எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.Thursday, December 04, 2008

வனுவாட்டு - பகுதி23 -கடலினுள் இருந்த அமெரிக்கா விமானத்தின் பாகங்கள்

படகோட்டி(சுற்றுலா வழிகாட்டி) மீன்கள் அதிகமாக உள்ள இடத்தில் படகை நிற்ப்பாட்டினார். நீச்சல் தெரிந்தவர்கள் நீரினுள் சென்று கடல்வளத்தினைப்பார்க்க, சுழியோடிகள் அணியும் கண்ணாடிகளை எங்களுக்கு படகோட்டி தந்தார். எனினும் கடல் அலைகள் அற்று தெளிவாக உள்ளதினால் படகில் இருந்தே கடலினுள் மீன்களினைப் பார்க்கக்கூடியதாக இருந்தது. படகோட்டி பாண்(வெதுப்பி)துண்டுகளை தர நாங்கள், அவற்றைக் கடலில் வீசினோம். பாண் துண்டுகளை நோக்கி மீன்கள் வந்தன.

வழிகாட்டி படகில் இருந்தவாறே தனது கைகளினால் ஒரு மீனைப் பிடித்துக்காட்டி, பிறகு அம்மீனைக் கடலில் இட்டார்.

படகு லெலெபாதீவின் இன்னுமொரு கரையினை நோக்கிச் சென்றது.

கடற்கரையில் கோழிகள்,குச்சுகளினைக் காணக்கூடியதாக இருந்தது.அக்கரையில் உள்ள ஒரு வீட்டினை அடைந்ததும், அங்கே எங்களுக்கு விசுக்கோத்துடன் தேனீரும் தந்தார்கள். அவ்வீட்டில் உள்ளோர் ஒலைகளினால் வேயப்பட்ட பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தார்கள். குறைந்தது ஒரு பொருளாவது வாங்கி அவர்களுக்கு உதவுமாறு சுற்றுலா வழிகாட்டி எங்களுக்குச் சொன்னார். பொருட்களும் மிகவும் மலிவு விலையில் இருந்தன.

அக்கிராமத்தினைவிட்டு வெளியே வந்து, படகில் இத்தீவினைச் சுற்றி வரும் போது வழிகாட்டி, எங்களுக்கு நீரினுள் பார்க்கக்கூடிய கண்ணாடியை அணியத் தந்து நீருக்குள் பார்க்கச் சொன்னார். பார்க்கும்போது அங்கே நீருக்கடியில் உடைந்த நிலையில் ஒரு விமானத்தின் பாகங்கள் தெரிந்தன. 2ம் உலகப் போரின் போது அங்கே விழுந்த அமெரிக்கா விமானத்தின் பாகங்கள் தான் அவை என்று வழிகாட்டி எங்களுக்குச் சொன்னார். அந்த விழுந்து உடைந்த விமானத்தின் பாகங்களினை கடலில் இருந்து எடுக்கும் செலவு அந்தக்காலத்தில் அதிகம் என்பதினால், உடைந்தபாகங்களினை வெளியே எடுக்க அமெரிக்கர்கள் அக்காலத்தில் முயற்சி செய்து பார்க்கவில்லை.

வழிகாட்டி எங்களை ஈவெட் தீவின் அருகில் படகை நிற்பாட்ட, எங்களை ஏற்றி வந்த வாகனம் எங்களுக்காக அங்கே நின்றது. மீன்பிடிக்கப் போனவர்களும் மீன் கிடைக்காத ஏமாற்றத்துடன் அவ்வாகனத்தில் இருந்தார்கள்.

ஈவேட் தீவுக்கும் லெலெபா தீவுக்கும் இடையில் பயணிகள் படகுச்சேவையினைக் கீழே உள்ள படத்தில் காண்கிறீர்கள்.

காலை 9 மணிக்கு லெலெபாத்தீவுக்கு சுற்றுலா சென்று மாலை 6மணிக்கு நான் தங்கியிருந்த விடுதிக்கு வந்தேன். நகரத்துக்கு சென்று அன்றைய இரவு உணவினை சீனர்களின் உணவகமொன்றில் உண்டேன். ஒருவருக்கு தரும் அவ்வுணவு இருவர் சாப்பிடக்கூடியதாகவும், மிகவும் உரூசியாகவும் இருந்தது.

No comments: