எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.



Tuesday, February 07, 2012

நியூசிலாந்து 45 -உலகப் புகழ் பெற்ற பிளவுபட்ட அப்பிள் பாறை (Split Apple Rock)

பிக்டனில் இருந்து வெளிக்கிட்டு ரிவாக்காவினை அடையும் போது மாலை 6.30 ,7 மணியாகிவிட்டது. ஆனால் விடுதி இருக்கும் வீதியைத் தேடிக் களைத்துப் போனோம். வீதியில் செல்பவர்களைக் கேட்டுப் பார்த்து, அருகில் இருந்த எரிபொருள் நிலையத்தில் வேலை செய்பவரின் உதவியுடன் ஒருவாறு விடுதியினைக் கண்டுபிடித்தோம். நல்லகாலம் இருளவில்லை. இருண்டிருந்தால் இன்னும் தேடிக்கொண்டிருந்திருப்போம். பொதுவாக நியூசிலாந்தின் தெற்கு நிலப்பரப்பில் பிரதான முக்கிய நகரங்களைத் தவிர மற்றைய இடங்களுக்கு இரவில் பயணிப்பது மிகவும் கடினமானது. நாங்கள் இருந்த விடுதி(Chalets @ Terraced Gardens) சுற்றவர தோட்டங்களுக்கு நடுவில் இருந்தது. செம்மறி ஆடுகள் விடுதியின் பின்னால் நின்றன. றிவாக்காவில் இரவில் பார்ப்பதற்கு ஒன்றுமில்லை. மறு நாள் காலை எழுந்ததும் அபில் தஸ்மான் தேசிய பூங்காவில் உள்ள கைத்தேரிதேரி(Kaiteriteri) என்ற இடத்துக்கு சென்றோம். விடுதியில் இருந்து 7, 8 நிமிடங்கள் பயணித்தால் கைத்தேரிதேரியினை அடையலாம். இங்கு தான் நான் முதல் நாள் முன்பதிவு செய்த அபில் தஸமான் தேசிய பூங்காவில் படகுப் பயணம் ஆரம்பிக்கும் இடமாகும். அங்குள்ள தகவல் நிலையத்தில் முன்பதிவு செய்த விபரத்தினைக் காட்டினேன். படகு வெளிக்கிட அரை மணித்தியாலம் இருப்பதினால் அருகில் இருந்த கடை ஒன்றில் சில விசுக்கோத்துக்கள், சிப்ஸ் போன்ற உணவுகளை வாங்கி உண்டேன்.
அபில் தஸமான் தேசிய பூங்காவில் பல சுற்றுலாப் பயணிகள் 2, 3 நாட்கள் தங்கித் தங்கி நடந்து செல்வார்கள். சிலர் படகுகளில் சென்று சில இடங்களில் நடந்து செல்வார்கள். நாங்கள் சென்ற பயணம் கிட்டத்தட்ட 3 மணித்தியாலப் படகுப் பயணம்.Torrent Bay, Bark Bay, Awaroa and Totaranui போன்ற இடங்களினூடகப் படகு சென்று வரும். நாங்கள் பயணித்த படகின் பெயர் Abel Tasman Sea Shuttles. காலை 9.15க்குப் படகு கைத்தேரிதேரியில் இருந்து வெளிக்கிட்டு மதியம் 12 மணிக்கு மீண்டும் கைத்தேரிதேரியினை அடைகின்றது.
படகில் இருந்து இயற்கைக்காட்சிகளை இரசிக்கத் தொடங்கினேன்.
சில நிமிடப்பயணத்தின் பெரிய பாறை ஒன்றினைக் கண்டோம். பார்ப்பதற்கு பிளவுபட்ட அப்பிள் போலக் காட்சி அளிப்பதினால் Split Apple Rock என்று அழைப்பார்கள். இப்பாறை உலகப் புகழ் பெற்றது. இதனைப் பார்ப்பதற்கு பலர் இங்கு வருவார்கள்.
தொடர்ந்து அழகிய இயற்கைக்காட்சிகளைப் பார்த்தபடி பயணித்தோம்.
படகு கடற்கரை ஒன்றினை நோக்கி சென்று கொண்டிருந்தது.

2 comments:

துளசி கோபால் said...

படங்கள் அனைத்தும் அருமை. அந்தக் கைத்தேரிதேரி கடற்கரையில் இருக்கும் தங்கநிற மணல் ரொம்ப அழகு இல்லே?

சுத்தமான இடம் என்பதால் பேசாமக் கொஞ்ச நேரம் படுத்துக்கிடந்தேன் ஒரு பயணத்தில்!

Aravinthan said...

தொடர்ந்து வாசித்து உங்களின் கருத்துக்களை ,அனுபவங்களை பகிர்ந்தமைக்கு நன்றிகள் துளசி கோபால்