேசியரில் மதியம், இரவு உணவுகளை இரு வெவ்வேறு உணவகத்தில் உண்டேன். மொத்தமாக அங்கு 3,4 உணவகங்ளே உள்ளன. எல்லாம் ஆங்கில உணவகங்கள். உணவும் பெரிதாக உருசியாக இருக்கவில்லை.

3ம் நாள் பயணம்
3ம் நாள் இரவில் குயின்ஸ்டவுனில் தங்குவதற்கு குயின்ஸ்டவுனில் உள்ள விடுதியில் முன்பதிவு செய்திருந்தேன். வொக்ஸ்கிளேசியரில் இருந்து கிட்டத்தட்ட நாலரை மணித்தியாலம் பயணம் செய்தால் தான் குயின்ஸ்டவுனை அடையலாம்.போகிற வழியில் காஸ்ட்(Haast) என்ற நகரத்தினுடாகச் செல்லவேண்டும். காஸ்டுக்கு செல்ல வொக்ஸ் கிளேசியரில் இருந்து கிட்டத்தட்ட ஒன்ரரை மணித்தியாலம் பயணிக்க வேண்டும்.

வொக்ஸ் கிளேசியரில் இருந்த உணவகங்களில் உணவுகள் பிடிக்காத காரணத்தினால், போகும் வழியில் வரும் உணவகம் ஒன்றில் உண்ணலாம் என்று நினைத்து காலை உணவை உண்ணாமல் காஸ்ட்டை நோக்கிப் பயணித்தேன்.

மலைகள்,அழகிய கடற்கரைகள், கடலில் தெரியும் பாறைகள், குன்றுகள் என்பவற்றை பார்த்து இரசித்துக் கொண்டு பயணித்தேன்.



வீதியில் உணவகம் ஒன்றையும் காண முடியாமல் இருந்தது. தென் நியூசிலாந்தில் முக்கிய நகரங்களைத் தவிர வீதிகளில் உணவகங்களோ கடைகளோ காண முடியாது. வழியில் ஒரு இடத்தில் விதியில் இருந்து பார்க்கும் போது ஒரு ஒற்றையடிப்பாதையின் முடிவில் ஒரு வீட்டில் காலை உணவகம் காணக்கூடியதாக இருந்தாலும், அவ்விடத்தில் வேறு வீடுகள், வாகனங்களையும் காணமுடியாமல் இருந்ததினால் அவ்விடத்தில் உண்ணுவதைத் தவிர்த்தேன். தென் நியூசிலாந்தில் நான் பயணித்த முக்கிய சில நகரங்களைத்தவிர மற்றைய இடங்களில் மக்கள், வாகனங்கள் குறைவாகவே காணக்கூடியதாக இருந்தது. பொதுவாக தென் நியூசிலாந்து பயணத்தில் வீதிகளில் வாகனங்களை மிகவும் குறைவாகவே காணக்கூடியதாக இருந்தது. ஒவ்வொரு நகரத்தை இணைக்கும் வீதிகளும் பெரும்பாலும் ஒரே ஒரு வீதிகளாக இருந்தது. பெரும்பாலான வீதிகள் மலைத்தொடர், நீர் நிலைகளுக்கு இடையேதான் அமைந்திருந்தன.ஒன்ரரை மணித்தியாலப் பயண முடிவில் காலை 11 மணியளவில் காஸ்டை அடைந்தேன்.

2 comments:

துளசி கோபால் said...

Lake Matheson ஒரு நல்ல தண்ணி ஏரி. நீங்க குவீன்ஸ் டவுன் வரவர ஏராளமான ஏரிகளைப் பார்க்கலாம். அந்த பகுதிக்கு லேக் டிஸ்ட்ரிக்ட்ன்னே பெயர் இருக்குது.

சின்னச்சின்ன ஊர்கள்தான் உங்களுக்கு வழியில் குறுக்கிடும். மக்கள் அதிகம் இல்லாத பகுதிகள் என்பதால் ஒரு பத்துப் பதினைஞ்சு கடைகள் இருந்தாலே அதிகம். ஊரே அவ்வளோதாங்க.
டீ ரூம்ஸ்ன்னு இருக்குமிடம் போனால் ப்ரெட், ஸ்கோன்ஸ், மஃப்பின்னு பேக்கரி சமாச்சாரம் கிடைக்கும்.

தெற்குத்தீவு மொத்தத்துக்குமே ஒரு மில்லியந்தான் மக்கள் தொகை.

Aravinthan said...

கருத்துக்கு நன்றிகள் துளசி கோபால்.

காஸ்டில் இருந்து குயின்ஸ்டவுன் வரை கண்ட ஏரிகளின் அழகை நான் பார்த்து வியந்தேன். இப்படி அழகான இடமா என்று ஆச்சரியப்படுத்தும் அழகான ஏரிகள்