எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.Tuesday, July 27, 2010

நியூசிலாந்து 13 - வொக்ஸ்கிளேசியர் அடிவாரத்தை நோக்கி நடைப்பயணம்

உலங்குவானூர்திப் பயணம் முடிவடைந்ததும் வொக்ஸ் கிளேசியர் அடிவாரம் வரை நடந்து செல்ல முடிவெடுத்தேன். வோக்ஸ்கிளேசியர் நகரத்தில் இருந்து வோக்ஸ்கிளேசியர் நடைப்பயணம் ஆரம்பிக்கும் இடமான வாகனத்தரிப்பிடத்துக்கு செல்ல 10 நிமிடங்கள் மகிழுந்தில் செல்லவேண்டும்.

பாறைகள், அருவிகள் நிறைந்த கரடு முரடான பாதைகளினூடாக நடந்து சென்றால் அடிவாரத்தினை அடையலாம்.சில இடங்களில் நடக்கும் போது கவனமாக நடக்க வேண்டும். கவனிக்காது விட்டால் விழக்கூடிய சந்தர்ப்பம் இருக்கிறது.
நடந்து செல்லும் போது பல இடங்களில் எழுதியிருந்த கிளேசியர் பற்றிய பல தகவல்களைக் கண்டேன். சில வருடங்களுக்கு முன்பு கிளேசியர் அந்த இடம் வரை இருந்ததாகவும் பிற்காலத்தில் அழிந்து பின்னோக்கிச் சென்றதாகவும் அத்தகவல்கள் மூலம் அறியக்கூடியதாக இருந்தது. 80ம் ஆண்டில் கிளேசியர் இருந்த இடத்தில் இருந்து 2005ல் நான் சென்ற போது கிளேசியர் உள்ள இடத்துக்கு நடந்து செல்ல 20 நிமிடங்களுக்கு மேல் எடுத்தது. அதாவது 25 வருடங்களில் கிளேசியரின் நீளம் குறைந்துள்ளதை அறியக்கூடியதாக இருந்தது.

அடிவாரத்துக்கு மிகவும் கிட்டச்செல்லக்கூடாது. உயிருக்கு ஆபத்தான இடம். பெரிய பனிக்கட்டிகள் விழவாய்ப்பிருக்கிறது. இதனால் அபாயம் என்ற அறிவுப்புப் பலகையை அங்கே வைத்திருக்கிறார்கள். சென்ற வருடம் மேற்கு அவுஸ்திரெலியாவைச் சேர்ந்த இந்தியர்கள் இருவர் அந்த அறிவுப்பலகையை அலட்சியம் செய்து அறிவுப்பலகைக்கு அப்பால் சென்றபோது பனிக்கட்டிகள் இவர்கள் மீது விழுந்ததினால் புதையுண்டு உயிரழந்தார்கள். இவர்களின் பெற்றோர்களின் முன்னால் இந்த அவலம் நடைபெற்றது.

அடிவாரத்திற்கு அப்பால் வழிகாட்டி ஒருவரின் உதவியுடன் கிலேசியரில் ஏறலாம். அதற்கு கட்டணமுண்டு. ஏறும் போது கிளேசியரில் வழுக்காமல் நடப்பதற்கு ஏற்ப பாதணிகள் அணிய வேண்டும். கொகிரிகாவில் சந்தித்த விடுதி உரிமையாளரின் ஆலோசனையினாலும் நேரப்பிரச்சனை காரணமாகவும் நான் கிளேசியரில் ஏறவில்லை என்று முன்பு உங்களுக்கு சொல்லியிருந்தேன். ஆனால் உலங்குவானூர்தியில் பயணித்து கிளேசியரில் நடந்தேன்.(ஏற்கனவே இப்பிரயாணம் பற்றி சென்ற பதிவில் சொல்லியிருந்தேன்). ஏற்கனவே வழிகாட்டி உதவியுடன் கிளேசியரில் ஏறி நடந்து முடிந்து திரும்பிக் கொண்டிருப்பவர்களை கீழே உள்ள படத்தில் நீங்கள் காணலாம். நான் அடிவாரத்தில் இருந்து எனது புகைப்படக்கருவியினால் இப்படத்தை எடுத்திருந்தேன்.

No comments: