எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.Tuesday, October 26, 2010

நியூசிலாந்து 29 - மில்வேட் சவுண்டில் இருந்து குரொம்வெல் வரை

'underwater observatory'க்கு சென்று கடல் உயிரினங்களைப் பார்த்த பின்பு படிகளினூடாக மேலே வந்து கப்பலுக்காகக் காவல் இருந்தோம். சில நிமிடங்களில் கப்பல் ஒன்று வந்தது. கப்பலின் மேல் தளத்துக்கு சென்று இயற்கைக்காட்சிகளை இரசித்தேன்.


கப்பல் பயணம் முடிவடைந்ததும், மில்வேட் சவுண்டில் காலை உணவு உண்ட இடத்தில் sandwichனை வாங்கி உண்டபின் குயின்ஸ்டவுனை நோக்கிப் பயணித்தேன். அன்றைய இரவு தங்குவதற்கு குயின்ஸ்டவுனில் மூன்றாம் நாள் பயண முடிவில் தங்கியிருந்த விடுதியில் பதிவு செய்திருந்தேன். மில்வேட் சவுண்டில் இருந்து ரி-ஆனாக்குச் செல்ல இரண்டு மணித்தியாலம் எடுக்கும். ரி-ஆனாவில் இருந்து குயின்ஸ்டவுனுக்குச் செல்ல மேலும் இரண்டு மணித்தியாலமும், பதினைந்து நிமிடங்களும் தேவை. ஆக மொத்தம் நான்கு மணித்தியாலமும், பதினைந்து நிமிடங்களும் தேவை.தென் நியூசிலாந்தில் பெரும்பாலான இடங்களில் இருள முதல் பயணிப்பது நல்லது. மலைகளினூடாக இருளில் பயணிப்பது நல்லதல்ல. வந்த பாதையினால் தான் திரும்பிச் செல்ல வேண்டும். ஏற்கனவே நியூசிலாந்து பதிவு 23, 25ல் குயின்ஸ்டவுனில் இருந்து மில்வேட் சவுண்ட்வரை சென்றபோது பார்த்தவற்றை விபரித்திருப்பதினால் இங்கு நான் மறுபடியும் விபரிக்கவில்லை.


மாலை ஆறு மணியளவில் குயின்ஸ்டவுனை அடைந்தேன். குயின்ஸ்டவுனில் மூன்றாம் நாள் இரவு தாய் நாட்டு உணவகமொன்றில் உணவை உண்டதினால், அன்றைய இரவு வட இந்திய உணவகமொன்றில் உணவை உண்டேன். அருகில் இருந்த சுற்றுலாத் தகவல் மையத்தில் மறு நாள் செல்லவுள்ள 'Cromwell','Omarama' போன்ற இடங்களில் என்ன பார்க்கலாம் என்று வினாவினேன். அங்கு பார்ப்பதற்கு பெரிதாக இடங்கள் இல்லை என்று சொன்னார்கள். மறு நாள் இரவு Twizelல் தங்க பதிவு செய்திருந்தேன்.

6ம் நாள் பயணம்

ஆறாம் நாள் காலை விடுதியில் உணவினை உண்டபின் (இவ்விடுதியில் தான் மூன்றாம் நாள் தங்கி இருந்தேன். இவ்விடுதியில் தங்குபவர்களுக்கு இலவசமாக காலை உணவு வழங்கினார்கள்) எனது பயணத்தினை டுவைசலை(Twizel) நோக்கி ஆரம்பித்தேன். 'Cromwell','Omarama' போன்ற இடங்களின் ஊடாகப் பயணிக்க வேண்டும். குயின்ஸ்டவுனில் இருந்து ஒமரமாவுக்குச்(Omarama) செல்ல இரண்டு மணித்தியாலம் தேவை. இரு இடங்களுக்கும் இடையில் இருப்பது குரொம்வெல்(Cromwell)

குயின்ஸ்டவுன் விடுதியில் இருந்து டுவைசலை நோக்கிச்செல்லும் போது கிட்டத்தட்ட பத்து நிமிடப் பயணமுடிவில் ஒரு பாலத்தினைக் காணலாம். இப்பாலத்தின் மேல்தான் பயணிக்க வேண்டும். அப்பாலத்தில் இருந்து சிலர் கால்களைக் கையிற்றினால் கட்டப்பட்ட நிலையில் கீழே பள்ளத்தாக்கினுள் குதித்தார்கள்(Bungy Jump). பள்ளத்தாக்கினுள் ஏரி ஒன்று ஒடிக் கொண்டிருந்தது. கால்கள் கையிற்றினால் கட்டப்பட்டு இருப்பதினால் தலை கீழாக விழ வேண்டும்.
குதிப்பதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். ஏன் காசைக் குடுத்து சித்திரவாதைப் பட வேண்டும் என நினைத்து தொடர்ந்து பயணித்தேன்.

ஐம்பது நிமிடங்களில் குரொம்வெல்(Cromwell) என்ற இடத்தை அடைந்தேன். அங்கு அப்பிள், பியர்ஸ் போன்ற பழங்களின் சிலைகளை வீதியில் கண்டேன்.


அங்கே உள்ள சுற்றுலா தகவல் மையத்தில் குரொம்வெலில் பார்க்கக்கூடிய இடங்கள் எவை என்று கேட்க, அங்கே பொதுவாக வைன் தோட்டம் இருப்பதாகவும் வைன்(Wine -திராட்சைப் பழச் சாற்றினால் செய்யப்படும் குடிவகை) தோட்டத்திற்கு சுற்றுலா செல்லலாம் என்றும் சொன்னார்கள். அவ்விடத்தில் பார்க்கக்கூடிய வேறு இடங்கள் இல்லை என்பதினாலும் சிட்னிக்கு வெளியே உள்ள Hunter Valleyயில் ஏற்கனவே பெரிய வைன் தோட்டங்களைப் பார்த்ததினாலும் டுவைசலை நோக்கிப் பயணித்தேன்.

2 comments:

துளசி கோபால் said...

ஹோமர் டன்னல் படத்துக்கு நன்றி.

ஏர்ரோ டவுன் பார்க்கலையா?


க்ராம்வெல் ஏரியாவில் பழத்தோட்டங்கள் அதிகமா இருப்பதால் சீஸன்களில் அருமையான பழங்கள் மலிவாக் கிடைக்கும்.

செர்ரி சீஸன்லே அட்டகாசமான ருசியில்....... ஹைய்யோ..... எப்படிச் சொல்வேன்!

தொடர்ந்து வர்றேன்.

Aravinthan said...

இந்த 2006 பயணத்தில் வொக்ஸ் கிளேசியர், மில்வேட் சவுண்ட் போன்ற இடங்களை 7 நாட்களுக்குள் பார்க்கும் படி பயண ஒழுங்குகள் செய்திருந்தேன். நான் 7 வது நாள் முடிய கிறைஸ் சேர்ச்சுக்கு செல்ல வேணும் என்றதினால் ஏர்ரோ டவுனுக்கு செல்ல வில்லை.

குரொம்வெல் பற்றிய தகவலுக்கு நன்றிகள்