எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.



Wednesday, July 11, 2012

நியூசிலாந்து 52 -ரிமாறுவில்(Timaru) இருந்து டனிடன்(Dunedin) வரை

ரிமாறுவில்(Timaru) பார்ப்பதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை. தெற்கு கன்ரபரி அருங்காட்சியம் இங்கு தான் இருக்கின்றது. 'Caroline bay park' என்ற பூங்கா ஒன்று கடற்கரையின் அருகில் இருக்கின்றது.நத்தார், ஆங்கில புதுவருட விடுமுறைகளில் இங்கு நடைபெறும் களியாட்ட விழா(Caroline Bay Carnival) ரிமாறுவில் பிரபல்யமானது. நாங்கள் இங்கு வந்த போது நவம்பர் மாதம். அன்றைய மழைப் பொழுதினை இந்தப்பூங்காவில் செலவிட்டோம். சிறுவர்கள், குழந்தைகள் விளையாடுவதற்கு ஏற்ற ஊஞ்சல் போன்றவை இங்கே இருந்தன. ரிமாறுவில் இருக்கும் தாய்லாந்து நாட்டு உணவகத்தில் இரவு உணவினை உண்டபின்பு விடுதியை அடைந்தோம். வெலிங்டன் விமான நிலையத்தில் இருந்து வெளிக்கிட்டு 3 நாட்கள் பயண முடிவில் அன்றைய இரவினை ரிமாறு விடுதியில் தங்கினோம். இந்தச் சுற்றுலாப்பயணத்தில் முக்கியமாக டனிடனில்(Dunedin) இருந்து வெளிக்கிடும் 'Taieri Gorge train journey' என்ற புகையிரதப்பயணத்தில் பயணிக்க விரும்பினேன். கோடை காலத்தில் (ஒக்டோபர் மாதம் முதல்) இரண்டு முறை இந்தப்புகையிரதம் காலை 9:30 மணிக்கும் மாலை 2:30 மணிக்கும் டனிடனில் இருந்து பயணிக்கும். பயண நேரம் 4 மணித்தியாலம். அதாவது 9:30க்கு பயணிக்கும் புகையிரதம் மதியம் 1:30க்கும், 2:30க்கு பயணிக்கும் புகையிரதம் மாலை 6:30க்கும் மறுபடியும் டனிடனை வந்தடையும். 4ம் நாள் இரவில் டனிடனிலும், 5ம் நாள் இரவில் கிறைஸ் சேர்ச்சில்(Christchurch) தங்குவதற்கும் முன்பதிவு செய்திருந்தேன். ரிமாறுவில் இருந்து ஒரு மணித்தியாலப் பயணத்தில் ஒமாறு(Oamaru) என்ற இடம் இருக்கிறது.
ஒமாறுவில் இருந்து ஒன்றரை மணித்தியாலப் பயண முடிவில் டனிடனை அடையலாம்.
அதாவது ரிமாறுவில் இருந்து டனிடன் செல்ல இரண்டரை மணித்தியாலம் தேவை. கிறைஸ் சேர்ச் ரிமாறுவில் இருந்து 2 மணித்தியாலத்தூரத்தில் இருக்கிறது. அதாவது டனிடனில் இருந்து கிறைஸ் சேர்ச் செல்ல 4 அரை மணித்தியாலம் பயணிக்க வேண்டும். இரவு நேரங்களில் தென் நியூசிலாந்தின் சில இடங்களில் பயணிப்பது கடினம். மலைகள், ஏரிகளினுடாக வளைந்து செல்லும் பாதைகளில் பயணிக்க வேண்டும். இதனால் 4ம் நாளின் இரவில் டனிடனில் தங்குவதினால், 4ம் நாள் மாலை 2:30 மணிக்கு புகையிரதப் பயணத்தினை மேற்கொள்ளலாம் என முடிவெடுத்தேன். டனிடனிலும், அருகில் இருக்கும் ஒட்டாகோ தீவகற்பத்திலும்(Otago Peninsula) சுற்றுலா செல்வதற்கு பல இடங்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும் பார்க்க 2,3 நாட்கள் தேவை. குறிப்பாக நியூசிலாந்தில் இருக்கும் ஒரே ஒரு கோட்டையான 'Larnach Castle'யும், 'Natures Wonders' என்ற சுற்றுலாவையும் செல்லவிரும்பினேன். சுற்றுலாத்தகவல் நிலையங்களில் பெற்ற புத்தகங்கள், இணையத்தளங்களின் மூலம் இவ்விடங்களைப் பற்றி ஒரளவு அறிந்து வைத்திருந்தேன். என்னுடன் பயணித்த ஒருவருக்கு டனிடனில் இருக்கும் சொக்கலட் தொழிற்சாலைக்கு செல்ல விரும்பி இருந்தார். இதனால் 4ம் நாள் காலையில் ரிமாறுவில் இருந்து காலை 8:30 மணிக்கே டனிடனை நோக்கி வெளிக்கிட்டோம். ரிமாறுவில் இருந்து டனிடன் செல்லும் வழியில் சுற்றுலாப்பயணிகள் விரும்பிச் செல்லும் புகழ்பெற்ற 'Moeraki Boulders' இருக்கின்றது. 5ம் நாள் நேரம் கிடைத்தால் டனிடனில் இருந்து திரும்பிவரும் போது இதனைப் பார்க்கலாம் என முடிவெடுத்தோம். டனிடனுக்கு உடனடியாக செல்ல நினைத்ததினால் அருகில் இருந்த எரிபொருள் நிலையத்தில் விசுக்கோத்து, சிப்ஸ் போன்றவற்றை வாங்கி உண்டபின்பு, இயற்கைக் காட்சிகளை இரசித்துக் கொண்டு டனிடனை நோக்கிப் பயணித்தோம்.
நியூசிலாந்தில் மனிதர்களை விட அதிகளவு செம்மறி ஆடுகள் இருக்கின்றன. செம்மறி ஆடுகளை விட அதிகளவு மாடுகள் இருக்கின்றன. பால்மா அதிகளவு உற்பத்தி செய்யும் நாடுகளில் நியூசிலாந்தும் ஒன்று.
ஒமாறுவிற்கும் டனிடனுக்கும் இடையில் பால்மெஸ்டன்(Palmerston) என்ற இடம் இருக்கிறது. பால்மெஸ்டனில் இருந்து டனிடனுக்கு செல்லும் பாதையின் இருபக்கமும் மஞ்சள் நிறப்பூக்களை அதிகமாகக் காணலாம். இதனால் இவ்விடம் அழகாக இருக்கும்.
கீழே உள்ள படத்தில் தூரத்தில் தெரியும் நகரம் தான் டனிடன். கிட்டத்தட்ட இரண்டரை மணித்தியாலப்பயண முடிவில் டனிடனை அடைந்தோம்.

No comments: