எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.Sunday, November 14, 2010

நியூசிலாந்து 32 -டுவைசல்(Twizel) நகரத்தில் எனக்குக் கிடைத்த ஏமாற்றம்

டுவைசல்(Twizel) என்ற இடம் குயின்ஸ்டவுனில் இருந்து குக் மலைக்கு(Mount Cook) செல்லும் பாதையின் இடதுபக்கத்தில் இருக்கிறது. நான் பார்த்த சல்மொன் மீன் கடை வலதுபக்கத்தில் இருக்கிறது. டுவைசலில் அன்றைய மதிய உணவினை உண்ணலாம் என்று உணவகங்களைத் தேடிப் பார்த்தால் பெரும்பாலனாவை ஆங்கில உணவகங்களாகவே இருந்தன. ஆகவே ஒரு உணவகத்தில் பாண் துண்டுகளுடன் சூடான சூப்பினை வாங்கி உண்டேன். உண்டு விட்டு வெளியே வரும் போது ஒரு மறைவில் சீனர்களின் உணவகத்தைக் கண்டேன். அன்று இரவு சீனர்களின் உணவகத்தில் உண்ணலாம் என்னும் போது இடியுடன் கூடிய பெரு மழை பெய்தது. அருகில் இருக்கும் சுற்றுலா தகவல் மையத்துக்கு சென்றேன். நான் பொதுவாக சுற்றுலா செல்லும் போது இணையத்தளங்களின் ஊடாக சுற்றுலா செல்லமுன்பு பல தகவல்களைப் பெறுவேன். நியூசிலாந்துக்கு பயணிக்கமுன்பே பல தகவல்களைப் பெற்றுவிட்டேன். நியூசிலாந்து கிரைஸ்சேர்ச் விமான நிலையத்தில் உள்ள சுற்றுலா தகவல் மையத்தில் தென் நியூசிலாந்தில் உள்ள முக்கிய இடங்களின் சுற்றுலா பற்றிய சிறு சிறு புத்தகங்களைப் பெற்றேன். மறுநாள் செல்ல வேண்டிய இடங்கள் பற்றி முதல் நாள் இரவு புத்தகங்களை வாசித்து சில தகவல்களைப் பெறுவதுண்டு. ஆனால் அன்று (ஆறாம்) நாள் பயணத்தில் பயணித்த குரொம்வெல்(Cromwell), ஒமராமா(Omarama), டுவைசல்(Twizel) ஆகிய இடங்களைப் பற்றி புத்தகங்களில் இணையத்தளங்களில் பெரிதாகச் சொல்லவில்லை. குக் மலை(Mount Cook) பற்றியே சொல்லியிருந்தார்கள். எதுக்கும் டுவைசலைப் பற்றி அறியலாமே என்று சுற்றுலா தகவல் மையத்துக்கு சென்றேன். அன்று காலநிலை சரியில்லை, மழை அதிகம் பெய்யும் என்பதினாலும் குக் மலைக்கு செல்ல வேண்டாம் என்றும், குக் மலை பகுதியில் உள்ள சுற்றுலாக்கள்(உ+ம்... பனிச் சறுக்கி விளையாடுதல், உலங்கு வானூர்தி, வானூர்திகளில் பயணித்தல் ) அன்று நடைபெறாது என்றும், டூவைசலில் பார்ப்பதற்கு பெரிதாக இல்லை என்றும் பார்க்க விரும்பினால் சல்மொன் மீன் பண்ணைக்கு சென்று பார்க்கலாம் என்று சுற்றுலா தகவல் மையத்தில் இருந்தவர் சொன்னார். ஏற்கனவே சல்மொன் மீன் பண்ணைக்கு சென்றதினால் வேறு என்ன பார்க்கலாம் என்று கேட்க, 'The Lord of the Rings' என்ற ஆங்கிலத்திரைப்படம் எடுக்கப் பட்ட இடத்துக்கு சென்று பார்க்கலாம் என்று சொன்னார்.

மழை விட்டதும் 'The Lord of the Rings' திரைப்படம் எடுக்கப்பட்ட இடத்தை நோக்கிப் பயணித்தேன். போகும் வழியில் பார்த்த ஏரியினைக் கீழே உள்ள படங்களில் காணலாம்.


The 'Lord of the Rings' படம் எடுக்கும் போது அங்கு கட்டப்பட்ட கூடாரங்கள் எல்லாம் நான் சென்றபொழுது அகற்றப்பட்டதினால் அங்கு பார்ப்பதற்கு ஒன்றும் இருக்கவில்லை. வெளியான நிலப்பரப்பினையே பார்த்தேன்.

மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. இதனால் மீண்டும் சுற்றுலா தகவல் மையத்துக்கு செல்ல ' The Lord of the Rings ' திரைப்படத்தில் நடித்த பாத்திரங்களின் உடைகளைஅணிந்து புகைப்படம் எடுக்க விரும்பினால் அதற்கு ஒழுங்கு செய்து தரப்படும் என்று சுற்றுலாத் தகவல் மையத்தில் வேலை பார்ப்பவர் சொன்னார். ஆனால் அதற்கு ஆறுபது நியூசிலாந்து வெள்ளிகள் பணம் கட்டணம் செலுத்த வேண்டும் என்றார். ஆறுபது வெள்ளிகளை ஏன் தண்டமாகக் கொடுக்க வேண்டும் என்பதினால் அன்று இரவு தங்கவேண்டிய இடத்துக்கு சென்றேன். சுற்றுலா தகவல் மையத்துக்கு மிக அருகில் தங்கவேண்டிய விடுதி(Mountain Chalet Motels) இருந்தது.


நேரம் கிட்டத்தட்ட மதியம் ஒரு மணி இருக்கும். நியூசிலாந்தில் இரண்டு மணிக்குப் பிறகு தான் பெரும்பாலான விடுதிகளில் தங்குவதற்கு அனுமதி கிடைக்கும். மழை பெய்வதினாலும், விடுதி ஏற்கனவே சுத்தம் செய்யப்பட்டதினாலும் விடுதி உரிமையாளர் ஒரு மணிக்கே விடுதியில் தங்க அனுமதியளித்தார். தொடர்ந்து மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்வதினால் ஒன்றும் பார்க்க முடியவில்லையே என்பதினால் விடுதியில் சென்று ஏமாற்றத்துடன் தூங்கினேன். மாலை நான்கு,ஐந்து மணியளவில் மழை விட, எதுக்கும் குக் மலைக்கு செல்லக்கூடிய தூரம் வரை செல்லலாம் என நினைத்து குக் மலையை நோக்கிப் பயணித்தேன். டுவைசலில் இருந்து குக் மலைக்கு செல்ல நாற்பத்தைந்து நிமிடங்கள் தேவை. ஆகவே போய் வர தொன்னூறு நிமிடங்கள் தேவை.

போகும் வழியில் எடுக்கப் பட்ட புகைப்படங்கள்.இருளத்தொடங்க இடைவெளியில் திரும்பி மீண்டும் டுவைசலை அடைந்தேன். மறு நாள் காலை குக் மலை வரை போய்ப் பார்த்துவிட்டு கிறைஸ் சேர்ச்சிற்கு செல்லலாம் என நினைத்தேன். விடுதிக்கு வந்தபின்பு மதியம் பார்த்த சீன உணவகத்தில் உணவினை வாங்கி, விடுதியில் உணவினை உண்டேன். அவ்வுணவு உரூசியற்றதாக இருந்தது. அன்று நான் விரும்பியது போல எல்லாம் நடக்கவில்லை.

நியூசிலாந்துக்குப் பயணிக்கும் போது குக் மலைப் பகுதியில் தான் உலங்குவானூர்திப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் இரண்டாம் நாள் பயணத்தின் போது நான் தங்கியிருந்த விடுதி உரிமையாளரின் ஆலோசனைப் படி வோக்ஸ் கிளேசியரில் உலங்கு வானூர்தியில் பயணத்தேன். கால நிலை சரியில்லை என்பதினால் டூவைசலில் நான் நின்றபோது உலங்குவானூர்திகள் அன்று குக் மலைப்பகுதிகளில் சுற்றுலாக்களில் ஈடுபடவில்லை.

4 comments:

ஜோதிஜி said...

தொடர்ந்து எழுதுங்க.

துளசி கோபால் said...

இப்படித்தான் சில சமயம் அடைமழை வந்து நம்ம பயணத் திட்டங்களை எல்லாம் கெடுத்து வச்சுரும்.

கிறைஸ்ட்சர்ச் நகர் ஒரு நாளில் நான்கு விதமான காலநிலையையும் கொண்டு வந்துரும். திடீர்ன்னு மழை, ஸ்நோ, ஹெய்ல் ஸ்டோன்ஸ், பலத்த காற்று, வெய்யில் இப்படி வெரி அன்ப்ரடிக்டபிள்:(

எப்பவும் ஜாக்கெட், ஸ்வெட்டரோடத்தான் பயணம் செய்யணும்.

Aravinthan said...

ஜோதிஜி said...

தொடர்ந்து எழுதுங்க.
--------------------
உங்களைப் போன்றோர்கள் வாசிப்பதினால் தொடர்ந்து எழுதுவேன்.

Aravinthan said...

Blogger துளசி கோபால் said...

இப்படித்தான் சில சமயம் அடைமழை வந்து நம்ம பயணத் திட்டங்களை எல்லாம் கெடுத்து வச்சுரும்.

கிறைஸ்ட்சர்ச் நகர் ஒரு நாளில் நான்கு விதமான காலநிலையையும் கொண்டு வந்துரும். திடீர்ன்னு மழை, ஸ்நோ, ஹெய்ல் ஸ்டோன்ஸ், பலத்த காற்று, வெய்யில் இப்படி வெரி அன்ப்ரடிக்டபிள்:(

எப்பவும் ஜாக்கெட், ஸ்வெட்டரோடத்தான் பயணம் செய்யணும்.
--------------------
நியூசிலாந்தில் பல முறை எனக்கு இப்படியான அனுபவங்கள் இருக்கின்றன.