எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.



Monday, December 17, 2012

நியூசிலாந்து 63- கைக்கோரா(kaikoura)

கிறைஸ்சேர்சில் இருந்து கைக்கோராவை செல்லும் பிரதான வீதி, கைக்கோராவுக்கு அண்மிக்கும் போது, கடற்கரையினூடாகச் சென்றது. கடலின் அழகினைப் பார்த்துக் கொண்டு பயணிப்பது ஒரு மகிழ்ச்சியான விடயம்.
வளைந்து நெளிந்து செல்லும் பாதையினூடாக கடலின் அழகினைப் பார்த்துக் கொண்டு பயணிப்பது சிலவேளைகளில் விபத்துக்களை ஏற்படுத்தவாய்ப்பு இருக்கிறது. இதனால் அவதானமாக வாகனத்தினை ஒட்டவேண்டும்.
மதியம் 11.30 மணியளவில் கைக்கோராவினை அடைந்தோம். கைக்கோராவின் அழகினை கீழே உள்ள படங்களில் காணலாம்.
கைக்கோராவில் கப்பலில் சென்று திமிங்கிலத்தினைப் பார்க்கும் சுற்றுலா(Whale watching) பிரபல்யமானது. நான் சிட்னியில் இருந்து 3 மணித்தியாலம் தெற்கே பயணித்தால் வரும் யார்விஸ் வளைகுடாவில்(Jervis bay) திமிங்கிலத்தினைப் பார்க்கும் சுற்றுலாவுக்கு சென்றிருக்கிறேன். மிகவும் ஆழமான கொந்தளிப்பான கடலில் திமிங்கிலத்தினைப் பார்க்கலாம். 50க்கு மேற்பட்ட பயணிகள் சென்ற படகில் கொந்தளிப்பான கடல் காரணமாக நான் உட்பட பலர் படகில் வாந்தி எடுத்தார்கள். திமிங்கிலம் பார்க்கப் போய் பட்ட கஸ்டத்தினை நினைக்க இப்பொழுது சிரிப்பாக இருக்கிறது. அப்படகில் 4 வெள்ளைக்காரர்களைத் தவிர மற்றையவர்களில் ஈழம் ,இந்தியா ,சீனா நாட்டு பூர்விகக்குடிமக்கள் பயணித்திருந்தார்கள். அந்த வெள்ளைக்காரர்கள் படகில் ஏறமுன்பு இஞ்சிக் குழுசைகளினை தண்ணீருடன் விழுங்கியதினால் அவர்களுக்கு வாந்தி ஏற்படவில்லை. தஸ்மானியாவிற்கு(Tasmania) சுற்றுலா சென்றபோதும் திமிங்கிலம் பார்க்க படகில் சென்றிருந்தேன். படகோட்டி,பயணிகள் அனைவருக்கும் இஞ்சிக் குழுசைகளைத் தந்திருந்தார். ஏற்கனவே நான் திமிங்கிலம் பார்க்க சுற்றுலா சென்றிருந்ததினால் கைக்கோராவில் திமிங்கிலம் பார்க்க சுற்றுலா செய்யவிரும்பவில்லை.கடற்கரைப்பக்கமாக படகில் சென்று வரலாம் என்று நினைத்தேன். அன்று காலநிலை சரியில்லாத காரணத்தினால் கடலில் படகுச் சேவை நிறுத்தப்பட்டிருந்தது. திமிங்கிலம் பார்க்கும் சுற்றுலாவும் நடைபெறவில்லை. அருகில் இருக்கும் சுற்றுலாத்தகவல் நிலையத்தில் "கைக்கோராவில் என்ன பார்க்கலாம்" என்று கேட்டபோது "சற்றுத்தொலைவில் கடற்கரை அருகில் கடல் சிங்கமொன்று( Sea lion) நிற்கின்றது. சென்று பாருங்கள்" என்று சொன்னார்கள். கடல் சிங்கத்தினைப் பார்க்கப் புறப்பட்டோம்.

4 comments:

வடுவூர் குமார் said...

கேமிரா லென்ஸின் நடுவில் கைத்தடமோ/மெல்லிய பனியோ இருக்கு அதை துடைக்காமல் படங்கள் எடுத்ததால் எல்லா படங்களிலும் ஒரு இடத்தில் கலங்கலாக இருக்கு.

Aravinthan said...

இம்முறை நியூசிலாந்துக்குப் பயணித்த போது எனது புகைப்படக்கருவியின் வில்லை (Camera lens) எதோ ஒரு கீறல் ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான படங்களின் நடுவில் ஒரு புகார் போன்று ஒரு தோற்றம் இருப்பதனைக் காணலாம்.

நியூசிலாந்து 50 வது பகுதியில் சொல்லியிருந்தேன்.

துளசி கோபால் said...

ஒரு பெரிய ஸீ லயன் காலனியே அங்கு இருக்கு! சின்னக்குன்றின் மேல் ஏறிப்பார்த்தால் பிரமிப்புதான்.

அப்படியே ஊருக்குள் நுழையுமிடத்தில் ஒரு லைம் ஸ்டோன் குகை இருக்கு.
உள்ளெ போய் பார்க்கணுமுன்னா விசிட்டர்ஸ் இன்ஃபோவில் சொல்லி வழிகாட்டியுடன் போய்ப் பார்க்கலாம். கட்டணம் உண்டு.

Aravinthan said...

உங்களின் கருத்துக்கு நன்றிகள் துளசி கோபால்