எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.



Wednesday, June 30, 2010

நியூசிலாந்து 5 - ஆர்தர்பாசில் இருந்து புனாகைகி வரை



தேனீர்க்கடையில் இருந்து கிறெமவுத்தை(Greymouth)நோக்கிப்பயணித்தேன்.

மழையும் இடைவிடாது பெய்து கொண்டிருந்தது. வளைந்து செல்லும் பாதையின் அருகில் பள்ளத்தாக்குகள்.

அழகான இக்காட்சிகளை இரசித்துக் கொண்டு பயணித்தேன். எனினும் எனது பார்வையில் கிறேஸ் சேர்ச்சில் இருந்து ஆர்தர்பாசை நோக்கிச் செல்லும் பாதையில் உள்ள இயற்கை காட்சியானது, ஆர்தர்பாசில் இருந்து கிறேமவுத்தை நோக்கிச் செல்லும் போது பார்க்கும் இயற்கை காட்சியை விட மிகவும் அழகாக இருந்தது.


மலை உச்சியில் இருந்து வரும் நீர்வீழ்ச்சி வீதியில் விழாமல், அருகில் உள்ள பள்ளத்தாக்கில் விழுமாறு அமைக்கப்பட்டிருப்பதை மேலே உள்ள படத்தில் காணலாம்.

ஆர்தர்பாசைக் கடந்ததும் முதலில் தென்பட்ட எரிபொருள் நிலையத்தில் வாகனத்துக்கு தேவையான எரிபொருளைப் பெற்றேன். ஒரு மணித்தியாலத்துக்குப் பிறகு கண்ட எரிபொருள் நிலையம் இது. சந்தர்ப்பம் கிடைக்கும் போது எரிபொருளைப் பெறுவது நல்லது.

தொடர்ந்து பயணிக்கும் போது வானத்து முகில்களும் எமது அருகில் வந்து வந்து சென்றன.




மதியம் கிறெமவுத்தை அடைந்ததும் நேரம் இருப்பதினால் வடக்கு நோக்கி புனாகைகி(Punakaiki) நோக்கிப் பயணித்தேன்.கிறெமவுத்தில் இருந்து வடக்கே உள்ள Punakaiki நோக்கி பிரயாணம் செய்யும் போது கடலில் அழகான கற்பாறைகளைக் காணலாம். அவுஸ்திரெலியா விக்டோரியா மாநிலத்தில் உள்ள Great Ocean Roadல் பயணிக்கும் உணர்வை இங்கு உணரலாம். நான் இப்பதிவில் 2005ல் பார்த்த படங்களைத் தான் இணைத்து வருகிறேன். 2005ல் சென்ற போது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. 2009ல் சென்ற போது வானம் மிகவும் அமைதியாக இருந்ததினால், இவ்விடத்தில் பயணிக்கும் போது 2005யை விட அழகாகத் தென்பட்டது.
2009ல் பார்த்தவற்றை எழுதும்போது அப்படங்களை இணைக்கிறேன்.



Thursday, June 03, 2010

நியூசிலாந்து 4 - ஆர்தர்பாஸ்(Arthur's Pass)

ஆர்தர்பாசை நெருங்க, நெருங்க அழகான இயற்கைக்காட்சிகளைக் காணக்கூடியதாக இருந்தது. மழையும் விட்டு விட்டுப் பெய்து கொண்டிருந்தது.









அழகிய காட்சிகளை இரசித்துக் கொண்டு ஒருவாறு ஆர்தர்பாசை அடைந்தேன்.

Arthur's Pass பூங்கா(Arthur's Pass National Park) மிகவும் பெரியது.அதனைக் கடக்க கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் (மகிழுந்தில் செல்ல) எடுக்கும்.ஆர்தர்பாசில் ஒரே ஒரு தேனீர் கடை(cafe) மட்டுமே இருந்தது. 2009ல் பயணித்தபோது மேலும் ஒரு தேனீர்கடை இருந்ததைக் கண்டேன்.

அதன் அருகில் சுற்றுலாத்தகவல் நிலையம் அமைந்திருந்தது. காலை 8 மணிக்கு ஆரம்பித்த எனது பயணம், இவ்விடத்துக்கு வர கிட்டத்தட்ட காலை 10 மணியாகி விட்டது. அருகில் உணவகம் ஒன்றும் இல்லாததினால் இந்த தேனீர் கடையில் இருந்த சிறு உணவுகளை உண்டேன்.
சுற்றுலாப் பயணிகள் இங்கே ஒற்றை அடிப்பாதைகளினூடாக நடந்து சென்று நீர்வீழ்ச்சிகளைப் பார்ப்பார்கள். சில நீர்வீழ்ச்சிகளைப் பார்க்க 20, 30 நிமிடங்கள் நடக்க வேண்டும். சிலவற்றைப்பார்க்க 1,2 மணித்தியாலம் எடுக்கும். சிலர் மலைகளில் ஏறுவதுமுண்டு. ஆனால் இதற்கு முழுனாளும் செலவிட வேண்டும். அன்று காலநிலை சரியில்லை. தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது. Arthur's Pass இல் இருந்து நான் அன்று இரவு தங்கும் Hokitikaவுக்கு செல்ல 2 மணித்தியாலம் இருக்கிறது. காலநிலை சரியில்லாததினால் மழையில் நனைய வேண்டும் என்பதினாலும் ,நீர்வீழ்ச்சிகளை அவுஸ்திரெலியாவில் உள்ள பல இடங்களிலும்,சிறிலங்காவில் நுவரெலியாவிலும் ஏற்கனவே பார்த்ததினாலும்,நான் போகும் வழியில் உள்ள Greymouthஇல் இருந்து வடக்கே 30 நிமிடப் பயணத்தில்
வரும் Punakaikiயில் நேரத்தை செலவிட விரும்பினேன்.

2009ம் ஆண்டு 3வது முறையாக நியூசிலாந்துக்கு சுற்றுலா சென்றேன்.வெலிங்டன், டனிடன் போன்ற 2005ல் பார்க்காத இடங்களை 2009ல் பார்த்தேன். இடையில் ஆர்தர்பாசினூடாகப் பயணிக்கவேண்டிய தேவை ஏற்பட்டது. அப்பொழுது நான் ஆர்தர்பாசில் பார்த்த நீர்வீழ்ச்சியை 2009ம் ஆண்டு நியூசிலாந்து அனுபவம் பற்றி எழுதும் போது உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மேலே படத்தில் காணப்படும் பறவைகளை ஆர்தர்பாஸ் சுற்றுலா மையம் இருக்கும் பகுதிகளில் காணலாம். 2009ம் ஆண்டில் சென்றபோதும் பார்த்திருக்கிறேன். இப்பறவைகளை ஆர்தர்பாசுக்கு சுற்றுலா செல்பவர்கள் நிச்சயம் காண்பார்கள்.