எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.Tuesday, December 02, 2008

வனுவாட்டு - பகுதி22 -குகைக்குள் பயணம்

லெலெபா தீவில் எங்களைக் கூட்டி வந்த சுற்றுலா வழிகாட்டி மதிய உணவுக்காகச் சமைக்கத் தொடங்க நான் கடலில் குளிக்கச்சென்றேன்.குளிக்கும் போது கடலின் அடியில் இருப்பதினைப்பார்க்க சுழியோடுபவர் அணியும் கண்ணாடியினை தந்தார்கள். அதனூடாக கடலின் அடியினைப் பார்த்தேன்.

அப்பொழுது கடலில் ஒரே ஆரவாரம் கேட்டது. ஒருபடகில் சிலர் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். தொலைக்காட்சியில் English survivors, French survivors னைப் பார்த்திருப்போம். படகில் திரிந்தவர்கள் French Survivors. அவர்களினை இத்தீவில் கொண்டு வந்து விடுவார்கள். அவர்கள் கொஞ்சக்காலம் வெளித் தொடர்பற்று இத்தீவில் சீவிக்க வேண்டும்.கனகாலம் இருப்பவருக்கு அதிக பணம் கிடைக்கும்.

சமைத்து முடிந்ததும் சுற்றுலா வழிகாட்டி, எங்களுக்கு அசைவ,சைவ உணவுகளுடன் சோற்றினையும் பரிமாறினார். அதன் பின்பு பழங்களும் தந்தார். மீன்பிடிக்க படகில் சென்றவர்களைப் பற்றி சென்ற பதிவில் உங்களுக்கு சொல்லியிருந்தேன். அவர்களுக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை. எனவே ஏமாற்றத்துடன் கரைக்கு வந்து உணவு உண்டதும் மீண்டும் மீன் பிடிக்கச் சென்றார்கள். அவர்கள் இத்தீவில் சுற்றுலா பார்க்க எங்களுடன் கலந்து கொள்ளவில்லை. மீன் பிடிக்கவே வந்தார்கள்.
நாங்கள் கிட்டத்தட்ட 3 மணித்தியாலம் அக்கரையில் இருந்து குளித்து இளைப்பாறியபின்பு( உணவு சமைக்க, அவ்விடத்தைச் சுத்தம் செய்ய சுற்றுலா வழிகாட்டிக்கு 3 மணித்தியாலம் எடுத்தது)படகின் மூலம் அத்தீவின் இன்னொரு கறைக்கு வந்தோம்.

அங்கே 5 நிமிடங்கள் மரங்களின் ஊடாக நடக்க குகை ஒன்றினை அடைந்தோம்.

குகைக்குள் செல்லச் செல்ல ஒரே இருட்டாக இருந்தது.

சுற்றுலா வழிகாட்டி கொண்டு வந்த மெழுகுதிரி வெளிச்சத்தின் உதவியுடன்,போகும் வழியில் நிலத்தில் இருந்த மெழுகுதிரிகளையும் வெளிச்சமாக்கி அவ் வெளிச்சத்தின் உதவியுடன் நடந்து சென்றோம்.

குகைக்குள் செல்லச் செல்ல உடலில் இருந்து வியர்வை பெருக்கெடுத்து ஓடியது. போகப்போக குகையின் உயரம் மிகவும் குறைவாகவும் பாதை ஒடுக்கமாகவும் இருந்தது.

இக்குகையில் சிலர் தங்கியிருந்த அடையாளங்கள் இருந்தன. சுற்றுலா வழிகாட்டி, இரவில் இக்குகையில் 'French Survivors' தங்கியிருந்தார்கள் என்று சொன்னார்.

படத்தில் தெரியும் கை அடையாளம் இத்தீவில் வாழ்ந்த மூதாதையர்களின் கை அடையாளம் என்று சுற்றுலா வழிகாட்டி எங்களுக்குச் சொன்னார்.

குகைக்குள் செல்லசெல்ல பாதையின் உயரம் குறையத் தொடங்கியது. இதனால் நாங்கள் தவழ்ந்து தான் செல்ல வேண்டிய நிலை எங்களுக்கு ஏற்பட்டது. அத்துடன் பாதையும் வளைந்து வளைந்து போய்க்கொண்டிருந்தது. சில நிமிடங்களில் பாதையின் முடிவில் சிறு துவாரத்தின் ஊடாக வெளிச்சம் தெரிந்தவுடன் மீண்டும் வந்த பாதை வழியாக, ஏற்றி வைத்த வெளிச்சத்தினை அணைத்துக் கொண்டு திரும்பி நடந்தோம். குகையினை விட்டு வந்ததும் அடர் மரங்களின் ஊடாக நடந்து வந்து மீண்டும் படகில் ஏறி, இத்தீவினைச் சுற்றி வரும் போது இன்னுமொரு குகையினையும் கண்டோம்.

அக்குகையின் உள்ளேயும் சென்று பார்க்கலாம். ஆனால் முதல் குகை போன்று இதனுள் நடப்பதற்கு ஏற்ற இலகுவான பாதை அங்கு இருக்கவில்லை.

2 comments:

Shan Nalliah / GANDHIYIST said...

Great....Greetings! from Norway!

Aravinthan said...

உங்கள் கருத்துக்கு நன்றிகள்