எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.Thursday, August 14, 2008

வனுவாட்டு சுற்றுலா - பகுதி11 -உலகில் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழும் நாடு

பெரும்பாலான வனுவாட்டு மக்கள் தங்களது தோட்டங்களில் வேலை செய்து, அதில் கிடைக்கும் உணவினையும், மீன்பிடித்து கிடைக்கும் உணவினையும் உண்கிறார்கள். உண்டபின்பு மர நிழலில் பாய்களினை விரித்துப்படுக்கச் சென்று விடுவார்கள். சிலர் மர நிழலில் இருந்து அரட்டை அடிப்பார்கள். சிலர் கடலிலும், குளம் குட்டைகளிலும் நீந்தியும், குளித்துக்கொண்டும் இருப்பார்கள். வேறு வேலைகளுக்குப் போவதில்லை. உணவு தேடுவதும், உண்டபின் கவலையற்று, மிகவும் மகிழ்ச்சியாகப் பொழுதினைப் போக்காட்டுவார்கள். மற்றைய நாட்டு மக்கள் அதிகமாக ஆசைப்பட்டு பணத்தினைத் தேட நாள் பூராவும் உழைக்கிறார்கள். கடைசியில் காசு வரும். ஆனால் அவர்களுக்கு மகிழ்ச்சி வராது. ஆனால் வனுவாட்டு மக்களில் பலர் பணத்தின் மேல் அதிக ஆசைப்பட்டவர்கள் அல்ல. இருப்பதினைக் கொண்டு சந்தோசமாக வாழ்பவர்கள்.உலகில் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழும் நாடாக பி.பி.சி யினால் (கருத்துக் கணிப்பின் போது) வனுவாட்டு நாடு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

மகிழ்ச்சிக்கான காரணிகள் எவை? (ஆங்கிலத்தில்)
http://news.bbc.co.uk/1/hi/programmes/from...ent/7427768.stm
http://news.bbc.co.uk/1/hi/magazine/5172254.stm


மேலதிக தகவல்கள்
http://news.bbc.co.uk/1/hi/world/asia-paci...les/1249790.stm
http://news.bbc.co.uk/1/hi/world/asia-pacific/6295546.stm

வனுவாட்டினைப்பற்றி அறிந்த சில விடயங்கள்.

வனுவாட்டில் இரண்டு விதமான பாம்புகள் இருக்கிறது. ஆனால் அவை விசமற்ற பாம்புகள். சிலந்திகளும் விசமற்றவை. கடவுள் வனு-அற்றின் மீது பாசம் கொண்டதினால் தான் விசமுள்ள ஊர்வனங்களினை வனு-அற்றில் படைக்கவில்லை என்று எனக்கு ஒரு உள்ளூர் வாசி சொல்லியிருந்தார்.

இங்குள்ள மக்கள் அதிகமானோர் வீடுகளில் பன்றிகளை வளர்க்கிறார்கள்.இலங்கையில் திருமணத்தின் போது பெண்வீட்டாரினால் மாப்பிள்ளைக்கு சீதனம் வழங்குவது போல வனு-அற்றில் பெண்வீட்டார்கள், மணமகனுக்கு தந்தமுள்ள மிகவும் பெரிய பன்றியினைத் திருமணத்தின் போது சீதனமாகக் கொடுப்பார்கள்.

வனுவாட்டுக்கடலில் Malekula என்ற தீவுக்கருகில் 2005ம் ஆண்டு ஜுன் மாதம் நியூசிலாந்தினைச் சேர்ந்த 7 வயதுச் சிறுமி பெரிய சுறாவினால் தாக்கப்பட்டார். ஆனால் வனுவாட்டின் முக்கிய தீவான இவெட் தீவைச் சுற்றியும்,அருகில் உள்ள தீவுகளைனைச் சுற்றியும் சுறாக்கள் வருவது இல்லை.

விடுதியில் இருக்கும் போது நான் இருந்த கதிரை 1 நிமிடம் ஆடுவது போலத்தென்பட்டது. விடுதியில் விசாரிக்க அங்குள்ளவர்கள் 'எதாவது தீவில் நில அதிர்வு ஏற்பட்டிருக்கும், இது இங்கு அடிக்கடி நடைபெறும்' என்று சர்வ சாதாரணமாகச் சொன்னார்கள்.போட்விலாவினைச் சுற்றிப்பார்த்துக்கொண்டு வரும் போது படத்தில் தண்ணீரில் தெரியும் குன்று "2001ல் நடந்த நில அதிர்வின் போது பக்கத்து மலையில் இருந்து பிரிந்து வீதியில் உருண்டு தண்ணீரில் விழுந்தது.. நல்லகாலம் இரவு என்பதினால் ஒருவரும் அவ்வீதியாகச் செல்லவில்லை" என்றார்கள். போட்விலா துறைமுகத்திற்கு அருகில் இக்குன்று இருக்கிறது.


வனுவாட்டில் உள்ள பாடசாலைகளுக்கு சில வெளி நாடுகளும், ஐரோப்பிய யூனியனும் நிதி உதவி செய்கின்றன.

வனுவாட்டில் 'Vanuatu Daily Post' என்ற ஆங்கிலபத்திரிகை மட்டுமே வெளிவருகிறது.

இங்கு 'Shell','BP, Mobil' ஆகிய 3 எரிபொருள் நிலையங்கள் இருக்கின்றன.

ஜூலை 30ம் திகதி சுதந்திர நாளாகக் கொண்டாடப்படுகிறது.

2 comments:

Anonymous said...

கேரளாவை கடவுளின் பூமி என்பார்கள்...வனுஅற்று கடவுள் சுற்றுலா போகும் அடுத்த பூமி போல இருக்கே...

Aravinthan said...

வாசித்து கருத்துகள் பகிர்ந்தமைக்கு நன்றிகள் தூயா.