எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.Tuesday, May 25, 2010

நியூசிலாந்து 2 -ஆர்தர்பாசை(Arthur's Pass) நோக்கிப் பயணம்


நான் தங்கி இருந்த விடுதி கிரைஸ் சேர்ச்(Christchurch) விமான நிலையத்துக்கு அருகாமையில் இருந்தது. விடுதிக்கு கிழக்குப் பகுதியில் தான் கிரைஸ் சேர்ச் நகரின் 95 வீதமான நிலப்பரப்பு அமைந்துள்ளது. கிரைஸ் சேர்ச்சில் தான் தென் நியூசிலாந்தில் அதிக மக்கள் வசிக்கிறார்கள். இங்குதான் அதிக நிறுவனங்கள், உணவகங்கள் எல்லாம் இருக்கின்றன. காலைக் கோப்பியினை மட்டும் அருந்தி விட்டு, போகும் வழியில் உணவகம் எதாவதில் சாப்பிடலாம் என்று நினைத்து அதிகாலை 8 மணிக்கே ஆர்தர்பாசை நோக்கி பிரயாணித்தேன்.
ஆர்தர்பாஸ் எனது விடுதியில் இருந்து மேற்குப்பகுதியில் அமைந்திருக்கிறது. கிரைஸ் சேர்ச் நகரத்துக்குள் செல்லாமல் ஆர்தர்பாசை(Arthur's Pass) நோக்கிப் பயணித்தேன்.கிரைஸ் சேர்ச்சில் இருந்து கிட்டத்தட்ட ஒன்று அரை மணித்தியாலம் பிரயாணம் சென்றால் தான் ஆர்தர்பாஸ் வரும்.

Christchurchல் இருந்து Arthur's Pass வழியாக Greymouthற்கு புகையிரதப் பயணத்தினை பல சுற்றுலாப் பயணிகள் விரும்பிச் செல்வார்கள்.இயற்கை அழகான மலைகளினை இப்பயணத்தின் போது பார்க்க முடியும். எனினும் நான் மகிழுந்தில் பிரயாணம் சென்று இயற்கை அழகினைப் பார்க்க விரும்பினேன்.

போகும் வழியில் வாகனங்களைக் காண்பது மிகவும் அரிதாக இருந்தது. உணவகங்களையும் காணவில்லை. தேநீர்ச் சாலைகள் இருந்தன. ஆனால் அவையும் மூடப்பட்டிருந்தன. அன்று ஞாயிற்றுக்கிழமை.பனிக்கட்டிகளினால் சோடிக்கப்பட்ட மலைத்தொடரின் அழகை இரசித்துக் கொண்டு செப்டம்பர் மாதத்தில் நான் பயணித்துக் கொண்டிருந்தேன். குளிரும் அதிகமாக இருந்தது.மழையும் வரப்போவது போலத் தோன்றியது.
பயணத்தின் போது மலைகளின் மேல் இருக்கும் வீதியினுடாகச் செல்ல வேண்டும். கால நிலை சரியில்லை என்றால் இவ்வீதிகளில் செல்வது ஆபத்தானது. இதனால் அந்நேரங்களில் இவ்வீதியில் பிரயாணிக்க அனுமதி தரமாட்டார்கள். மலையினூடாக கிட்டத்தட்ட 1 - 2 மணித்தியாலங்கள் பிரயாணம் செய்ய வேண்டும். இச்சமயத்தில் எரிபொருள் நிலையங்கள் ஒன்றையும் காண முடியாது. விமான நிலையத்தில் பெற்ற வாடகை மகிழுந்தில் தேவையான அளவு எரிபொருள் இருந்ததினால், எரிபொருள் பற்றிப் பயப்படத்தேவை இருக்கவில்லை. பசிக்கத்தொடங்கியதினால் மலைத் தொடருக்கு முன்பு இருந்த கடைசி எரிபொருள் நிலையமொன்றில் விசுக்கோத்து, சிப்ஸ் வாங்கி உண்டபின்பு தொடர்ந்து பயணித்தேன்.

No comments: