எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.Thursday, July 27, 2006

வனுவாட்டு(Vanuatu) சுற்றுலா - பகுதி2 - போட் விலா (Port Vila)

பிரயாண முகவரின் ஊடாக இன்னாட்டுப்பயணத்துக்கு செலுத்திய பணத்தில் விமானச்சீட்டுடன், விடுதி, காலை உணவு, விடுதியில் இருந்து இயந்திரம் இல்லாத படகுகளில் சவாரி (எத்தனை முறையும் செல்லலாம்),அரை நாள் சுற்றுலா வழிகாட்டி ஒருவர் துணையுடன் குளீருட்டப்பட்ட வாகனத்தில் போட்விழாவைச் சுற்றி வருவதற்கு இலவச அனுமதிச்சீட்டு ஆகியவையும் அடங்கும்.

தலை நகரம் போட் விலாவிலும் அருகில் உள்ள கிராமங்களிலும் தான் தார் வீதியினைக்காணக்கூடியதாக உள்ளது. மற்றைய பகுதிக்கு செல்லும் போது பள்ளங்கள் நிறைந்த வீதியினால் தான் செல்லவேண்டும். போட் விழாவில் தான் அரச அலுவலகங்கள், கட்டடங்களினைக் காணலாம். பாரளுமன்றம்,வைத்தியசாலை,வைப்பகம், சிறைச்சாலை, போட் விலாவில் உள்ள பெரிய விடுதிகள்,பிரதமர் வதிவிடம்,பல்கலைக்கழகம், நீதிமன்றம், ஊர்த்தலைவர்கள் சந்திக்கும் இடம்,சுதந்திரதினம் கொண்டாடும் இடம்,கள்ளுக்கொட்டில்(Kava),சந்தை,ஆடைத்தொழிற்சாலை உட்பட முக்கிய இடங்களினை காட்டி விளங்கப்படுத்தினார்கள்.

நான் சந்தித்த மக்களிடம் கதைக்கும் போது, சுதந்திரம் கிடைத்தபின்பு வனுவாட்டு அரசாங்கம் வரிகளினை வசூலிப்பதினால் மக்கள் பிரித்தானியர்,பிரேஞ்சு ஆட்சியின் கீழ் இருந்திருக்கலாமே என்று தெரிவித்தார்கள். போட் விலாவில் அதிகவரி என்பதினால் மக்கள் கிராமப்புறங்களில் தான் வசிக்கிறார்கள். இங்கு சுதந்திர தினத்தினை 2 கிழமைக்கு மைதானம் ஒன்றில் கொண்டாடுகிறார்கள். அரசியல் பிரமுகர்கள்,பெரியவர்கள், தலைவர்களிருந்து பார்க்கக்கூடிய அவ் மைதானத்தின் படம் தான் இது.
இன்னாட்டுப் பணத்தினை வற்று(Vatu) என்று அழைக்கப்படுகிறது. அவுஸ்திரெலியா 1 வெள்ளி கிட்டத்தட்ட 80 வற்று. பேருந்தில் செல்ல குறைந்த காசு 100 வற்று தேவைப்படுகிறது. இதனால் கிராமப்புற மக்கள் கால் நடையாகவே நடப்பது அதிகம்.போட் விழாவில் தான் பேருந்துக்களினைக்காணலாம். கமக்காரர்கள் சந்தையில் தங்களது தோட்டத்தில் விளைந்த காய்கறிகளினை விற்பதற்கு கால் நடையாகவே தூரக்கிராமங்களில் இருந்து இரவு இரவாக நடந்து போட்விலாவில் உள்ள சந்தைக்கு வருவதினால் அச்சந்தை திங்கள் முதல் சனி வரை 24 மணி நேரமும் திறந்திருக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் சந்தை திறப்பதில்லை.

வனுவாட்டு மக்கள் அங்கே தயாரிக்கும் குடிவகையான கவா(Kava) வினையே அருந்துகிறார்கள். 10 வீதத்துக்கு குறைவானவர்களே வெளினாட்டு குடிவகைகளினை அருந்துவது வழக்கம். மற்றைய தென்பசுபிக் நாடுகளில் தயாரிக்கப்படும் கவா வினை விட வனுவாட்டு கவா வித்தியாசமானது. உடனடியாகக்குடிக்கவேண்டும். 2 சட்டிக்கு மேல் குடித்தால் குடிப்பவர்கள் இருந்த இடத்தில் அசையாமல் இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டு மறுனாள் தான் பழைய நிலைக்கு வரமுடியும். கவா அங்கு வளரும் தாவரம் ஒன்றின் வேரினைக் காச்சி அதில் கிடைக்கும் சாற்றினால் தான் தயாரிக்கப்படுகிறது. படத்தில் உள்ள கொட்டிலில் இருந்து மக்கள் கவாவினை அருந்துவார்கள்.இங்குள்ள மக்கள் பொதுவாக நேர்மையானவர்கள் என்று சொல்லப்படுகிறது. பெரிய கொலை,கொள்ளை, கற்பழிப்புச்சம்பவங்கள் இங்கே காணமுடியாது. இதனால் சிறு குற்றங்கள் செய்த குற்றவாளிகளையே சிறைச்சாலையில் காணலாம். குற்றவாளிகள் தங்கள் உறவினர்கள், நண்பர்களினைச் சந்திக்க சிறைச்சாலையின் இரும்புப் படலைக்கு உட்புரமாக நின்று, படலைக்கு மறு புரத்தில் வீதியில் நிற்கும் அவர்களுக்கு தெரிந்தவர்களோடு கதைப்பார்கள். அருகில் ஒரு காவலாலியையும் காணமுடியாது. படலையின் மேல் ஏறி தப்பிவிடக்கூடியதாக வசதி இருந்தாலும் அவர்கள் தப்புவதில்லை. ஒரு, இருவர் தப்பியதாகவும், பிறகு பிடிபட்டதாகவும் அங்கு சொன்னார்கள். முன்னால் பிரதம மந்திரி Barak Sope ஊழல் குற்றம் ஒன்றில் ஈடுபட்டதாக 2001ல் குற்றம் சாட்டப்பட்டு 3 வருடம் சிறைத்தண்டனை அடைந்து 2004ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று தற்பொழுது வெளிவிகார அமைச்சர் பதவி வகிக்கிறார்.

பிரித்தானிய,பிரெஞ்சு ஆட்சிக்காலத்தில் இங்கு ஆங்கிலம், பிரெஞ்சு மொழிக்கென இரு வேறு பல்கலைக் கழகங்கள் இருந்தன. சுதந்திரம் அடைந்தபின்பு பிரித்தானியர்களினால் நடாத்தப்பட்ட ஆங்கிலப்பல்கலைக்கழகத்திலே ஆங்கிலத்துடன் பிரெஞ்சு மொழி பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன. தற்பொழுது உயர் நீதிமன்றமாக விளங்கும் முன்னால் பிரெஞ்சு பல்கலைக்கழகத்தின் படம்.


எல்லாவைப்பகமும் Reserve Bank Of vanuatu மேற்பார்வையின் கீழ் தான் நடைபெறுகிறது. அவுஸ்திரெலியா வைப்பகமான Westpac, ANZ banksம் இங்குள்ளது. அரசவைப்பகமாக The National Bank of Vanuatu உள்ளது. மற்றைய வைப்பகங்களினைப்போல European Bank Limited மக்களுக்கு சேவை செய்வதில்லை. ஆனால் பெரிய பணக்காரர்களுக்கும், நிறுவனங்களுக்கும் உதவிசெய்கிறது.


ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு தலைவர் உண்டு. அக்கிரமத்துத்தலைவர் ஆழமரத்தின் கீழ் இருந்து தனது தீர்ப்பினை வழங்குவார். அத்தலைவர்கள் எல்லோரும் மாதமொருமுறை சந்திப்பார்கள். அவர்கள் சந்திக்கும் இடத்தின் படம்.


26 யூலை 93ல் ஆரம்பிக்கப்பட்ட பாராளுமன்றம் கட்டுவதற்கு, திருத்தம் செய்வதற்கு சீனா அரசாங்கம் பெருமளவு நிதி வழங்கி உதவி செய்கிறது.


வைத்தியசாலை


ஆடைத் தொழிற்ச்சாலை(T-shirt factory). ஆடைகள் எவ்வாறு செய்வதினையும் இங்கே விளக்கம் தந்தார்கள்.


அமெரிக்கா ஜனாதிபதிகள் வெள்ளைமாளிகையிலும், பிரித்தானியாப்பிரதமர்கள் 10,Downing Streetலும் வசிப்பது போல வனுவாட்டு பிரதமர்கள் வசிக்கும் இடத்தின் படம் இது.


1ம் உலகப்போரின் போது வனு-அற்றுவில் தளம் அமைத்த அமெரிக்காப்படைகளுக்கு உதவச்சென்று மரணம் அடைந்த அவுஸ்திரெலியா, நியூசிலாந்து போர்வீரர்களின் நினைவாகக் கட்டப்பட்ட தூபி. இத்தூபி Reserve Bank Of vanuatu முன்னால் இருக்கிறது. அடுத்த வீதியில் தான் வனு-அற்று பிரதமரின் வீடும் அமைந்துள்ளது.
பிரித்தானியா இல்வேட்டில்(Ilford) நீயூபெரிப் பாக்(Newbury park) பகுதியில் கொமன்வெல்த் நாடுகளின் நகரங்களில் உள்ள பெயர்களினை (Adelaide Road,Melbourne Road,Christchurch Road,Colombo Road, Toronto Road)வீதிகளில் காணலாம். அதே மாதிரி போட்விலாவின் நகரப்பகுதியில் பிரித்தானியா, பிரென்சு வீதிகளின் பெயர்களினைக்காணலாம். Cornwall Street,Elizabeth Street, Rue de Paris.

1 comment:

Unknown said...

நல்ல கட்டுரை. மார்ஷல் தீவு-
மஜூரோ( மதுரை.!!??) ,நவுறு
( நகர்..!!)குறித்து செய்திகள் உண்டா.?