எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.Tuesday, January 10, 2012

நியூசிலாந்து 43 -பிக்டன்(Picton)

வெலிங்டனில் இருந்து பிக்டனுக்கு செல்ல 3 மணித்தியாலம் கடல் பயணம் செய்யவேண்டும். பயணத்தின் இறுதி ஒரு மணித்தியாலம் புகழ்பெற்ற Marlborough Soundsக்கு ஊடாக பயணிக்க வேண்டும். நிலப்பரப்புக்கள் சூழவுள்ள மிகவும் குறுகலான இடம் தான் Marlborough Sounds.
வெலிங்டனில் காலை 10.25க்கு புறப்பட்ட கப்பல் பிக்டனை மதியம் 1.35 க்கு வந்தடைந்தது.
அன்று இரவினை Motueka(மொற்று எகா) என்ற இடத்தில் தங்குவதற்கு முன்பதிவு செய்திருந்தேன். பிக்டனில் இருந்து கிட்டத்தட்ட இரண்டரை மணித்தியாலம் பயணித்தால் மொற்று எகாவினை அடையலாம். இரவு நேரங்களில் குளிர் காலங்களில் நியூசிலாந்தில் சில இடங்களில் பயணிப்பது பாதுகாப்பற்றது என்பதினால் 6, 7 மணிக்கு முன்பாக Motuekaக்கு செல்ல விரும்பினேன். பிக்டனில் வாடகை வாகனத்தினை வாங்கும் போது நேரம் கிட்டத்தட்ட மாலை 2 மணியாகிவிட்டது. இன்னும் மதிய உணவு உண்ணவில்லை. 4 மணிக்கு பிக்டனை விட்டு வெளிக்கிட்டால்தான் 6.30 மணியளவில் Motuekaவை அடையலாம். இடையில் இருக்கும் இரு மணித்தியாலங்களில் ஒரு மணித்தியாலத்தினை மால்பரோ சவுண்டில்(Marlborough Sound) உள்ள மிகவும் அழகான பகுதிக்கு படகில் செல்ல விரும்பினேன். வெலிங்டனில் இருந்து பிக்டனுக்கு வரும் போது மல்பரோ சவுண்டின் ஒரு பகுதியூனூடாகப் பயணித்தாலும், மால்பரோ சவுண்டின் மிகவும் அழகான பகுதிக்கு செல்ல படகில் தான் பயணிக்க வேண்டும். படகில் பயணிக்க அருகில் இருந்த சுற்றுலா தகவல் நிலையத்துக்கு சென்றேன். ஆனால் அச்சமயத்தில் பயணிக்க படகுகளில் இடம் இருக்கவில்லை. மறு நாள் நான் Abel Tasman National Park( அபில் தஸ்மான் தேசிய பூங்கா)வில் படகுப் பயணம் செய்ய விரும்பினேன். படகில் 3 மணித்தியாலம் பயணிக்க வேண்டும். பல சுற்றுலாப் பயணிகள் படகில் செல்ல விரும்புவதினால் சிலவேளை படகில் இடம் கிடைக்காமல் போகலாம். இதனால் பிக்டனில் இருக்கும் சுற்றுலா தகவல் மையத்தின் மூலம் மறு நாள் அபில் தஸ்மான் தேசிய பூங்காவில் படகில் பயணிக்க முன்பதிவு செய்தேன். ஆனால் முன்பதிவு செய்யும் போது கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் சுற்றுலாத்தகவல் நிலையத்தில் காத்திருக்க வேண்டி இருந்தது. முன்பதிவு செய்ததும் உடனே அருகில் இருந்த ஆங்கில உணவகத்தில் potato chips வாங்கி உண்டபின்பு மூன்றரை மணியளவில் மொட்டுவெகாவை நோக்கிப் பயணித்தேன். பிக்டனில் இருந்து மொட்டுவேகாவுக்கு செல்ல நெல்சன்(Nelson) என்ற இடத்தினூடாக செல்ல வேண்டும். நெல்சனுக்கு செல்ல ஒரு மணித்தியாலமும் நாற்பத்தைந்து நிமிடங்களும் தேவை.
பிக்டனில் நெல்சனுக்கும் இடையில் இருக்கும் இடம் கவ்லொக்(Havelock). பிரதான வீதி(State Highway 6) பிக்டனில் ஆரம்பித்து பெலிங்கெம்(Blenheim)ஊடாக கவ்லொக் செல்கிறது. ஆனால் Queen Charlotte Drive என்ற புகழ் பெற்ற பாதையில் பயணித்தால் பெலிங்கெம் செல்லாமல் குறைந்த நேரத்தில்( 45 நிமிடங்களில்) கவ்லொக் செல்லலாம். ஆனால் இப்பாதை மிகவும் வலைந்து செல்லும் ஒடுக்கமானதாக இருக்கின்றது. அத்துடன் அழகான மால்பரோ சவுண்ட் கடற்கரையினுடாக செல்கின்றது.
'Queen Charlotte Drive' பாதை உயரமான இடத்தினூடாக ஆரம்பித்தது. பயணம் ஆரம்பித்து சில நிமிடங்களில் வாகனத்தினை நிறுத்தி பிக்டன் நகரின் இயற்கை அழகினைப் படம் பிடித்தேன்.
அழகிய இயற்கைக்காட்சிகளைப் படம் பிடித்தபின்பு பயணத்தினை தொடர்ந்தோம்.

No comments: