எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.Thursday, August 21, 2008

வனுவாட்டு - பகுதி13 - Efate(இவெட்) தீவைச்சுற்றி ஒரு நாள் பயணம்


போட்விலாவில் இருந்து மணிக்குட்டின் திசையாக குளிரூட்டப்பட்ட வாகனத்தில் பிரயாணத்தை ஆரம்பித்தோம். 1940ம் ஆண்டில் தான் முதன் முதலாக அமெரிக்காப் படைகளினால் இத்தீவினைச்சுற்றி உள்ள இந்த ஒரே பாதை அமைக்கப்பட்டது. போட்விலாவில் மட்டும் தான் நல்ல தார் வீதியினைக் காணலாம். மற்றைய இடங்களில் குண்டும் குழியுமான தார் இல்லாத கரடு முரடான பாதைகள் தான் இருக்கும். கரையோரங்களில் தான் வாகனங்கள் போகக்கூடிய பாதைகள் உண்டு. சுற்றுலாவும் கரையோரங்களினை அண்டியதாகவே இருந்தது. போகும் போது வேறு விடுதிகளில் இருந்தும் சிலர் எங்களுடன் இணைந்தார்கள்.


போகும்போது ஏற்கனவே குறிப்பிட்ட Mele(பகுதி6),Hideaway Island(world underwater post office)(பகுதி6),குறிப்பிடாத Le Lepa Island, Moso island,Devils Point, Port villa Harbour போன்றவற்றின் இயற்கைக் காட்சிகளினை வாகனத்தில் இருந்து பார்த்துக் கொண்டு பயணம் செய்தோம்.

படத்தில் கடலின் நடுவே தெரியும் நிலப்பரப்பு HIDEAWAY ISLAND


வாகனத்தில் இருந்து இயற்கைக்காட்சிகள் பார்த்துக்கொண்டே Le Lepa landing என்ற இடத்துக்கு வந்தோம். இங்கிருந்து தான் Le Lepa தீவுக்கு இலவசப்படகுச் சேவைகள் நடைபெறுகிறது.

அடுத்ததாக எங்களது வாகனம் Taniliou Havana Harbor என்ற இடத்தில் நிற்க, அங்கே பிஸ்கட்டுக்களும், குளிர்பானங்களும் தந்தார்கள்.


முன்பு அமெரிக்கா இராணுவத்தின் கடல் விமானம் வந்து தங்குமிடமாக இவ்விடம் இருந்தது(Original water base for the amphibious Catalina sea planes).

அங்கே ஒரு கொட்டிலில் 2ம் உலகப்போரின் போது அமெரிக்காப் படைகள் பாவித்த எறிகணைகள், சன்னங்கள், கொக்கா கோலா போத்தல்களைக் காணக்கூடியதாக இருந்தது. அமெரிக்காவின் ஒவ்வொரு மாகாணத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட கொக்காகோலாப் போத்தல்களினை, அந்தக்கொக்கா கோலா போத்தல்களின் மூடிகளில் இருந்து அறியக்கூடியதாக இருந்தது. மூடிகளில் NY, NJ,NH,CT,CA(US State Codes)என மாகாணங்கள் குறிக்கப்பட்டிருந்தது. படத்தில் உள்ளவர் தான் இவற்றினைச் சேகரித்து இக்கொட்டிலில் வைத்திருந்து எங்களுக்கு விளங்கப் படுத்தினார்.

இவ்விடத்துக்கு அருகில் சுற்றுலாப்பயணிகள் உபயோகிப்பதற்காக இருந்த மலசலகூடத்தினை கீழே உள்ள படத்தில் காணலாம். இம்மலசலகூடம் மக்கள் வாழும் குடியிருப்புக்களில் அமைந்திருக்கிறது. இங்கு சென்ற எங்களுடன் வந்த வெள்ளைக்காரர்கள் நிரம்ப அவதிப்பட்டார்கள்.

அருகில் உள்ள வீடுகளில் பார்த்தால் பெரும்பாலோர் மர நிழலில் இருந்து கதைத்துக்கொண்டும், படுத்துக்கொண்டும் இருந்தார்கள். இவர்கள் எல்லா நேரமும் வேலைக்கு போவதில்லை. சில மணித்தியாலங்கள் வேலைக்குப் போய்விட்டு (தோட்டவேலை அல்லது மீன்பிடிப்பு) அதில் கிடைக்கும் உணவுகளினை உண்டு மிகுதி நேரங்களில் ஒய்வெடுத்து பொழுதைப் போக்கி வாழ்கிறார்கள். பெரும்பாலான மக்கள் ஆடம்பரமாக இங்கு வாழ்வதில்லை. தேவைக்கு மேல் ஆசைப்படுவதுமில்லை. இதனால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். உலகில் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழும் நாடாக பி.பி.ஸியினால் (கருத்துக் கணிப்பின் போது) வனுவாட்டு நாடு தெரிவு செய்யப்பட்டுள்ளது.(பகுதி11)

No comments: