எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.



Monday, October 22, 2012

நியூசிலாந்து 58 -பொதுமக்கள் செல்வதற்கு தடைசெய்யப்பட்ட பென்குயின்கள் வாழும் கடற்கரை

ஒட்டாகோ தீவகற்பத்தில் இருக்கும்,நியூசிலாந்தின் ஒரே ஒரு கோட்டையான Larnach Castleல் காலை உணவாக சூடான 'Soup' அருந்திய பின்பு 'Natures Wonders'(இயற்கை அதிசங்கள்) என்ற சுற்றுலாவினை நோக்கிப் பயணித்தோம். இக்கோட்டையில்(Larnach Castle) வில்லியத்தினதும், அவரது முதல் மனைவியினான எலிசாவினதும், மூன்றாவது பிள்ளையான கேற்றினதும் ஆவிகள் உலாவுகின்றன என்றும் சிலர் சொல்லுவதுண்டு. ஒட்டாகோ தீவகற்பத்தில் வடகிழக்கு மூலையில் உள்ள 'Taiaroa Head' என்ற இடத்தில் இந்தச் சுற்றுலா ஆரம்பிக்கின்றது. கீழே உள்ள வரை படத்தினைப் பார்த்தால் அவ்விடத்துக்கு 10, 15 நிமிடங்களில் செல்லலாம் போல இருக்கிறது. ஆனால் உண்மையில் அவ்விடம் செல்ல கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் தேவை. வளைந்து நெளிந்து உயரமான இடங்களினூடாகப் பயணிக்கவேண்டும்.
போகும் வழியெல்லாம் அழகான இயற்கைக் காட்சிகளாக இருந்தன. நின்று இடங்களைப் பார்த்து இரசித்தால் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட சுற்றுலாவினைத் தவறவிடலாம் என்பதினால் தொடர்ந்து பயணித்தோம்.
ஒரு மணித்தியாலப் பயணமுடிவில் சுற்றுலா நடைபெறும் இடத்தினை அடைந்தோம். அங்கே பல செம்மறி ஆடுகள் இருந்தன. செம்மறி ஆடுகளின் ரோமங்களை கத்தரிக்கும் சுற்றுலாவினையும் அவர்கள் நடாத்துகிறார்கள். ( நான் அவுஸ்திரெலியா பிரிஸ்பனில் செம்மறி ஆடுகளின் ரோமங்களை கத்தரிப்பதினை சுற்றுலா ஒன்றில் பார்த்திருக்கிறேன்.) நாங்கள் முன்பதிவு செய்த சுற்றுலா -Wildlife Tour.
எட்டு சில்லுகள் உடைய வாகனத்தில் எங்களை ஏற்றினார்கள்.
சேறும் சகதியும், மேடும் பள்ளமான இடத்தினூடாக எங்களைக் கொண்டு சென்றார்கள். இப்பகுதிக்கு சுற்றுலா நடாத்துபவர்களின் உதவியில்லாமல் தனிப்பட்டோர் செல்ல முடியாது. அதற்கு நியூசிலாந்து அரசு தடைவிதித்திருக்கிறது.
சில நிமிடப்பயணமுடிவில், கடல் மட்டத்தில் இருந்து 189 மீட்டர் உயரமான இடமொன்றில் வாகனத்தினை நிறுத்தினார்கள்.
அவ்விடத்தில் இருந்து 360 பாகை சுற்றவர உள்ள இடங்களின் அழகினை இரசித்தோம். புகைப்படம் எடுத்தேன்.
மீண்டும் சில நிமிடம் வாகனத்தில் பயணித்தோம். பயணமுடிவில் மரத்தினால் செய்யப்பட்ட ஒரு சிறிய ஒரு அரை ஒன்றினை அடைந்தோம். அரையில் உள்ள சிறிய தூவாரங்களினூடாக வெளியில் பார்த்தோம்.
அவ்விடத்தில் கதைக்காமல் அமைதியாக இருக்கும்படி சொன்னார்கள்.அரையில் உள்ள யன்னல் வழியாக பார்வையிட்டபோது ஒரு கடற்கரை தெரிந்தது. பென்குயின் கடற்கரை(Penguin Beach) என்று அக்கடற்கரைக்கு பெயர்.
அக்கடற்கரைக்கு பொதுமக்கள் செல்வது நியூசிலாந்து அரசினால் தடைசெய்யப்பட்டிருந்தது. அப்பகுதியில் உலகில் மிகவும் அரிதான மஞ்சள் நிறக்கண் உடைய பென்குயின்கள் வாழ்கின்றன. மக்கள் அங்கு சென்றால் அப்பென்குயின்களின் இனம் அழிந்துவிடும் என்ற காரணத்தினால் அங்கு மக்கள் செல்வது தடை செய்யப்பட்டிருக்கிறது.உலகில் மிகவும் சிறிய நீல நிறப்பென்குயின்களும் இங்கே இருக்கின்றன. சராசரியாக 25 சென்றிமீட்டர் உயரமும், ஒரு கிலோ ஏடையும் உடையது.இக்கடற்கரைக்கு மக்கள் செல்வது தடைசெய்யப்பட்டதினால் மஞ்சள் கண் பென்குயின்களின் எண்ணிக்கையும், மிகவும் சிறிய நீல நிறப் பென்குயின்களின் எண்ணிக்கையும் சில வருடங்களில் இப்பகுதியில் 10 மடங்காக அதிகரித்து இருக்கிறது. தடைசெய்யப்பட்ட இக்கடற்கரைக்கு சில வருடங்களுக்கு முன்பு பிரித்தானியாவில் இருந்து நியூசிலாந்துக்கு சுற்றுலாவுக்கு வந்த இருவர் தவறுதலாக, வாடகைக்கு எடுத்த படகு ஒன்றில் வந்து விட்டார்கள். இப்பகுதிக்கு வந்தமையினால் பெரும் தண்டனைப் பணம் கட்டவேண்டிய நிலைமை இவர்களுக்கு ஏற்பட்டது.
தொலைவில் இருக்கும் மஞ்சள் நிறக்கண்ணை உடைய பென்குயின் ஒன்றினை பூதக்கண்ணாடியினூடாகப் பார்த்தோம். அவ்விடத்தினை நோக்கிப் புகைப்படம் ஒன்றினையும் எடுத்திருக்கிறேன். ஆனால் புகைப்படத்தில் மஞ்சள் கண்ணுடைய பென்குயின் தெரிகிறதா என்று தேடிப்பார்த்து அழுத்துப் போய்விட்டேன்.
சொந்த மண்ணில் சுதந்திரமாக வாழ்வதற்கே வழியில்லாமல் அழைந்து திரிகிறார்கள் ஈழத்தமிழர்கள். ஆனால் எதுவித பிரச்சனையில்லாமல் சொந்த மண்ணில் நிம்மதியாக வாழுகின்றன இந்தப் பென்குயின்கள்.

2 comments:

துளசி கோபால் said...

அதென்ன ஆட்டுத்தோல் உறிக்கிறாங்கன்னு......

செம்மறி ஆடுகளின் ரோமத்தை மட்டும் ஷேவ் செய்வாங்க. கம்பளி செய்வதற்கு.

ஓமருக்குப் பக்கத்திலும் ஒரு பெங்குவின் காலனி இருக்கு

மாலைவேளைகளில் அவை கடலிலிருந்து நிலத்துக்குத் திரும்பும்போது பார்க்கலாம்.

முழுவிவரம் இங்கே:

http://thulasidhalam.blogspot.co.nz/2005/05/blog-post_11.html

Aravinthan said...

பிழையினை சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள்.பதிவில் திருத்திவிட்டேன். ஓமாரு பற்றிய தகவலுக்கு நன்றிகள்.