எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.



Monday, November 19, 2012

நியூசிலாந்து 61- Moeraki Boulders (நீராலும் காற்றாலும் தேய்வடைந்த பெரும் பாறைகள்)

உலகில் மிகவும் செங்குத்தான பாதையான (world's steepest street ) 'Baldwin Street'ல் இருந்து கிறைச்சேர்ச்சினை நோக்கிப் பயணித்தோம்.கிறைச்சேர்ச் செல்ல இன்னும் 4 மணித்தியாலமும் 45 நிமிடங்களும் தேவை. டனீடனில் இருந்து கிறைஸ்சேர்ச் செல்லும் போது ஒரு மணித்தியாலப் பயண முடிவில் கம்டன்(Hampden) என்ற இடத்தினை அடைந்தோம்.
அங்கே 'Koekohe' என்ற கடற்கரை இருக்கிறது. அக்கடற்கரையில் 'Moeraki Boulders' என்ற நீராலும் காற்றாலும் தேய்வடைந்த பெரும் பாறைகள் இருக்கின்றன. கடலின் அடியில் இருந்த மங்கிய செடி,தழை போன்ற பல தாதுப் பொருள்கள் கடல் அலைக்கு அங்குமிங்கும் ஓடி ஒன்றாக சேரும்போது வண்டல் மண் உருவாகிறது. 60 மில்லியன் வருடங்களுக்கு முன்பு, இந்த வண்டல் மண்ணினால் உருவானவையே இந்த 'Moeraki Boulders'.
இடையிடையே வந்து போகும் மழைத்தூறலினால் குளிராக இருந்ததினால் அருகில் இருந்த தேனீர் கடை ஒன்றில் சூடான பானங்களை அருந்திக் கொண்டு தூரத்தில் தெரியும் பாறைகளின் அழகினை இரசித்தோம்.
தமிழகத்து தமிழ்ப் படமான 'பிரியாமான தோழி'யில் வரும் 'பெண்ணே நீயூம் பெண்ணா' என்ற பாடல் காட்சியிலும் இந்தப் பாறைகள்('Moeraki Boulders') வருகின்றன. அழகான இப்பாறைகளைப் பார்த்து இரசித்தபின்பு மீண்டும் கிறைச் சேர்ச்சினை நோக்கிப் பயணித்தோம். அரை மணித்தியாலப் பயண முடிவில் ஒமாறு(Oamaru) என்ற இடத்தினை அடைந்தோம். இங்கு பார்ப்பதற்கு, சுற்றுலா செல்வதற்கு பல இடங்கள் இருந்தன. நேரமின்மையினால் கிறைச் சேர்ச்சினை நோக்கிப் பயணித்தோம். ஒமாறு(Oamaru)வில் இருந்து மேலும் ஒரு மணித்தியாலப் பயண முடிவில் ரிமாறுவினை(Timaru) அடைந்தோம்.
ரிமாறுவில் இருந்து மேலும் ஒரு மணித்தியாலப் பயணத்தில் 'Ashburton'என்ற இடத்தினை அடைந்தோம்.
'Ashburton'ல் இருந்து 1 மணித்தியாலமும் 15 நிமிடங்களும் பயணித்தால் Christchurch(கிறைச் சேர்ச்) வரும்.
ரிமாறுவில் இருந்து கிறைச்சேர்ச் வரும் வழியில் பார்ப்பதற்கு பெரிதாக ஒன்றும் இருக்கவில்லை. நியூசிலாந்தின் மிகவும் பெரிய மலையான குக் மலை தூரத்தில் தெரிந்ததினைக் கீழே உள்ள படத்தில் காணலாம்.(குக் மலை பற்றி நியூசிலாந்து பகுதி 33ல் சொல்லியிருக்கிறேன்.)
கிட்டதட்ட இரவு 7.30 மணியளவில் கிறைச்சேர்ச்சில் அன்றிரவு தங்கும் விடுதியினை அடைந்தோம்.
நான் நியூசிலாந்துக்கு சென்ற போது ஒவ்வொரு விடுதியிலும் ஒரு இரவு தான் தங்குவதுண்டு. ஒரு விடுதியில் தங்கிவிட்டு மறு நாள் காலை எழும்பியதும் 3, 5 மணித்தியாலம் சென்று வேறு ஒரு விடுதியில் தங்குவேன். இதனால் 'motel'போன்ற விடுதிகளில் தங்குவேன். 'Motel'யினை விட 'Hotel'ல் தங்க 10, 20 வெள்ளிகள் அதிகம் தேவை. நான் நெடுகவும் 'Motel'ல் தங்குவதினால், என்னுடன் பயணித்தவர்கள் ஒரு நாளாவது 'Hotel'ல் தங்கலாம் தானே என்று கேட்டார்கள். இதனால் கிறைஸ் சேர்ச்சில் 'Hotel'ல் தங்க முன்பதிவு செய்திருந்தேன். 200க்கு மேற்பட்ட அறைகளை உடைய இந்த விடுதியில் நாங்கள் அன்று இரவு தங்கும் அறைக்கு சென்றோம். அவ்வறை பெரிதாக சுத்தம் செய்யப்படவில்லை. இதனால் விடுதியின் வரவேற்பாளரிடம் முறையிட்டோம். எங்களுக்கு வேறு ஒரு விலை கூடிய அறையில் தங்க, முதல் அறையில் தங்கும் கட்டணத்துடன் அனுமதி தந்தார்கள். முதல் அறையினை விட இது ஓரளவு சுத்தமாக இருந்தாலும் முற்று முழுதாக சுத்தமாக இருக்கவில்லை. வட இந்திய மாணவர்கள் அவ்விடுதியினை சுத்தம் செய்வதற்கு நியமித்து இருந்தார்கள். அவர்கள் குறைந்த நேரத்தில் அதிகளவு விடுதியினை சுத்தம் செய்வதினால் அவ்விடுதிகள் 100வீதமும் சுத்தமாக இருப்பதில்லை. ஆனால் நியூசிலாந்தில் Motelகளினை நடாத்துபவர்களே Motelகளினை சுத்தம் செய்வதினால் அவை சுத்தமாகவே இருக்கின்றன. Motelல்களில் பெரும்பாலும் 10க்கு குறைவான அறைகளே இருக்கும். இலகுவாக சுத்தம் செய்யலாம். கொட்டல்களை சுத்தம் செய்பவர்கள் பெரும்பாலும் குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்யும் வெளினாட்டவர்கள் என்பதினாலும் 100க்கு மேற்பட்ட அறைகள் என்பதினாலும் சில கொட்டல்கள் சுத்தமாக இருப்பதில்லை. நியூசிலாந்தில் ஒரு நாள் தங்குவதற்கு கொட்டலினை(Hotel) விட மொட்டல்கள்(Motel) தான் சிறந்தது.

No comments: