எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.



Thursday, November 11, 2010

நியூசிலாந்து 31 -டுவைசல்(Twizel) சல்மொன்(Salmon) மீன் பண்ணை

குரொம்வெல்லில் இருந்து டுவைசிலை நோக்கிய பயணத்தில் லின்டிஸ் பாசின் (Lindis Pass) இயற்கை அழகை இரசித்த பின்பு ஒமரமாவை(Omarama) அடைந்தேன்.ஒமரமாவில் பார்ப்பதற்கு பெரிதாக ஒன்றும் இருக்கவில்லை. எனவே அங்கு நிற்காமல் டுவைசிலை நோக்கிப் பயணித்தேன். ஒமரமாவில் இருந்து முப்பது நிமிடங்கள் பயணித்தால் டுவைசலை(Twizel) அடையலாம்.




நியூசிலாந்தில் ஒக்லண்டில்(வட நியூசிலாந்தில் இருக்கிறது) தான் அதிகளவு மக்கள் வசிக்கிறார்கள். நியூசிலாந்தின் சனத்தொகையின் மூன்றில் ஒரு பங்கிற்கு மேற்பட்டவர்கள் ஒக்லாண்டில் வசிக்கிறார்கள். வட நியூசிலாந்தில் தான் அதிகமக்கள் வசிக்கிறார்கள். தென் நியூசிலாந்தில் வசிப்பவர்களில் பெரும்பாலோர் கிறைஸ்ட் சேர்ச்சில் தான் வசிக்கிறார்கள். டனிடனிலும் நல்ல சனத்தொகை இருக்கிறது . தென் நியூசிலாந்தில் மற்றைய இடங்களில் சனத்தொகை மிகமிகக் குறைவு. பெரும்பாலான இடங்களில் மலைகளையும், ஏரிகளையும், வெளிகளையும் தான் காணலாம்.இங்கே வீடுகள், கட்டடங்கள், தோட்டங்களைக் காணமுடியாது. வீதிகளிலும் வாகனங்களைக் காணமுடியாது. பெரும்பாலான இடங்களுக்கு செல்ல ஒரே ஒரு வீதி மட்டுமே இருக்கும். அதுதான் பிரதான நெடுஞ்சாலை.



டுவைசலை மதியம் 12 மணியளவில் அடைந்தேன். இப்பகுதியில் உள்ள ஏரிகளின் நிறம் மற்றைய இடங்களில் உள்ள ஏரியின் நிறங்களை விட வித்தியாசமான நில நிறமாகக் காணப்பட்டது.

நெடுஞ்சாலையின் அருகில் சல்மொன்(Salmon) வகையிலான மீன்கள் விற்பனை செய்யும் பண்ணையினைக் கண்டேன். இவ்வகையான மீன்களை அட்லாண்டிக், பசுபிக் கடல்களில் காணலாம். இம்மீன்கள் ஏரிகள், நதிகளில் உற்பத்தியாகின்றன. அதாவது உப்புச்செறிவற்ற குடிக்க கூடிய நீர்நிலைகளில்(Fresh water) உற்பத்தியாகின்றன. பிறகு இம்மீன்கள் சமுத்திரத்தினை நோக்கி நகரும். மீன்குட்டிகளை உற்பத்தி செய்ய மீண்டும் உப்புச் செறிவற்ற இடங்களை நோக்கி இம்மீன்கள் நகருகின்றன. இப்பண்ணையில் இருக்கிற ஏரியில் இம்மீன்களை வளர்க்கிறார்கள். இப்பண்ணைக்கு வரும் மக்கள் ஏரியில் உள்ள விருப்பமான மீன்களை தெரிவு செய்து வாங்கிக் கொண்டு செல்கிறார்கள். சில சுற்றுலாப் பயணிகள் இம்மீன்களைப் பார்ப்பதற்காக இங்கே செல்கிறார்கள். பண்ணை உரிமையாளர்கள் மீன்களுக்குத் தேவையான உணவினை சுற்றுலாப் பயணிகளுக்கு கொடுக்க, சுற்றுலாப் பயணிகள் ஏரிகளில் உணவினைத் தூவுவார்கள். மீன்களும் மேலே எழுந்து உணவினை நோக்கிப் பாய்வதைப் பார்த்து இரசிப்பார்கள்.





நானும் பண்ணை உரிமையாளரிடம் இருந்து மீன்களுக்குத் தேவையான உணவினை பெற்று ஏரியில் தூவ மீன்கள் உணவினை நோக்கிப் பாய்ந்தன.

No comments: